Published:Updated:

"132 கிராமங்களில் பெண் குழந்தையே பிறக்கவில்லை..!" உத்தரகாண்ட்டில் அதிர வைக்கும் ஆய்வு

பெண் குழந்தை

'பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவது ஆபத்தானது' தேவநேயன்

"132 கிராமங்களில் பெண் குழந்தையே பிறக்கவில்லை..!" உத்தரகாண்ட்டில் அதிர வைக்கும் ஆய்வு

'பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவது ஆபத்தானது' தேவநேயன்

Published:Updated:
பெண் குழந்தை

அரங்கக் கூட்டம் ஒன்றில் பேச்சாளர் ஒருவர் பேசும்போது, 'ஆணுக்குப் பெண் சரிநிகர்' என்று குறிப்பிட்டார். பார்வையாளராக இருந்த பெண், 'ஒரு நிமிடம் ..' என இடைமறித்து, 'பெண்ணுக்கான அளவுகோலாகத் தீர்மானிப்பதும் ஓர் ஆணைத்தானா?' எனக் கேட்டார். பேச்சாளர், 'சரியான பார்வைதான்... ஆணும் பெண்ணும் சமம்' என்று மாற்றினார். அப்போதும் அந்தப் பெண் விடாமல், 'இப்படிச் சொல்வதிலும் ஆணைத்தான் முதலாவதாக வைப்பீர்களா?' என்றார். பேச்சாளர், 'பெண்ணும் ஆணும் சமம்' என்று திருத்தியதும்தான், அந்தப் பெண் சமாதானமாகி அமர்ந்தார்.

பெண் குழந்தை
பெண் குழந்தை

'பெண்ணும் ஆணும் சமம்' என்பதை மொழியிலும் நுட்பமாகத் திருத்தும் பெண்கள் நிலை ஒருபுறம் . ஆனால், பெண் குழந்தைகள் வேண்டாம் எனும் முடிவுக்கு 132 கிராமங்கள் வந்திருக்கின்றன என்றால் அதிர்ச்சியாக இருக்கிறதா? ஆமாம். உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்திரகாசி மாவட்டத்தில் நடந்த ஆய்வில் இந்த உண்மை வெளிப்பட்டிருக்கிறது. இந்த மாவட்டத்துக்கு உட்பட்ட 132 கிராமங்களில், கடந்த மூன்று மாதங்களில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 216. ஆனால், அவற்றில் ஒரு பெண் குழந்தை கூட இல்லை. இது இயல்பாக நடந்திருக்கும் என்று ஒருவராலும் நம்ப முடியாது. அந்த மாவட்ட ஆட்சியர், ``இந்தக் கிராமங்களில் பெண் குழந்தையைக் கருவிலேயே அழிப்பது நடக்கிறதா என்பது தீவிரமாகக் கண்காணிக்கப்படும்' என்று சொல்லியிருக்கிறார். அங்குள்ள சமூக ஆர்வலர்கள் இது குறித்து காத்திரமான கருத்துகளை முன் வைக்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

132 கிராமங்களில் நடந்த குழந்தை பிறப்பில் ஒரு பெண் குழந்தைகூட இல்லாத சூழல் எப்படி நடந்திருக்கும். இந்த நிலைமை தொடரும் பட்சத்தில் என்ன விதமான அபாயம் சமூகத்தில் நிகழக்கூடும் என, குழந்தைகள் நலச் செயற்பாட்டாளர், 'தோழமை 'தேவநேயனிடம் கேட்டோம்.

தேவநேயன்
தேவநேயன்

"உத்திரகாசியில் நடந்திருப்பது ரொம்ப சோகமான விஷயம். இந்த நிலை இன்றைக்கு திடீரென்று வந்ததில்லை. 2001 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பிலும் ஆண்களை விட, பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. 1000 ஆண்களுக்கு 973 என்றிருந்தது. பிறகு, அது 943 ஆக குறைந்தது. தேசிய குடும்பம் மற்றும் சுகாதாரம் அமைப்பின் சர்வேயில் 900க்கு கீழ் வந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். இது வட இந்தியாவில்தான் என்று நினைத்துத் திருப்தியடைந்துவிட வேண்டாம். தமிழகத்திலும் இந்த நிலை இருக்கத்தான் செய்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்திரகாசி மாவட்டத்தில் 216 குழந்தைகளில் ஒன்றுகூடப் பெண்ணாக இல்லை என்பது அபாயகரமானது.
தேவநேயன்
Kid
Kid
Daniela Dimitrova Pixabay

தமிழ்நாட்டில் வளர்ந்த மாவட்டமாகக் கருதப்படும் கடலூரில் 6 வயதுக்குக் கீழ் எனப் பார்த்தால், 1000 ஆண்களுக்கு 878 பெண்கள் என்றும், அரியலூர் மாவட்டத்தில் 860 என்றுமாகக் கவலைதரும் அளவில்தான் பெண்களின் விகிதம் இருக்கிறது. சில மாதங்களுக்கு முன் செய்தியில் அதிகம் அடிப்பட்டது திருவண்ணாமலை மாவட்டம்தான். அங்கு ஐந்தாறு ஆண்டுகளில் 1000க்கும் மேற்பட்ட கருகலைப்பு நடந்திருக்கிறது என்ற தகவல் வெளிவந்தது. அதனால், அம்மாவட்ட ஆட்சியர் சர்ச்சைக்குரிய ஸ்கேன் சென்டர்களை மூடினார். சமீபத்தில் சென்னை போரூர் ஏரி அருகே ஒரு பெண் குழந்தையை, பெண்மணி ஒருவர் தூக்கியெறிந்தது சிசிடிவி கேமரா வழியே நமக்குத் தெரிய வந்தது. இப்படி ஏதேனும் ஒரு வகையில் பெண் குழந்தைகளின் கொலை நடந்துகொண்டேதான் இருக்கிறது.

பெண் ஒரு தொழில்முனைபவராக, விமானியாக, ஆட்சியராக என்று பல துறைகளில் தடம் பதிக்கும் ஓர் ஆளுமையாக ஆவார் என்பதையே யோசிக்க மறுக்கிறார்கள்
தேவநேயன்

உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்திரகாசி மாவட்டத்தில் 216 குழந்தைகளில் ஒன்றுகூடப் பெண்ணாக இல்லை என்பது அபாயகரமானது. இதன் தாக்கம், அங்கு இப்போது வெளிப்படுகிறதோ இல்லையோ 10, 15 ஆண்டுகளில் நிச்சயம் தெரியும். ஒற்றைக் குழந்தை என்பதை வலியுறுத்தி குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைச் செயல்படுத்திய மாநிலங்களிலும் இந்தச் சிக்கல் வலுவாக இருக்கும். அந்த மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. தமிழகத்தில் பல மாவட்டங்களில் ஆண்களுக்குத் திருமணம் செய்ய பெண்கள் கிடைக்கவில்லை. குறிப்பாக , தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் இது கண்கூடாகத் தெரிகிறது.

பெண் குழந்தைகள்
பெண் குழந்தைகள்
Jill Wellington Pixabay

இந்தப் பிரச்னையின் அடிப்படையான அம்சம், ஒரு வீட்டில் பெண் குழந்தை மூத்த பிள்ளையாக பிறக்கிறது என்றால், ஒத்துக்கொள்வார்கள். அடுத்தும் பெண் என்றால் கருவிலே அழிப்பார்கள். மீண்டும் பெண் குழந்தை என்றால் கேட்கவே வேண்டாம்.

பெண் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கவோ பெண் குழந்தை மரணத்தைத் தடுப்பதற்கோ அரசு முயற்சிகளை எடுத்துத்தான் வருகிறது. தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், 'தொட்டில் குழந்தைத் திட்டம்' அப்படிக் கொண்டுவரப்பட்ட ஒன்றுதான். இதுவே பிரச்னையைத் தீர்க்குமா என்றால், தீர்க்காதுதான். ஆனால், ஒவ்வொரு முயற்சியும் முக்கியமானதுதானே! பெண் குழந்தைகளை கருவிலோ அல்லது பிறந்த நிலையிலோ ஏன் கொல்கிறார்கள் என்பதற்கு அழுத்தமான, ஆதாரபூர்வமான ஆய்வுகள் அரசிடம் இல்லை.

கருக்கலைப்பு செய்வதை தடுப்பதற்கான 1992 ல் சட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால், நடைமுறையில் ஸ்கேன் சென்டர்களை முறையாகக் கண்காணிக்கிறார்களா என்பது பெரிய கேள்விக்குறிதான்.
பெண் குழந்தை
பெண் குழந்தை
Stephanie Pratt Pixabay

பெண் குழந்தைகள் என்றதுமே இரண்டு பிரச்னைகள்தாம் பெற்றோருக்கு முதலில் நிற்பவை. ஒன்று, அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துவைக்க ஆகும் செலவு அடுத்து, பாதுகாப்பாக வளர்ப்பதிலுள்ள சிக்கல்கள். இது ஆயிரம் ஆண்டுகளாக உள்ள பிரச்னை. பாலின சமத்துவப் புரிதலே சமூகத்தில் பரவலாக இல்லை. பெண் குழந்தை என்றாலே அதன் திருமணம் மட்டுமே முதன்மைப்படுத்துவது சரியானதல்ல. அதற்குக் கல்வி அளிக்க வேண்டும், அதன் விருப்பங்களை நிறைவேற்றவும் தானே நிறைவேற்றிக்கொள்ள வாய்ப்பையும் அளிக்க வேண்டும் என்பதெல்லாம் மறந்தும் நினைவுக்கு வருவதில்லை. பெண் ஒரு தொழில்முனைபவராக, விமானியாக, ஆட்சியராக என்று பல துறைகளில் தடம் பதிக்கும் ஓர் ஆளுமையாக ஆவார் என்பதையே யோசிக்க மறுக்கிறார்கள். எனக்கு ஒரு வருத்தம் என்னவென்றால் , தமிழ்நாடு அரசின் திட்டம்கூட 'தாலிக்குத் தங்கம்' என, பெண்ணின் திருமணத்தையே முன்னிறுத்தி இருப்பதுதான். அதிலும் ஒரு ஆரோக்கியமான விஷயம் என்னவென்றால், 18 வயது ஆனபிறகு திருமணம் செய்தால்தான் இந்தத் திட்டத்தில் பயன்பெற முடியும் என்பதே. ஏதேனும் ஒருவகையில் குழந்தைத் திருமணத்திற்குத் தடையாக இருக்கிறது அல்லவா!

