குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர் மகாவீர் சிங். இவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரீன்லபா என்ற பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இரு குடும்பத்தினரும் சேர்ந்து திருமண தேதியை முடிவு செய்தனர்.
ஆனால் துரதிஷ்டவசமாக கடந்த 6 மாதத்திற்கு முன்பு ரீன்பலா தனது தோழிகளுடன் மரத்திற்கு கீழே விளையாடிக்கொண்டிருந்த போது மரம் ஒடிந்து விழுந்ததில் ரீன்பலா இடுப்புக்கு கீழே பலத்த காயம் ஏற்பட்டது. அவரால் நடக்க முடியவில்லை. இதனால் திருமணம் என்னவாகுமோ என்று ரீன்பலா குடும்பத்தினர் கலக்கம் அடைந்தனர். அவர்கள் எதிர்பார்த்தது போல் மகாவீர் குடும்பத்தினர் இத்திருமணத்தை நடத்த முடியாது என்று தெரிவித்தனர்.

இதையடுத்து இரு குடும்பத்தினரும் சேர்ந்து இத்திருமணத்தை ரத்து செய்வது என்று முடிவு செய்தனர். ஆனால் திருமணத்தை ரத்து செய்த பிறகுதான் மகாவீருக்கு ரீன்பலா மீது காதல் வந்தது. கடந்த அக்டோபர் 31ம் தேதி தனது தனது பிறந்தநாளன்று காதலை ரீன்பலாவிடம் தெரிவித்தார். அதோடு அவரையே திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தெரிவித்தார்.
இதற்கு மகாவீர் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் மகாவீர் தனது முடிவில் உறுதியாக இருந்தார். இதையடுத்து இருவருக்கும் அகமதாபாத்தில் திருமணம் நடந்தது. இத்திருமணத்தின் போது இந்து முறைப்படி மணமக்கள் அக்னியை சுற்றி வரவேண்டும். ஆனால் ரீன்பலாவால் நடக்க முடியவில்லை. இதனால் மகாவீர் தனது காதல் மனைவி ரீன்பலாவை கையில் தூக்கிக்கொண்டு அக்னியை சுற்றி வலம் வந்தார். இந்த சம்பவம் பார்ப்போர் அனைவரையும் கண்கலங்க செய்தது.