Published:Updated:

`ஜாமியா தாக்குதலில் பார்வையிழந்த மாணவருக்கு நிதியுதவி, நிரந்தரப்பணி!’ - ஆம்ஆத்மி எம்.எல்.ஏ அறிவிப்பு

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் அமானதுல்லா கான், ஜாமியா மாணவர் மின்ஹாஜுதினுக்கு உதவித் தொகையும் வக்பு வாரியத்தில் நிரந்தப் பணியும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

அமானதுல்லா கான், மின்ஹாஜுதின்
அமானதுல்லா கான், மின்ஹாஜுதின் ( Twitter )

குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராகப் போராடிய ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் மாணவர்கள் பலரும் பலத்த காயமடைந்தனர். மாணவர்களின் மீதான இந்தத் தாக்குதலுக்கு நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்தன. காவல்துறையினரின் இந்தக் தாக்குதலில், ஜாமியா பல்கலைக்கழகத்தில் சட்ட மேற்படிப்பு படித்து வந்த மின்ஹாஜுதின் என்ற மாணவர் தனது இடது கண் பார்வையை இழந்துள்ளதாக மருத்துவர்கள் கூறினர்.

மின்ஹஜுதின்
மின்ஹஜுதின்

தாக்கப்பட்டது தொடர்பாக மாணவர் மின்ஹாஜுதின், ``போராட்டம் நடைபெற்ற அன்று, நூலகத்தில் படித்துக் கொண்டிருந்தேன். திடீரென்று பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்த 20-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் நூலகத்தில் இருந்த எங்கள் மீது தாக்குதல் நடத்தினர். காயமடைந்த என்னை மாணவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்” என்று ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக மாணவர் பேசியிருந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது.

டெல்லி, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரும் டெல்லி வக்பு வாரியத் தலைவருமான அமானதுல்லா கான், ``காவல்துறையினரின் தாக்குதலில் பாதிக்கப்பட்டு பார்வையிழந்த ஜாமியா பல்கலைக்கழக மாணவர் மின்ஹாஜுதினின் சிகிச்சைக்காக 5 லட்சம் ரூபாயும் டெல்லி வக்பு வாரியத்தில் பணியும் வழங்கப்படும்” என அறிவித்துள்ளார்.

அமானதுல்லா கான்
அமானதுல்லா கான்

இந்நிலையில், அமானதுல்லா கான், பாதிக்கப்பட்ட மாணவர் மின்ஹாஜுதினை நேரில் சந்தித்து உதவித் தொகைக்கான காசோலையையும் பணிக்கான நியமனத்தையும் வழங்க உள்ளார். குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக மாணவர்கள் தொடர்ந்து போராடிவருவதும் கவனிக்கத்தக்கது.