Published:Updated:

மகாராஷ்டிரா: வெள்ளத்தால் பாதித்த மக்கள்; ஒரு லட்சம் லிட்டர் பால் பாக்கெட் அனுப்பும் சோனு சூட்!

சோனு சூட்
சோனு சூட்

மகாராஷ்டிராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் சோனு சூட் ஒரு லட்சம் லிட்டர் பால் மற்றும் நிவாரணப் பொருள்களை அனுப்பிவைத்திருக்கிறார்.

மகாராஷ்டிராவில் சமீபத்தில் பெய்த கனமழையால் ராய்கட், ரத்னகிரி, சிந்துதுர்க், சாங்கிலி, சதாரா, கோலாப்பூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றால் 300-க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கின்றனர். வெள்ளத்தால் உடைமைகள், வீடுகளை இழந்த மக்கள் வாழ்க்கையை எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் இருக்கின்றனர். மாநில அரசு 11,000 கோடி மதிப்பிலான நிவாரண உதவித் திட்டங்களை அறிவித்திருக்கிறது. தொண்டு நிறுவனங்களும் நிவாரண உதவிப் பொருள்களை அனுப்பிவருகின்றன. சாலைகள் இருக்கும் பகுதிக்கு நிவாரணப் பொருள்கள் சென்றுவிட்டன. ஆனால், அதிகமான கிராமங்களில் சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

மகாராஷ்டிரா மழை வெள்ளம்: நிலச்சரிவில் சிக்கி 251 பேர் உயிரிழப்பு; 100 பேர் மாயம்!
சோனு சூட்
சோனு சூட்

அங்கு நிவாரணப் பொருள்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. பாலிவுட் நடிகர் சோனு சூட் பேரிடர் காலங்களில் முன்னின்று உதவிகளைச் செய்வதில் எப்போதும் முன்னிலையில் இருப்பார். தற்போது வெள்ளம் பாதித்த மகாராஷ்டிரா மாவட்டங்களுக்கும் உதவிக்கரம் நீட்டியிருக்கிறார். ஒரு லட்சம் லிட்டர் பால் பாக்கெட்கள் உட்பட ஏராளமான நிவாரண உதவிப் பொருள்களை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறார். இது குறித்து சோனு சூட் கூறுகையில், ``முக்கிய சாலையோரம் இருக்கும் கிராமங்களுக்கு அதிக அளவில் நிவாரண உதவிகள் சென்றுவிட்டன. ஆனால் உள்பகுதியில் இருக்கும் கிராமங்களுக்குப் போதிய உதவிகள் சென்றடையவில்லை. இது தொடர்பாக சிப்லுன், கிர்டி, மஹாட் பகுதிகளிலுள்ள கிராம நிர்வாக அதிகாரிகளிடம் பேசி என்ன தேவை இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டிருக்கிறேன்.

வெள்ளத்தில் அனைத்தையும் மக்கள் இழந்துவிட்டதால் அவர்களுக்கு பாத்திரங்கள், பக்கெட், கப், சுத்தமான தண்ணீர், பால் பொருள்கள், ஆடைகள் உடனடித் தேவையாக இருக்கின்றன. எனவே ஏழு லாரிகளில் நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. ஐந்து நாள்களில் மட்டும் ஒரு லட்சம் பால் பாக்கெட்கள் அனுப்பிவைக்கப்படும். நிவாரணப் பொருள்கள் விரைவில் மக்களுக்கு விநியோகம் செய்யப்படும் என்று தெரிவித்தார். பொருள்கள் சமமாகப் பங்கிட்டு மக்களுக்கு வழங்கப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க சோனு சூட் 12 பேர் கொண்ட கமிட்டி ஒன்றையும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பியிருக்கிறார். இந்தக் குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று, அங்குள்ள மக்களுக்குத் தேவைப்படும் பொருள்கள் குறித்த விவரத்தை சோனு சூட்டுக்கு அனுப்பிவைப்பார்கள். அதன் அடிப்படையில் மேலும் பல கிராமங்களுக்கு சோனுசூட் உதவி செய்யவிருக்கிறார். இதற்கிடையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் சேதமடைந்த சாலைகளைப் பழுது பார்க்க மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். சாலைகளை அரசு நிர்வாகம் சரிசெய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு