Published:Updated:

நடிகர் சுஷாந்த் சிங் மரணம்: ஓராண்டு ஆகியும் விலகாத மர்மம்!

சுஷாந்த் சிங்
சுஷாந்த் சிங்

மும்பையில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணமடைந்து, ஓர் ஆண்டு ஆகிவிட்ட நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற மர்மம் மட்டும் இன்னும் நீடித்துக்கொண்டிருக்கிறது.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஆண்டு, ஜூன் 14-ம் தேதி மும்பையிலுள்ள பாந்த்ரா இல்லத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார் என்ற அதிர்ச்சிச் செய்தி வெளியானது. இந்தத் தற்கொலைச் சம்பவம் பாலிவுட் சினிமா உலகத்தை மட்டுமல்லாமல், பீகார் அரசியலிலும் புயலைக் கிளப்பியது நினைவிருக்கலாம். மும்பையில் நடந்த மரணத்துக்கு, பீகார் போலீஸார் தங்களது மாநிலத்தில் வழக்கு பதிவு செய்தனர். சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தோழி ரியா சக்ரபோர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சுஷாந்த் சிங்கின் தந்தை பீகார் போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் பீகார் போலீஸார் இந்த வழக்கைக் கையில் எடுத்தனர்.

ஏற்கெனவே இந்த வழக்கை மும்பை போலீஸார் விசாரித்துக்கொண்டிருந்தனர். பிரேத பரிசோதனையின் அடிப்படையில் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டதாக மும்பை போலீஸார் முடிவுக்கு வந்தனர். அதோடு அவர்கள் வழக்கு தொடர்பான ஆவணங்களை பீகார் போலீஸாரிடம் கொடுக்க முடியாது என்றும் தெரிவித்தனர்.

ரியா சக்ரபோர்த்தி
ரியா சக்ரபோர்த்தி

பீகார் சட்டமன்றத் தேர்தலை கவனத்தில்கொண்டு பீகார் போலீஸார் இந்த வழக்குக்கு முக்கியத்துவம் கொடுத்தனர் என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. இந்தப் பிரச்னை சுப்ரீம் கோர்ட் வரை சென்றது. சுப்ரீம் கோர்ட் இதை விசாரித்து வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது. சி.பி.ஐ வழக்கைக் கையில் எடுத்தவுடன் அமலாக்கப் பிரிவும் இதில் சேர்ந்துகொண்டது. சுஷாந்த் சிங்கின் பல கோடி ரூபாய் பணத்தை அவரின் காதலி ரியா சக்ரபோர்த்தி பறித்துவிட்டதாக சுஷாந்த் சிங்கின் தந்தை கொடுத்திருந்த புகாரின் அடிப்படையில் பண மோசடி தொடர்பாக விசாரிப்பதாக அமலாக்கப் பிரிவு தெரிவித்தது. ஆனால், கடந்த ஓராண்டாக இது குறித்து விசாரித்தும், இதுவரை எந்தவித உண்மையும் வெளியில் வரவில்லை என்கிறார்கள் சுஷாந்த் சிங்கின் உறவினர்கள்.

ரியா சக்ரபோர்த்தி, சுஷாந்த் சிங்கிடமிருந்து பணத்தை அபகரித்தாரா என்பதற்கும் இதுவரை விடை கிடைக்கவில்லை. சி.பி.ஐ-யும் இந்த வழக்கை கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து விசாரித்துக்கொண்டுதான் இருக்கிறது. அவர்களாலும் இது தற்கொலையா அல்லது கொலையா என்ற முடிவுக்கு வர முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர். இன்னும் விசாரித்துக்கொண்டுதான் இருக்கிறோம் என்று மட்டும் சி.பி.ஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுஷாந்த் சிங் மன அழுத்தத்துக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டாரா என்பது குறித்துக்கூட சி.பி.ஐ எதுவும் தெரிவிக்கவில்லை. அதேசமயம், சுஷாந்த் சிங்கின் மரண வழக்கைப் பதிவு செய்த பாந்த்ரா போலீஸார், தொடர்ந்து இதை விசாரித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். போலீஸார் சம்பவம் நடந்த ஒரு வாரத்தில் இது தற்கொலை என்று முடிவுக்கு வந்துவிட்டனர். தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் மும்பை போலீஸார் இந்த வழக்கை விசாரித்துப் பார்த்தனர். இதற்காக தயாரிப்பாளர்கள் ஆதித்ய சோப்ரா, மகேஷ் பட், சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோரிடமும் வாக்குமூலம் வாங்கினர். இதிலும் எந்தவிதத் துப்பும் கிடைக்கவில்லை.