பதிவாகும் கர்ப்பங்களின் எண்ணிக்கைக்கும் குழந்தை பிறப்புக்குமான எண்ணிக்கையுமே வித்தியாசப்படுகிறது.
பெண் குழந்தை
பெண் குழந்தை

கருவில் இருப்பது பெண் குழந்தை என்று தெரியவந்தால், அதைக் கருக்கலைப்பு செய்வதைத் தடுப்பதற்கான 1992 ல் சட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால், நடைமுறையில் ஸ்கேன் சென்டர்களை முறையாகக் கண்காணிக்கிறார்களா என்பது பெரிய கேள்விக்குறிதான். ஏதேனும் ஓரிடத்தில் பெரிய அளவில் பிரச்னை நடந்து முடிந்த பிறகு, நடவடிக்கை எடுப்பதாகவே இருக்கிறது. முன்கூட்டியே தடுப்பதற்கான முயற்சிகள் இல்லை. அடுத்து, பாலின பேதம் பார்க்கக்கூடாது என்பதை பள்ளியில் பாடங்களிலேயே கொண்டுவரப் பட வேண்டும். சிறு வயதுமுதலே இதைப் பழக்கி , பண்பாட்டுக் கூறாக மாற்ற வேண்டியது அவசியம். அதற்கு ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டியது அவசியம்.

அரசு மருத்துவமனை உள்ளிட்ட கர்ப்பகால பராமரிப்பு அமைப்புகள் இருக்கின்றன. ஆனால், எல்லாக் கர்ப்பங்களும் பதிவு செய்யப்படுகின்றவா... பதிவு செய்யப்பட்டவை தொடர் கண்காணிப்பில் இருக்கின்றவா உள்ளிட்ட கேள்விகளுக்குப் பதில் கிடைக்காது. ஏனென்றால், பதிவாகும் கர்ப்பங்களின் எண்ணிக்கைக்கும் குழந்தை பிறப்புக்குமான எண்ணிக்கையுமே வித்தியாசப்படுகிறது. கர்ப்பம் உறுதி செய்யப்படும்போதே அதற்கு உரிய எண்ணை அளிப்பதில், தொழில்நுட்பம் வளர்ந்த இன்றைய சூழலில் சிரமம் இல்லை. பிரசவத்தில் குழந்தை இறந்துவிடும் நிலையும் இருப்பதால், குழந்தை பிறப்பின்போது வேறோர் எண்ணாக மாற்றவும் செய்யலாம். அதன்பின், அந்தக் குழந்தை தொடக்கப்பள்ளியில் சேர்க்கப் படுகிறதா... அப்படியே படித்து கல்லூரி வரை செல்கிறதா என்பதுவரை கண்காணிக்க வேண்டும் . இதற்கு ஒதுக்கும் பணத்தை செலவு என்று அரசு நினைக்கக்கூடாது, கல்விக்கு ஒதுக்கும் நிதியைப் போன்றதாக இதைப் பார்ப்பதே மக்கள் நல அரசின் கடமை.

கர்ப்பகாலப் பராமரிப்பு துறை, ஊரக வளர்ச்சித் துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட இதற்குத் தொடர்புடைய துறைகளை இணைந்து செயல்பட வைக்க வேண்டியது அவசியம்.
தேவநேயன்

'பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்' என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது, அதற்கு 252 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கியது. ஆனால், அதில் சுமார் 170 கோடி ரூபாய் விளம்பரத்திற்காக மட்டுமே செலவு செய்யப்பட்டிருக்கிறது . அதுவும் 'பேட்டி பச்சோ' என இந்தியிலும் ஆங்கிலத்திலுமே விளம்பரம் செய்யப்பட்டது . தமிழ்நாட்டில் மொழிபெயர்த்துக்கூட விளம்பரம் செய்ய வில்லை. இதனால் என்ன பயன் வந்துவிடப்போகிறது . இந்தியாவில் ஆண் -பெண் பிறப்பு விகிதம் சமத்துவம் இல்லாத சில பகுதிகளை 'ரெட் இன்டிகேட்டர்ஸ்' என்று குறிப்பிடுகிறார்கள் . அவற்றிற்குத் தனியாக ஏதேனும் நிதி ஒதுக்கினால்கூட பயனுள்ளதாக இருக்கும். கர்ப்பகாலப் பராமரிப்பு துறை, ஊரக வளர்ச்சித் துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட இதற்குத் தொடர்புடைய துறைகளை இணைந்து செயல்பட வைக்க வேண்டியது அவசியம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism