Published:Updated:

இந்தியாவின் முதல் திருநம்பி விமான ஓட்டி! - கேரள அரசின் உதவியால் நெகிழும் ஆடம் ஹாரி

விமான ஓட்டி
விமான ஓட்டி ( storypick )

தன் சொந்த முயற்சியால் இந்தியாவின் முதல் திருநம்பி விமான ஓட்டியை உருவாக்கியுள்ளது, கேரள அரசு.

இயற்கையின் பிழையால், சமுதாயத்தின் அறியாமையால், சகமனிதர்களால் ஒதுக்கப்பட்டு வாடும், வாழப் போராடும், ஒரு தவறும் அறியாப் படைப்புகளே திருநங்கைகள் மற்றும் திரு நம்பிகள். கடந்த ஏப்ரல் 22 -ம் தேதி, சென்னை உயர் நீதிமன்றம் இந்து திருமணச் சட்டத்தின் கீழ் 'மணப்பெண்' எனும் வார்த்தைக்குள் திருநங்கைகளும் அடங்குவர் எனத் தீர்ப்பளித்து. ஓர் ஆணுக்கும் திருநங்கைக்கும் நடந்த திருமணத்தைப் பதிவு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. ஆனால், இன்றளவும் பல இடங்களில் அவர்களது உரிமைகோரல், போராட்டமாகவே உள்ளது. காலமே நமது பெரும்பாலான குறைகளுக்கு மருந்தாய் அமைய, காலப்போக்கில் சில பெற்றோர்கள் இச்சமூகத்தினரைப் புரிந்துகொண்டு அவர்களது குழந்தைகளுக்கு ஆதரவளித்து வந்தாலும் , பலர் இதைப் புரிந்துகொள்வதில் தவறிவிடுகின்றனர்.

Adam Harry
Adam Harry
storypick

அரசாங்கமும் சமூக அமைப்புகளும் இதன் ஏற்புடைமை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த சிறப்பான முயற்சிகளில் ஈடுபடுகின்றன. எனினும் சில குடும்பங்கள், அவர்களை ஒதுக்கி வைக்கின்றனர். இதேபோன்ற விதியில் விழுந்தவர்தான், கேரளத்தைச் சேர்ந்த ஆடம் ஹாரி. 20 வயதான இவர், திரிசூரைச் சேர்ந்தவர். தனியார் விமான ஓட்டி உரிமம் பெற்றுள்ளார். ஒரு வணிக விமான ஓட்டியாக வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். ஆனால், இவருக்கு நிதியுதவி அளிக்காமல் நிராகரித்தது இவர் குடும்பம்.

``அம்மாவின் மடியில் என் மகன்!''- தாய்மையில் நெகிழும் திருநங்கை அக்காய் பத்மஷாலி!

பிடியற்ற கொடியாய் தள்ளாடிய இவருக்கு உதவ முன்வந்தது கேரள அரசின் சமூக நீதித்துறை. ஆடம் ஹாரிக்கு 23.34லட்சம் ஒதுக்கி, திருவனந்தபுரத்திலுள்ள ராஜீவ் காந்தி அகாடமி ஃபார் ஏவியேஷன் டெக்னாலஜியில் 3 வருடப் படிப்பில் சேர வழிவகை செய்துள்ளது. இதனால், அவர் இந்தியாவின் முதல் திருநம்பி விமான ஓட்டி எனும் பெருமைக்குரியவராகிறார். அரசாங்கத்தின் பேருதவியால் பூரித்துப்போன ஹாரி,"நான் எனது தனிப்பட்ட வாழ்வில் கண்ட பல துன்பங்களால், விமான ஓட்டி ஆகவேண்டும் என்ற சிறுவயதுக் கனவின் நம்பிக்கையை இழந்துவிட்டேன். அந்நேரம், எனக்காக உதவ முன் வந்த கேரள அரசுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்" என்றார்.

Adam Harry
Adam Harry
News 18

விமானப் போக்குவரத்து சீராக்கத்தின், சிவில் விமானப் போக்குவரத்து விதிப்படி, வணிக விமான ஓட்டி உரிமம் பெற விரும்புவோர், 200 மணிநேரத்திற்குக் குறையாமல் ஒரு தனியார் விமான ஓட்டியாகப் பணியாற்றியிருக்க வேண்டும். அதற்கான சாட்சியையும் ஒப்படைக்க வேண்டும். ஹாரி, இத்தகுதியை 2017 -ம் ஆண்டே அடைந்து உரிமமும் பெற்றுவிட்டார். தற்போது, அரசின் உதவியோடு ஜோகனஸ்பெர்க்கில் மேல் பயிற்சியைப் பெற்றுவருகிறார். இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர் சத்தியாஶ்ரீ சர்மிளா, நீதிபதி ஜாயிட்டா, காவல்துறை அதிகாரி பிரித்திகா யாசினி, கல்லூரி தலைமை அதிகாரி மனாபி, எம்.எல்.ஏ சப்னம், ராணுவர் ஷபி, தேர்தல் போட்டியாளர் மும்தாஸ், மருத்துவ உதவியாளர் ஜியா தாஸ், இவர்களின் பட்டியலில் இப்போது ஆடம் ஹாரியை வைத்த பெருமை கேரள அரசையே சேரும். இச்செயல், மற்ற மாநிலங்களையும் ஊக்குவிக்கும் விதமாய் உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு