Published:Updated:

`கத்திக்கொண்டேயிருந்தால், சொல்வதெல்லாம் உண்மையாகி விடாது!' - கங்கனாவை விமர்சித்த ஊர்மிளா

மும்பை அனைவருக்கும் சொந்தமானது என்பதில் சந்தேகமே இல்லை. மும்பையின் மகளான என்னால், அந்த நகரத்துக்கு எதிரான அவமதிப்பு கருத்துகளைச் சொல்வதைப் பொறுத்துக்கொள்ள முடியாது.

பாலிவுட்டில் போதை மருந்து அச்சுறுத்தல் பெருகியிருப்பதாக மாநிலங்களவையில் நடிகரும், பா.ஜ.க எம்.பி.யுமான ரவி கிஷண் குற்றம்சாட்டிய நிலையில், சமாஜ்வாடி கட்சியின் எம்.பி ஜெயா பச்சன் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். ரவி கிஷணுக்கு ஆதரவாகவும், எம்.பி. ஜெயா பச்சனுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்திருக்கும் கங்கனா ரணாவத்தை, நடிகை ஊர்மிளா மடோன்கர் ``நல்ல குடும்பத்துப் பெண், இப்படித்தான் பேசுவார்களா..?" என்று கடுமையாகத் தாக்கிப் பேசியிருக்கிறார்.

ஜெயா பச்சன்
ஜெயா பச்சன்

என்ன நடந்தது?

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தைத் தொடர்ந்து நடிகை கங்கனா ரணாவத், தன் ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து, புதுப்புதுச் சர்ச்சைகளைக் கிளப்பிவருகிறார். நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரத்தில், சுஷாந்துக்குத் தெரியாமல் நடிகையும் சுஷாந்தின் தோழியுமான ரியா அவ்வப்போது போதை மருந்தைத் தண்ணீரிலும் உணவிலும் கலந்துகொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த கங்கனா ரணாவத், ``சுஷாந்தின் மரணம் தற்கொலை அல்ல, கொலை’’ என்றும், ``பாலிவுட்டில் நடக்கும் பார்ட்டிகள் அனைத்திலும் விலையுயர்ந்த போதைப் பொருள் பயன்படுத்தப்படுகிறது, போதைப் பொருள் தடுப்பு பிரிவுக்கு உதவி செய்ய நான் தயாராக இருக்கிறேன். ஆனால், மத்திய அரசு எனக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் என் கரியரை மட்டுமல்ல, என் உயிரையே பணயம் வைக்கிறேன். சுஷாந்துக்குச் சில உண்மைகள் தெரிந்ததால் அவரைக் கொலை செய்துவிட்டார்கள்" என்றும் சொன்னார்.

என்ன நடக்கிறது சுஷாந்த் வழக்கில்?

மாநிலங்களவையில் இது தொடர்பான விவாதம் நடைபெற்றபோது பேசிய பா.ஜ.க எம்.பி-யும், நடிகருமான ரவி கிஷண், ``இந்தித் திரையுலகில் போதைப் பொருள்கள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது" என்றார்.

ரவி கிஷணின் இந்தப் பேச்சுக்கு, சமாஜ்வாதி எம்.பி ஜெயா பச்சன் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், ``ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகத்தின் நற்பெயரைக் கெடுக்கக் கூடாது” என்று கூறினார்.

அமிதாப் - ஜெயா பச்சன்
அமிதாப் - ஜெயா பச்சன்

ஜெயா பச்சனின் இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் பெருகி, அவருக்குக் கொலை மிரட்டல்களும் வந்ததாகக் கூறப்பட, மும்பையிலுள்ள ஜெயா பச்சன், அவருடைய மகன் அபிஷேக் பச்சன் ஆகியோரின் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பையும் மகாராஷ்டிர அரசு அதிகரித்திருக்கிறது.

நடிகை கங்கனா ரணாவத் கூறியதை நாடாளுமன்ற மாநிலங்களவையில் மறைமுகமாக விமர்சித்த ஜெயா பச்சன், ``தட்டில் உணவு ஊட்டிய கையைக் கடிக்கலாமா?” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்கு பதிலளிக்கும்விதமாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார் கங்கனா,``ஜெயா ஜி, எந்தத் தட்டைச் சொல்கிறீர்கள்? ஒரு தட்டு கொடுக்கப்பட்டது. அதில், இரண்டு நிமிட கதாபாத்திரம், கவர்ச்சி நடனங்கள், காதல் காட்சி ஆகியவை அளிக்கப்பட்டன. அதுவும் கதாநாயகனுடன் தனிமையில் இருந்த பிறகே கொடுக்கப்பட்டது.

