Published:Updated:

ஏசிபிக்கு கொரோனா... தனிமைப்படுத்தப்பட்ட 5 பேர்.. அதிர்ச்சியில் ராஷ்டிரபதி பவன்!

ராஷ்டிரபதி பவன்
ராஷ்டிரபதி பவன்

கொரோனா தொற்றுக்கு உள்ளான, ஏ.சி.பி-யின் அலுவலகம் ராஷ்டிரபதி பவனின் பிரதான கட்டடத்தில் இருக்கிறது என்றாலும், ​​அது ஜனாதிபதியின் செயலகத்திலிருந்து விலகியே இருக்கிறது.

கண்ணுக்கே தெரியாத கொரோனா வைரஸ் மொத்த உலகத்தையும் பாடாய்ப் படுத்திக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், நாளை முதல் இந்தியா நான்காம் கட்ட ஊரடங்கில் நுழையவுள்ளது. மார்ச் 25-ம் தேதி முதல் தற்போது வரை மூன்று கட்டங்களாக சுமார் 50-க்கும் மேற்பட்ட நாள்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஆனால், நான்காம் கட்ட ஊரடங்கு முன்னர் இருந்ததைப்போல் இல்லாமல் மாறுபட்டதாக இருக்கும் என சமீபத்தில் நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் மோடி கூறியிருந்தார்.

ராஷ்டிரபதி பவன்
ராஷ்டிரபதி பவன்

அதன்படி பல்வேறு விதிமுறைகளுடன் கூடிய நான்காம் கட்ட ஊரடங்கு இன்று முதல் அமலாகியுள்ளது. இந்த நிலையில், ஜனாதிபதி அலுவலகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதி மாளிகையான ராஷ்டிரபதி பவனில் பணியில் இருந்த உதவி போலீஸ் கமிஷனர் ஒருவருக்குதான் கொரோனா உறுதியாகியுள்ளது. இதையடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 58 வயதான இந்தக் கமிஷனருடன் பணிபுரிந்த மற்ற ஐந்து பேர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கிழக்கு டெல்லியின் கர்கார்டூமாவில் உள்ள ஓர் அரசு வீட்டுவசதி காலனியில் ஏசிபி வசித்து வருகிறார், மேலும், தினமும் ராஷ்டிரபதி பவனுக்குச் சென்று வருவார் என்பதால் அந்தப் பகுதிகள் தற்போது கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது.

2.5 கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியின் குடியிருப்பு மற்றும் அலுவலகம், ஓர் அருங்காட்சியக வளாகம் மற்றும் புகழ்பெற்ற தோட்டங்கள் (முகலாய தோட்டம், மூலிகை தோட்டம், இசை தோட்டம் மற்றும் ஆன்மிக தோட்டம் ஆகியவை அடங்கும்) ஆகியவற்றுடன் ஊழியர்களுக்கு தங்குமிடமும் உள்ளது. இதில் கொரோனா தொற்றுக்கு உள்ளான, ஏ.சி.பி-யின் அலுவலகம் ராஷ்டிரபதி பவனின் பிரதான கட்டடத்தில் இருக்கிறது என்றாலும், ​​அது ஜனாதிபதியின் செயலகத்திலிருந்து விலகியே இருக்கிறது.

ராஷ்டிரபதி பவன்
ராஷ்டிரபதி பவன்

எனினும் ஜனாதிபதி அலுவலக அதிகாரிகள் வெளியே வந்து அவருடன் பேசியிருக்கலாம் என்பதால் அப்பகுதி முழுவதுமே கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கமிஷனருக்கு எப்படி கொரோனா தொற்று வந்ததது என்ற டிராக் ஹிஸ்டரியையும் அதிகாரிகள் தேடி வருகின்றனர். கடந்த மாதம், ராஷ்டிரபதி பவனின் தூய்மைப் பணியாளர் ஒருவரின் தாயார் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். இதையடுத்து, ராஷ்டிரபதி பவனின் பணியாளர்களான 115 பேரின் குடும்பங்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு