Published:Updated:

`தாயைக் காண, வேலையை விட்டுவிட்டு நாடு திரும்பினேன்.. ஆனால்..!’ -கட்டாய க்வாரன்டீனில் கதறி அழுத மகன்

கொரோனா
கொரோனா

``நாங்கள் வைரஸுடன் வாழ கற்றுக்கொள்கிறோம். ஆனால், உணர்வு ரீதியாக ஏற்படும் இழப்புகள் எப்போதும் எங்களுடன் இருக்கும்.”

உலகளவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியாமல் பல நாடுகளும் திணறி வருகின்றன. வைரஸைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால், மனிதர்கள் தங்களது அன்புக்கு உரியவர்களைகூட சந்திக்க முடியாமல் தவித்து வருகின்றனர். கொரோனா பரவலைத் தடுக்க அரசு எடுத்துள்ள சில நடவடிக்கைகளால் தங்களின் தாய், தந்தை, மகன் என ரத்த சொந்தம் உள்ளவர்களின் மரணத்துக்குக்கூட செல்ல முடியாத துயரங்கள் எல்லாம் பல இடங்களில் அரங்கேறி வருகிறது. அவர்களின் கதைகள் ஒவ்வொன்றும் மனதை உருக்குலைக்க வைக்கும் ஒன்றாக இருக்கிறது. அப்படியான, மனதைக் கவலைக்கு உள்ளாக்கும் அமீர் கான் என்ற இளைஞரின் கதைதான் இது.

கொரோனா
கொரோனா

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ராம்பூர் எனும் பகுதியைச் சேர்ந்தவர் அமீர்கான். இவர் துபாயில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். தன் தாயின் உடல்நிலை மிகவும் மோசமானதாக அறிந்த செய்தியைக் கேட்ட அமீர் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்குத் திரும்பியுள்ளார். இந்தியாவுக்கு வந்தவுடன் அவரால் தன் தாயை உடனடியாக காண முடியவில்லை. கடந்த மே 13-ம் தேதி டெல்லிக்கு வந்த அமீர் கான், 14 நாள்கள் தனிமை முகாமில் இருக்கத் தொடங்கியுள்ளார். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை தன் தாய் இறந்த செய்தியைக் கேட்டு அமீர் தனிமை முகாமிலேயே கதறி அழுதுள்ளார். தாயின் இறுதிச் சடங்கில்கூட அவரால் கலந்துகொள்ள முடியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசானது வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கட்டாயமாக 14 நாள்கள் தனிமை முகாமில் இருக்க வேண்டும் எனக் கூறியிருந்தது. பின்னர் அந்த விதியை மாற்றம் செய்து, 7 நாள்கள் தனிமை முகாமில் இருக்க வேண்டும் என்றும் தொடர்ந்து காய்ச்சல், சளி போன்ற வைரஸ் தொற்று அறிகுறிகள் இல்லாமல் இருந்தால் மீதமுள்ள 7 நாள்கள் வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும் என்றும் கூறியது. சில நபர்களுக்கு 14 நாள்களும் வீட்டில் தனிமைப்படுத்த அனுமதி அளிக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. மனதளவில் பாதிப்படைந்தவர்கள், கர்ப்பிணிகள், கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், குடும்பத்தில் மரணம் ஏற்பட்டதால் வந்தவர்கள் ஆகியோருக்கு சிறப்புச் சலுகைகள் அளிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இந்தத் திருத்திய வழிகாட்டுதல்களை அமீர் சுட்டிக் காட்டிய பிறகும் அதிகாரிகள் அவரை விடவில்லை எனத் தெரிகிறது.

`மகன் இறந்துவிட்டதாகக் கூறினார்!’ -புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் புகைப்படம் எடுத்தவரின் கள அனுபவம்

இதுதொடர்பாக பி.டி.ஐ ஊடகத்திடம் வேதனையுடன் பேசிய அமீர் கான், ``என் அம்மா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கல்லீரல் நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். எனவே, கடந்த மார்ச் மாதமே அவருடன் வந்து தங்க வேண்டும் என நான் திட்டமிட்டிருந்தேன். ஆனால், வைரஸ் தொடர்பான கட்டுப்பாடுகளால் காத்திருந்தேன். இந்தியா வருவதற்கு இரண்டு மாதங்கள் கடுமையாகப் போராடினேன். தூதரகத்துக்கு பலமுறை அலைந்தேன். கடைசியில், மே 13 அன்று விமானத்தில் பயணிக்க அனுமதி கிடைத்தது. வந்தவுடன் தனியார் ஹோட்டல் ஒன்றில் தனிமையில் இருக்க அதிகாரிகள் அனுப்பினர். சரியாக எட்டாவது நாள் என்னுடைய அம்மாவைச் சந்திக்க செல்ல வேண்டும் என அதிகாரிகளிடம் தெரிவித்தேன். அதற்கு, சிறப்பு அனுமதி பெற வேண்டும் என அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர்” என்றார்.

`இப்படியே சில நாள்கள் சென்றுகொண்டிருந்தன’ என தொடர்ந்து பேசிய அமீர் கான், ``என் அம்மா இறந்துவிட்டதாக கடைசியில் எனக்குத் தகவல் வந்தது. இறுதிச் சடங்குக்கு அனுமதிக்குமாறு அதிகாரிகளிடம் கெஞ்சினேன். ஆனால், அதற்கும் அவர்கள் என்னை அனுமதிக்கவில்லை. வழிகாட்டுதல்கள் குறித்து அவர்களிடம் தெரிவித்தேன். `எல்லாவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நான் எடுப்பேன். பரிசோதனை செய்யவும் நான் தயாராக இருக்கிறேன்’ என்றுகூட கூறினேன். ஆனால், எனக்குச் சாதாகமாக எதுவுமே அங்கு நடக்கவில்லை” என்று கவலையுடன் தெரிவித்தார்.

விமானம்
விமானம்

இந்தியாவுக்கு வர தூதரகங்களுக்கு அலைந்து அனுமதிச் சீட்டு பெற்ற பிறகு அவர் பணிபுரியும் அலுவலகத்தில் வெறும் 20 நாள்கள் மட்டுமே விடுமுறை எடுக்க அனுமதி அளிக்கப்பட்டதாக அமீர் தெரிவித்தார். ``அவர்களுடைய பதில் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. தனிமை முகாமில் 14 நாள்கள் இருக்க வேண்டும் என கூறினேன். எனவே, எனக்கு அதிகமாக நேரம் தேவைப்படும் என தெரிவித்தேன். விமானங்கள் எப்போது மீண்டும் இயங்கும் என்பது தெரியாது என்றும் கூறினேன். இதை அவர்கள் பொருட்படுத்தவில்லை. தாயுடன் சில மாதங்கள் செலவழிக்க வேண்டும் என்பதால் என்னுடைய வேலையை விட்டு விலக முடிவு செய்தேன்” என்றார்.

மேலும், ``நாங்கள் வைரஸுடன் வாழ கற்றுக்கொள்கிறோம். ஆனால், உணர்வு ரீதியாக ஏற்படும் இழப்புகள் எப்போதும் எங்களுடன் இருக்கும். என் அம்மாவை சந்திக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் கடந்த இரண்டு மாதங்களாகப் போராடினேன். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என உறுதியாக இருந்தேன்” என்று தெரிவித்தார். எனினும், அவரால் இறுதி நேரத்தில் தன் தாயை சந்திக்கக்கூட முடியவில்லை என்பதை நினைத்து மிகவும் கவலையுடன் பேசியுள்ளார்.

வுகான் நகரில் 250-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள்...சீனாவுக்கு விரையும்  ஏர் இந்திய விமானம்!
அடுத்த கட்டுரைக்கு