Published:Updated:

மும்பை: நிலுவையில் தேச துரோக வழக்கு... பாஸ்போர்டைப் புதுப்பிக்க நீதிமன்றத்தை நாடிய கங்கனா!

கங்கனா
கங்கனா

நடிகை கங்கனா ரணாவத்தின் மீது தேச துரோக வழக்கு நிலுவையில் இருப்பதால், அவரது பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் கங்கனா மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சர்ச்சைகளுக்குப் பெயர்போன பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், சமூக வலைதளத்தில் பிரிவினையைத் தூண்டும்விதத்தில் கருத்துகளைப் பதிவிட்டார் என அவர் மீதும், அவரின் சகோதரி ரங்கோலி மீதும் மும்பை பாந்த்ரா போலீஸார் தேச துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்யவேண்டும் என்று கோரி கங்கனா மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கு நிலுவையில் இருக்கிறது. தற்போது கங்கனாவின் பாஸ்போர்ட் வரும் செப்டம்பர் மாதம் முடிவடைகிறது. இதையடுத்து அதைப் புதுப்பிக்க மும்பை பாஸ்போர்ட் அலுவலகத்தில் கங்கனா கொடுத்துள்ளார்.

நடிகை கங்கனா
நடிகை கங்கனா

ஆனால் கங்கனா மீது தேச துரோக வழக்கு நிலுவையில் இருப்பதால், அவரது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க அதிகாரிகள் மறுத்துவருகின்றனர். உடனே படப்பிடிப்பில் கலந்துகொள்ள கங்கேரி நாட்டுக்குச் செல்ல வேண்டியிருப்பதால், தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க உத்தரவிடவேண்டும் என்று கோரி கங்கனா மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், `ஜூன் 15 முதல் ஆகஸ்ட் 30-ம் தேதி வரை கங்கேரியில் படப்பிடிப்பு நடக்க வேண்டியிருக்க இருக்கிறது. இதில் நான் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதால் உடனே கங்கேரி செல்ல வேண்டும். தயாரிப்பாளர்கள் இந்தப் படத்துக்கு அதிக அளவில் முதலீடு செய்துள்ளனர். படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டால் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படும். எனவே எனது பாஸ்போர்ட்டைப் புதுப்பிக்க பாஸ்போர்ட் துறைக்கு உத்தரவிட வேண்டும்” என்று அதில் கூறியிருந்தார்.

`வேலை இல்லாததால் வருமான வரியைச் செலுத்த முடியவில்லை!’ - சொல்கிறார் கங்கனா ரணாவத்

இந்த மனு ஓரிரு நாளில் விசாரணைக்கு வரவிருக்கிறது. கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் கங்கனா சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்த கருத்து பிரிவினையைத் தூண்டும்விதத்தில் இருப்பதாகக் கூறி பாலிவுட் கலை இயக்குநர் முன்னாவர் அலி என்பவர் பாந்த்ரா கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கங்கனா மற்றும் அவரின் சகோதரி மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க போலீஸாருக்கு உத்தரவிட்டது. போலீஸார் இது குறித்து விசாரித்து, கங்கனா மற்றும் அவரின் சகோதரி ரங்கோலி மீது தேச துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு