Published:Updated:

`விளையாட்டுச் சண்டையா... கோயிலுக்குள் நுழைந்த கோபமா?'- உ.பி பட்டியலின இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்

மாதிரிப் படம்
மாதிரிப் படம்

``விகாஸின் சாதியை அடையாளம் காட்டி மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞரான ஹோராம் சவுகான் என்பவர் உள்ளிட்ட சிலர் அவன் கோயிலுக்குள் நுழைவதைத் தடுக்க முயன்றனர்”

உலகின் பல நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவி மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து வைரஸால் பாதிப்பைச் சந்தித்து வரும் நாடுகள் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன. பாதிப்பிலிருந்து மீண்டு வந்த நாடுகள், இரண்டாம் அலை உருவாகாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையிலும் பல நாடுகளில் சாதி, மதம் மற்றும் இனம் தொடர்பாக சில மக்கள் ஒடுக்கப்படுவதும் கொல்லப்படுவதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. குறிப்பாக, இந்தியாவில் சாதிரீதியிலான ஒடுக்குமுறைகள் நடந்துகொண்டு இருக்கின்றன. இதற்கு, உத்தரப் பிரதேசத்தில் தற்போது நடந்துள்ள சம்பவம் மற்றொரு சான்றாக அமைந்துள்ளது எனலாம்.

துப்பாக்கி சூடு
துப்பாக்கி சூடு

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அம்ரோஹா எனும் மாவட்டத்தில் தோம்கேரா எனும் கிராமம் உள்ளது. இந்தப் பகுதி லக்னோவிலிருந்து சுமார் 400 கி.மீ தொலைவில் உள்ளது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த விகாஸ் குமார் என்ற 17 வயதான இளைஞர் ஒருவர் கடந்த ஜூன் 1-ம் தேதி அம்மாவட்டத்தில் உள்ள கோயில் ஒன்றுக்குச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், விகாஸ் கோயிலுக்குச் சென்று வழிபட அப்பகுதியில் உள்ள மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதை மீறி அவர் கோயிலுக்குச் சென்றுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மாற்று சமூகத்தினர் ஐந்து நாள்களுக்குப் பிறகு விகாஸை சுட்டுக் கொன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

`கைது செய்யக்கூடாது, பாதுகாப்பு அளிக்க வேண்டும்!'- சாதி மறுப்பு திருமண வழக்கில் கடுகடுத்த நீதிமன்றம்

இதுதொடர்பாக, இளைஞரின் தந்தை ஓம் பிரகாஷ் செய்தியாளர்களிடம் பேசும்போது, ``விகாஸின் சாதியை அடையாளம் காட்டி மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞரான ஹோராம் சவுகான் என்பவர் உள்ளிட்ட சிலர் அவன் கோயிலுக்குள் நுழைவதைத் தடுக்க முயன்றனர். ஆனால், விகாஸ் அவர்களை மீறி கோயிலுக்குள் நுழைந்து வழிபட்டுள்ளான். கோயிலில் இருந்து அவன் வெளியே வரும்போது மாற்று சமூகத்தைச் சேர்ந்த சிலர் அவனைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவம் நடந்த பின்னர் நாங்கள் காவல்துறையினரிடம் புகார் அளிக்கச் சென்றோம். ஆனால், காவலர்கள் வழக்கு பதிவு செய்ய மறுத்துவிட்டனர்” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ``ஹோராமும் அவரின் குடும்பத்தைச் சேர்ந்த சில இளைஞர்களும் சேர்ந்து கடந்த சனிக்கிழமை இரவு எங்களுடைய வீட்டுக்கு வந்து விகாஸை வெளியே இழுத்துச் சென்றனர். அவர்களில் ஒருவர் கையில் இருந்த துப்பாக்கியால் அவனைச் சுட்டார். பின்னர், அங்கிருந்து அனைவரும் ஓடிவிட்டனர். கிராமத்தில் உள்ள கோயிலில் பட்டியலின பிரிவைச் சேர்ந்த ஒருவர் வழிபடுவது இது முதன்முறை அல்ல” என்று தெரிவித்துள்ளார்.

கொலை
கொலை

ஓம் பிரகாஷின் குற்றச்சாட்டுகளை உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக அப்பகுதியின் காவல்துறை அதிகாரி நீரஜ் குமார் பேசும்போது, ``எங்களுடைய விசாரணையின்படி கொலை செய்யப்பட்ட இளைஞர், கொலை செய்தவர் மற்றும் சில இளைஞர்கள் இணைந்து ஏழு நாள்களுக்கு முன்பு அப்பகுதியில் விளையாடியுள்ளனர். விளையாட்டின்போது அவர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. ஹோராம் என்ற 18 வயது இளைஞன் இந்தச் சண்டை நடந்த பிறகு வீடு திரும்பவில்லை. கடந்த சனிக்கிழமை நேரடியாக விகாஸின் வீட்டுக்குச் சென்று தூங்கிக்கொண்டிருந்த அவரை சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்” என்று கூறியுள்ளார்.

அம்ரோஹா மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளர் விபின் தடா இதுகுறித்து பேசும்போது, ``இறந்த இளைஞரின் தந்தையின் புகாரின் அடிப்படையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணைகளை நடத்தி வருகிறோம்” என்று கூறியுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கொலை மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.

`சாதி மறுப்புத் திருமண உதவித் தொகை!' - சு.வெங்கடேசன் எம்.பி-யின் கேள்வியும் அமைச்சரின் பதிலும்
அடுத்த கட்டுரைக்கு