Published:Updated:

பண்ணை வீடு டார்கெட்; திகாரில் போடப்பட்ட ஸ்கெட்ச்-கொலை முயற்சியிலிருந்து இரு முறை தப்பிய சல்மான் கான்

சல்மான் கான்

பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலாவைப் படுகொலை செய்தவர்கள் நடிகர் சல்மான் கானைக் கொலைசெய்ய இரண்டு முறை முயன்றுள்ளனர்.

பண்ணை வீடு டார்கெட்; திகாரில் போடப்பட்ட ஸ்கெட்ச்-கொலை முயற்சியிலிருந்து இரு முறை தப்பிய சல்மான் கான்

பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலாவைப் படுகொலை செய்தவர்கள் நடிகர் சல்மான் கானைக் கொலைசெய்ய இரண்டு முறை முயன்றுள்ளனர்.

Published:Updated:
சல்மான் கான்

பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா அவரின் சொந்த கிராமத்தில் கடந்த மே மாதம் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். இப்படுகொலை தொடர்பாக சமீபத்தில் சம்பத் நெஹ்ரா கபில் பண்டிட் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் கபில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் கைதுசெய்யப்பட்டார். இவர்களிடம் விசாரணை நடத்தியதில் நடிகர் சல்மான் கானை இரண்டு முறை கொலை செய்ய முயன்றது தெரியவந்துள்ளது. ராஜஸ்தானில் அபூர்வ வகை மானை வேட்டையாடியதற்காக, சித்து மூஸ்வாலா படுகொலைக்கு முக்கியக் காரணமாக இருந்த லாரன்ஸ் பிஸ்னோய், நடிகர் சல்மான் கானைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்தார். இதற்காக தன் அடியாட்களையும் நியமித்திருந்தார்.

சல்மான் கான்
சல்மான் கான்

சித்து மூஸ்வாலா படுகொலைச் சம்பவத்துக்குப் பிறகு சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் கடிதத்தையும் லாரன்ஸ் கூட்டாளிகள் அனுப்பிவைத்தனர். சல்மான் கானின் தந்தை சலீம் கான் தினமும் மும்பை பாந்த்ராவில் கடற்கரைக்கு நடைப்பயிற்சியாக வருவது வழக்கம். இதை தினமும் நோட்டமிட்டு அவர் வழக்கமாக அமரும் இடத்தில் கொலை மிரட்டல் கடிதத்தை லாரன்ஸ் கூட்டாளிகள் வைத்துச்சென்றனர். இந்த நிலையில்தான், கைதுசெய்யப்பட்டிருக்கும் லாரன்ஸ் கூட்டாளிகளிடம் விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்துள்ளன.

லாரன்ஸ் கூட்டாளிகள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் சல்மான் கானைக் கொலைசெய்ய மும்பை அருகிலுள்ள பன்வெலில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியிருந்துள்ளனர். சல்மான் கானுக்கு பன்வெலில் பண்ணை வீடு இருக்கிறது. அடிக்கடி சல்மான் கான் பண்ணை வீட்டுக்கு வருவது வழக்கம். அப்படி வரும்போது வழியில் மடக்கி, சித்து மூஸ்வாலாவைக் கொலை செய்ததுபோல் கொலை செய்யத் திட்டமிட்டிருந்தது தெரியவந்திருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

லாரன்ஸ் கூட்டாளிகள் கபில் பண்டிட், சந்தோஷ் ஜாதவ், சச்சின் பிஸ்னோய் ஆகியோர் சல்மான் கான் பண்ணை வீட்டுக்குச் செல்லும் ரோட்டில் வாடகைக்கு வீடு எடுத்து ஒரு மாதத்துக்கும் மேல் தங்கியிருந்து சல்மான் கானின் நடவடிக்கையைத் தீவிரமாகக் கண்காணித்துவந்துள்ளனர். காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சம்பவத்துக்குப் பிறகு சல்மான் கான் காரை மிதமான வேகத்தில்தான் ஓட்டுவார் என்பதைக்கூடத் தெரிந்துவைத்திருந்தனர். அதோடு பண்ணை வீட்டுக்குச் செல்லும் சாலையில் எங்கெல்லாம் குண்டு குழிகள் இருக்கின்றன என்பதைக்கூட நோட்டமிட்டு வைத்திருந்தனர். அந்தச் சாலையில் கார் வெறும் 25 கிலோமீட்டர் தூரத்தில்தான் செல்ல முடியும் என்பதையும் தெரிந்துவைத்திருந்தனர்.

சித்து மூஸ்வாலா
சித்து மூஸ்வாலா

அவர்கள் சல்மான் கானைத் தாக்க சிறிய ஆயுதங்களைத் தங்களுடன் வைத்திருந்தனர். சல்மான் கான் எப்போதெல்லாம் பண்ணை வீட்டுக்கு வருவார் என்பதைத் தெரிந்துகொள்ள சல்மான் கான் பண்ணை வீட்டு வாட்ச்மேனுடனும் லாரன்ஸ் கூட்டாளிகள் நட்பை ஏற்படுத்தியிருந்தனர்.

இரண்டு முறை கொலை முயற்சி

பண்ணை வீட்டுக்குச் செல்லும்போது சல்மான் கானுடன் அவரின் பாதுகாவலர் ஷெரா என்பவர் மட்டுமே இருப்பார் என்பதால் எளிதில் கொலை செய்துவிட முடியும் என்றும் கொலையாளிகள் கணித்து வைத்திருந்தனர். கடந்த ஏப்ரல் மாதம் சல்மான் கான் இரண்டு முறை பண்ணை வீட்டுக்கு வந்தார். அப்போது கொலை செய்ய முயன்றனர். ஆனால் இரண்டு முறையும் சல்மான் கான் தப்பிவிட்டதாகக் கைதுசெய்யப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். முதல் முயற்சி தோல்வியடைந்துவிட்டதால் அவர்களிடம் மாற்றுத் திட்டமும் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. சித்து மூஸ்வாலாவைக் கொலை செய்யும் முன்பாக சல்மான் கானைக் கொலை செய்ய திட்டமிட்டிருந்தனர். இதற்காக திகார் சிறையில் திட்டம் தீட்டப்பட்டது. கனடாவில் இருக்கும் கோல்டி பிரர்தான் கபில் பண்டிட்டை இந்தத் திட்டத்தை நிறைவேற்ற தேர்வுசெய்து அனுப்பிவைத்தார் என்ற தகவல்களும் விசாரணையில் வெளியாகியுள்ளன.