நான் திரையுலகுக்கு பெண்ணியத்தைக் கற்றுக்கொடுத்தேன். தேசபக்திப் படங்களால் அலங்கரித்தேன். இது எனது சொந்தத் தட்டு. உங்கள் தட்டு அல்ல. சினிமாத்துறை அதிக நச்சுத்தன்மைகொண்டது. விளக்குகளும் கேமராவும் நிறைந்திருக்கும் இந்த போலி உலகம், மாற்று யதார்த்த உலகம் என்ற ஒன்று இருப்பதாக ஒருவரை நம்பவைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த மாயையைப் புரிந்துகொள்ள, மிக வலிமையான ஆன்மிக மனதால் மட்டுமே முடியும்" என்று கருத்து தெரிவித்திருந்தார்.

கங்கனா
கங்கனா

மேலும், ஜெயா பச்சனின் மகள் மற்றும் மகன் குறித்தும் பதிவிட்டார் கங்கனா. ``அவர்களுக்கு அநீதி நடந்தாலும் இப்படித்தான் பேசுவீர்களா...’’ எனக் கேள்வி கேட்ட அவர், ``எங்களுக்கும் இரக்கம் காட்டுங்கள் ஜெயா பச்சன் அவர்களே...’’ என்று ஆவேசமாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

தொடர்ந்து, ``பெரிய திரைப் பிரபலங்கள் வீடுகளுக்குச் சென்றால் இலவசமாகவே கொடுப்பார்கள். அதை நீரில் கலந்து கொடுத்தால் நமக்கே தெரியாது. போதை தடுப்பு பிரிவினர் பாலிவுட்டில் நுழைந்தால், பல முன்னணி பிரபலங்கள் சிறையில்தான் இருப்பார்கள். `தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் பிரதமர் பாலிவுட்டிலுள்ள சாக்கடையைச் சுத்தம் செய்வார் என நம்புகிறேன்” எனவும் தெரிவித்திருந்தார் கங்கனா.

`சிவசேனா, சோனியா சேனாவாக மாறிவிட்டது!’ - கொதித்த கங்கனா ரணாவத்

கங்கனாவின் இந்தக் கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கங்கனாவை நடிகை ஊர்மிளா கடுமையாக விமர்சித்திருக்கிறார். ``போதை மருந்துக்கு எதிரான போராட்டத்தை கங்கனா, தனது சொந்த மாநிலமான ஹிமாச்சலிலிருந்து தொடங்க வேண்டும். ஒட்டுமொத்த நாடும் போதைப் பொருள் அச்சுறுத்தலைச் சந்தித்துவருகிறது. பாலிவுட்டுக்கான போதைப் பொருள்களின் உற்பத்தியே ஹிமாச்சலில் இருந்துதான் ஆரம்பிக்கிறது என்பது கங்கனாவுக்கு தெரியாதா என்ன... எனவே, போதை மருந்தை ஒழிக்க அவர், தனது சொந்த மாநிலத்திலிருந்து தொடங்க வேண்டும். கங்கனா மும்பை குறித்தும், பாலிவுட் குறித்தும் அருவருக்கத்தக்கக் கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

மேலும், கங்கனா ரணாவத், ஜெயா பச்சனுக்கு எதிராக தெரிவித்திருக்கும் கருத்துகளை கலாசாரமான நல்ல குடும்பத்துப் பெண், யாரும் பேச மாட்டார்கள்” என்றும் கடுமையாகத் தாக்கினார்.

ஊர்மிளா
ஊர்மிளா

``மும்பை அனைவருக்கும் சொந்தமானது என்பதில் சந்தேகமே இல்லை. மும்பையின் மகளான என்னால் அந்த நகரத்துக்கு எதிரான அவமதிப்பு கருத்துகள் சொல்வதைப் பொறுத்துக்கொள்ள முடியாது. இதுபோல் மும்பைக்கு எதிராக ஒரு கருத்தை நீங்கள் சொல்லும்போது, அந்த நகரத்தை மட்டுமல்ல, அந்த நகர மக்கள் அனைவரையும் நீங்கள் அவமரியாதை செய்கிறீர்கள் என்று அர்த்தம். ஒருவர் எப்போதும் கத்திக்கொண்டேயிருந்தால், அவர் சொல்வதெல்லாம் உண்மை என்று அர்த்தமல்ல" என்றார் ஊர்மிளா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு