Published:Updated:

`அபிநந்தன் சிக்கியதற்குக் காரணமே தகவல் தொடர்பு சாதனங்கள்தான்!' - பின்னணியை விவரிக்கும் அதிகாரிகள்

இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கப்படவுள்ளது.

அபிநந்தன்
அபிநந்தன்

ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி நடந்த தீவிரவாதிகளின் தற்கொலைப் படை தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடி கொடுக்கும்விதமாக, பிப்ரவரி 26-ம் தேதி இந்திய விமானப்படை, பாகிஸ்தானின் பால்கோட் பகுதிக்குள் நுழைந்து அங்கிருந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.

புல்வாமா தாக்குதல்
புல்வாமா தாக்குதல்

இதையடுத்து பிப்ரவரி 27-ம் தேதி இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானப்படையின் F16 போர் விமானம் அத்துமீறி நுழைந்தது. இதை இந்திய வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். அப்போது நடந்த சண்டையில் இந்திய விமானப்படையின் மிக்-21 ரக விமானம் பாகிஸ்தான் பகுதியின் எல்லையோரக கிராமத்தில் கீழே விழுந்துள்ளது. அதிலிருந்த விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்து பின்னர் விடுவித்தது.

இந்தச் சம்பவங்கள் நடந்து ஆறு மாதங்கள் கடந்த நிலையில் தற்போது விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் சிக்கிக்கொண்டதற்கான முக்கிய காரணம் வெளியாகியுள்ளது. மிக்-21 விமானத்தில் உள்ள பழைய தகவல் தொடர்பு சாதனமே அபிநந்தன் பாகிஸ்தானில் சிக்கக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபினந்தன்
அபினந்தன்

இதுகுறித்து இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்திடம் பேசியிருக்கிறார் இந்திய விமானப்படை அதிகாரி ஒருவர். அவர் பேசும்போது, ``இந்திய விமானத்தில் குறைபாடுகள் இல்லையென்றால் நாம் அபிந்தனை பாகிஸ்தானிடம் சிக்க வைத்திருக்க மாட்டோம். பாகிஸ்தானின் F16 ரக விமானத்தைத் தாக்கி வீழ்த்தும்போது அபிநந்தனின் விமானத்திலிருந்த தகவல் தொடர்புச் சாதனம் பாகிஸ்தான் ராணுவத்தினரால் துண்டிக்கப்பட்டுள்ளது.

விமானத்தை வீழ்த்திய பிறகு, மீண்டும் இந்தியா திரும்புவது போன்ற எந்தக் கட்டளைகளும் இந்தியத் தரப்பிலிருந்து அவருக்குத் தரப்படவில்லை. அதனால் அபிநந்தன் பாகிஸ்தான் பகுதியிலேயே சுற்றிக்கொண்டிருக்கும்போது, அவர்களிடம் சிக்கியுள்ளார். அபிநந்தன் இருந்த மிக்-21 விமானத்தில் ஆன்டி ஜாமிங் (anti-jamming) இருந்திருந்தால் இந்திய அதிகாரிகளின் கட்டளைப்படி விமானத்தை வீழ்த்திய பிறகு, இந்தியா திரும்பியிருப்பார். பாகிஸ்தான் ராணுவத்திடம் அபிநந்தன் சிக்காமல் தப்பியிருப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.

மிக் 21 ரக விமானம்
மிக் 21 ரக விமானம்

பால்கோட் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் விமானங்களை விரட்டியடிக்க இந்திய விமானப்படையின் சில விமானங்கள் சென்றன. ஒருகட்டத்தில் அனைத்து விமானங்களும் மீண்டும் இந்தியா திரும்பும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தத் தகவல் அபிநந்தனை அடையாததால் அவர் தொடர்ந்து பாகிஸ்தான் விமானத்தை விரட்டியடிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

Vikatan

விமானப்படைக்கு மேம்படுத்தப்பட்ட மற்றும் சிறந்த தகவல் தொடர்புச் சாதனங்கள் தேவை என 2005-ம் ஆண்டு முதன்முதலாகக் கோரிக்கை வைக்கப்பட்டது. தகவல் தொடர்பு சாதனங்கள்தான் ஒவ்வொரு வீரருக்கும் மிக முக்கியமான ஒன்று. 2008-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரையில் புதிய தகவல் தொழில்நுட்பம் தொடர்பான சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

அபினந்தன்
அபினந்தன்

``மேம்படுத்தப்பட்ட சாதனங்களின் குறைபாடுகளே இந்திய விமானப்படைக்குப் பெரும் பின்னடைவாக உள்ளது. நமது தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் அனைத்தும் பழைமையானவை. எந்தக் காலதாமதமும் இல்லாமல் பழைய தொழில்நுட்ப சாதனங்களை மாற்றியமைக்க வேண்டும்” என ஏர் வைஸ்-மார்ஷல் சுனில் ஜெய்வந்த் கூறியுள்ளார்.

News Credits : HindustanTimes