சுஷாந்த் சிங்
சுஷாந்த் சிங்

இது குறித்து மும்பை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ``சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால், இந்த வழக்கை முடிக்க முடியாத அளவுக்கு வழக்கு தொடர்பான ஆவணங்கள் சி.பி.ஐ வசம் இருக்கின்றன. சி.பி.ஐ-யிடமிருந்து ஆவணங்கள் கிடைத்தவுடன் இந்த வழக்கை முடித்துவிடுவோம்” என்று தெரிவித்தார்.

அமலாக்கப் பிரிவு நடத்திய விசாரணையில் ரியா சக்ரபோர்த்தியும், அவரின் சகோதரரும் போதைப்பொருள் வாங்குவது தொடர்பாக சாட்டிங் செய்திருப்பதைக் கண்டுபிடித்தனர். இந்த விவரம் போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு தெரிவிக்கப்பட்டு, போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் ரியா சக்ரபோர்த்தியையும். அவர் சகோதரர் சோவிக்கையும் கைதுசெய்தனர். இந்த வழக்கு தொடர்பாக பாலிவுட் பிரபலங்கள் தீபிகா படுகோனே, சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர் உட்பட பலரிடம் விசாரித்தனர்.

ரியா சக்ரபோர்த்தி
ரியா சக்ரபோர்த்தி

ஆனால் இதிலும் எந்தவித முன்னேற்றமும் இல்லை. போதைப்பொருள் வியாபாரி ஒருவரைக் கைதுசெய்து, அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் ரியா சக்ரபோர்த்தியும். அவர் சகோதரரும் கைதுசெய்யப்பட்டனர். இப்போது அவரும் வெளியில் வந்துவிட்டார். ஆனால், சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டாரா, கொலை செய்யப்பட்டாரா என்பது மட்டும் இன்னும் மர்மமாகவே இருக்கிறது. சி.பி.ஐ இந்த வழக்கையும் ஓரங்கட்டிவைத்துவிட்டது என்ற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.

சுஷாந்த் சிங்... ஒரு பெருங்கனவை நோக்கிய பயணம் பாதியில் முடிந்தது ஏன்?! #SushanthDay

இந்த வழக்கில் சி.பி.ஐ இன்னும் மௌனம் காப்பது ஏன் என்று மும்பை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சச்சின் சாவந்த் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளவற்றில், ``சி.பி.ஐ., சுஷாந்த் சிங் வழக்கைக் கையில் எடுத்து 310 நாட்களாகிவிட்டன. எய்ம்ஸ் மருத்துவமனை சுஷாந்த் சிங் தற்கொலைதான் செய்துகொண்டார் என்று தெரிவித்து 250 நாட்களாகிவிட்டன. சி.பி.ஐ எப்போது விசாரணை விவரங்களை தெரிவிக்கப்போகிறது... ஏன் அமைதியாக இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். சுஷாந்த் சிங்கின் முதலாம் ஆண்டு நினைவுநாளை ஒட்டி சமூக வலைதளத்தில் பாலிவுட் பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் சுஷாந்த் சிங்கை நினைவுகூர்ந்துவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு