Published:Updated:

`கோதுமை மாவுக்குள் ரூ.15,000 பணம்!’ - அமீர்கானின் அமைதியும் வைரலாகும் வீடியோவும்

அமீர்கான்
அமீர்கான்

நடிகர் அமீர்கான் தரப்பிலும் இதற்கான எந்த விளக்கமும் இதுவரை தரப்படவில்லை; மறுப்பும் தெரிவிக்கவில்லை. அமீர்கானின் ரசிகர்கள் பயன்படுத்தும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவி வருவதால் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் ஏழைகள் பலரும் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளனர். இவர்களுக்கு முன்னணி நடிகர் உட்பட பலரும் உதவிகளைச் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு கோதுமை மாவு பாக்கெட்டுக்குள் ஆயிரக்கணக்கான ரூபாயை வைத்து ஏழைகளுக்கு வழங்குவது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. தொடர்ந்து அதிகளவில் பகிரப்பட்டும் வருகிறது. இதனை பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அமீர்கான் வழங்கினார் என்றும் கூறப்படுகிறது.

தனது குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட்டு வரும் அமீர்கான் சில நாள்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிராகப் போராடும் சுகாதாரப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார். அதையடுத்து, இந்த வீடியோ பரவி வருவதாகக் கூறப்படுகிறது. தனித்துவமான வழியில் ஏழைகளுக்கு உதவி செய்வதற்காகவே இந்த வழிமுறையைக் கையாண்டார் என்றும் தகவல்கள் உலாவுகின்றன.

டிக்டாக்கில் வெளியான இந்த வீடியோவில், ``ஊரடங்கு தொடர்பான நெருக்கடிக்கு மத்தியில் ஏழைகளுக்கு உதவி செய்யும் வகையில் கோதுமை மாவு பாக்கெட்டுகள் நிறைந்த லாரி ஒன்றை அமீர்கான் அனுப்பியுள்ளார். பெரிதாக இந்தக் கோதுமை பாக்கெட்டுகள் பயன்படாது என்பதால் பலரும் இதனை வாங்க மறுத்துள்ளனர். ஆனால், ஏழைகள் பலரும் இதனை வாங்கிச் சென்றனர். பாக்கெட்டுகளைப் பிரிக்கும்போது அவர்களுக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. மாவுக்குள் ரூ.15,000 மறைக்கப்பட்டிருந்தது” எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், இதன்பின்னால் அமீர்கான் இருப்பதாகவும் ஏழை மக்களுக்குப் பணம் சரியாகச் சென்றடைந்ததாகவும் வீடியோவில் பேசியவர் குறிப்பிட்டார். ஏனெனில், ஏழைகள் மட்டுமே ஒரு கிலோ மாவுக்காக வரிசையில் நிற்பார்கள் என்றும் அதில் கூறியுள்ளார். ஆனால், இந்த வீடியோ தொடர்பான உண்மை நிலவரங்கள் எதுவும் தெரியவில்லை என்றே குறிப்பிடப்படுகிறது.

நடிகர் அமீர்கான் தரப்பிலும் இதற்கான எந்த விளக்கமும் இதுவரை தரப்படவில்லை. மறுப்பும் தெரிவிக்கவில்லை. அமீர்கானின் ரசிகர்கள் பயன்படுத்தும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு