Published:Updated:

`மகள்கள் படிப்பில் கவனம் செலுத்தட்டும்!’ - விவசாயிக்கு டிராக்டர் வழங்கிய சோனு சூட்

டிராக்டர்
டிராக்டர்

தெலுங்கு தேசம் காட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு உட்பட பலரும் சோனு சூட் முயற்சிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ஊரடங்கில் நடுத்தர விவசாயிகள் படும் துன்பம் மனதை வாட்டினாலும் இவரை போன்றவர்கள் செய்யும் உதவிகள் ஆறுதல் அளிக்கின்றது.

வைரமுத்துவின் கருவாச்சி காவியத்தில் மாட்டுக்கு பதில் தானே ஏர் பிடித்து நிலத்தினை உழும் கருவாச்சியின் கண்ணீர் கதையில் வரும் சம்பவங்கள் போல இன்றளவும் கிராமங்களில் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஆந்திர மாநிலத்தினை சேர்ந்த விவசாயி ஒருவர் மாடுகளுக்குப் பதில், தன் மகள்களை கொண்டு நிலத்தை உழுத வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதனை கண்ட பாலிவுட் நடிகர் சோனு சூட், அந்த விவசாயிக்கு டிராக்டர் வழங்கியுள்ளார்.

விவசாயி
விவசாயி

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனபள்ளி, ராஜுவரிபல்லே கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி நாகேஸ்வரராவ். இவருக்கு வெண்ணிலா மற்றும் சந்தனா என்று இரு மகள்கள் உள்ளனர். மதனபள்ளியில் தேநீர் கடை வைத்து நடத்திவந்த நாகேஸ்வரராவ், ஊரடங்கு காரணமாக அந்தக் கடையை மூடிவிட்டு குடும்பத்துடன் சொந்த கிராமத்துக்கு திரும்பியுள்ளார்.

சோனு சூட்
சோனு சூட்

சொந்த ஊரில் தனக்கு உள்ள நிலத்தில் தக்காளி பயிரிட முடிவுசெய்துள்ளார். எனினும், நிலத்தை உழுது பக்குவம் செய்ய மாடுகள் அல்லது டிராக்டரை வரவழைக்க போதுமான பண வசதி இல்லாததனால் மாடுகளுக்கு பதிலாக தனது மகள்களை கொண்டு நிலத்தினை உழத் தொடங்கியுள்ளார்.

பெண்கள் இருவரும் கலப்பை கொண்டு உழும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிகமாக பகிரப்பட்டு வந்தது. இது குறித்து கூறும் அவர்களின் தாய், ``ஊராடங்கால் எங்கள் தேனீர் கடையை திறக்க இயலாத சூழல் ஏற்பட்டது. ஒரு மாத ஊரடங்கிலேயே எங்கள் சேமிப்புகள் அனைத்தும் தீர்ந்துவிட்டன. எனவே, நாங்கள் எங்கள் சொந்த கிராமத்திற்கு திரும்பினோம். இந்த ஆண்டு நல்ல மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால் நாங்கள் எங்கள் நிலத்தில் விவசாயம் செய்ய தொடங்கினோம்.

`மகள்கள் படிப்பில் கவனம் செலுத்தட்டும்!’ - விவசாயிக்கு  டிராக்டர் வழங்கிய சோனு சூட்

ஆனால் நிலத்தினை உழுவதற்கு டிராக்டரை வாடகைக்கு எடுக்க எங்களிடம் பணம் இல்லை. டிராக்டரின் வாடகை மணிக்கு,1,500 ரூபாய். எனவே, நாங்களே வேலை செய்ய முடிவு செய்தோம். நானும், என் கணவர் மற்றும் மகள்களும் சேர்ந்து பணிகளைச் செய்ய தொடங்கிவிட்டோம்" என்றார்.

பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் இந்தி, கன்னடம், தமிழ் மற்றும் பிற இந்திய மொழிபடங்களிலும் நடித்துள்ளார். தமிழில் தேவி, அருந்ததி படங்கள் மூலம் பிரபலம் ஆனவர். ட்விட்டரில் கடந்த ஞாயிற்று கிழமை இரண்டு பெண்கள் ஏர் கலப்பை கொண்டு நிலத்தினை உழும் வீடியோவை பார்த்த இவர் அதனை ரீட்வீட் செய்து, ``இந்த குடும்பத்திக்கு மாடுகள் கூட இல்லை. எனவே உங்களுக்கு ஒரு டிராக்டர் வாங்கித்தர வேண்டும். இன்று மாலைக்குள் டிராக்டர் உங்கள் நிலத்தினை உழும், மகள்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்" என கூறினார். அதன்படி அவர்களுக்கு டிராக்டரும் அனுப்பியுள்ளார். இதனை தொடர்ந்து தெலுங்கு தேசம் காட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு உட்பட பலரும் சோனு சூட் முயற்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதோடு, அந்த விவசாயியின் இரு மகள்களின் படிப்புச் செலவு முழுவதையும் ஏற்றுக் கொள்வதாகவும் சந்திரபாபு நாயுடு அறிவித்திருக்கிறார். ஊராடங்கில் நடுத்தர விவசாயிகள் படும்துன்பம் மனதை வாட்டினாலும் இவரை போன்றவர்கள் செய்யும் உதவிகள் ஆறுதல் அளிக்கின்றது.

அடுத்த கட்டுரைக்கு