Published:Updated:

`அப்சல் குருவின் கடிதங்கள் காட்டும் உண்மை முகம்?!'- டிஎஸ்பி தாவீந்தரின் அதிர்ச்சிப் பின்னணி

தாவீந்தர் சிங், அப்சல் குரு
தாவீந்தர் சிங், அப்சல் குரு

ஜம்மு-காஷ்மீரில் இரண்டு தீவிரவாதிகளுடன் போலீஸ் அதிகாரி ஒருவர் கைதானது ஜம்முவில் பதற்றத்தை ஏற்படுத்தியது.

ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதியான சையத் நவீது பாபாவின் நடவடிக்கைகளை ஜம்மு-காஷ்மீர் போலீஸார் கண்காணித்து வந்திருந்தனர். இந்நிலையில், கடந்த 11-ம் தேதி, அவரது செல்போன் அழைப்பு மூலம் ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் பயணிப்பதை உறுதிசெய்தது மாநில காவல்துறை. தேசிய நெடுஞ்சாலையில் பேரிகார்டுகளைக் கொண்டு தடுப்புகளை ஏற்படுத்திய காவலர்கள், வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த வெள்ளைக் காரை போலீஸார் தடுத்துநிறுத்தினர். காரில், தாவீந்தர் சிங் என்ற டிஎஸ்பி இருந்தார். அவரிடம் நடத்திய விசாரணையில், குடும்பத்தினருடன் சென்றுகொண்டிருப்பதாகக் கூறினார். அந்த காரில் மேலும் இரண்டு நபர்கள் இருந்தனர். அவர்கள் தேடப்படும் குற்றவாளிகளான சையத் நவீது மற்றும் ஆசிப் என்பது தெரியவந்தது. இரண்டு தீவிரவாதிகளுடன் டிஎஸ்பி தாவீந்தர் சிங் கைதுசெய்யப்பட்டார். தீவிரவாதிகளுடன் போலீஸ் அதிகாரி ஒருவர் கைதானது, ஜம்முவில் பதற்றத்தை ஏற்படுத்தியது.

தாவீந்தர் சிங்
தாவீந்தர் சிங்

கைது நடவடிக்கைக்குப் பின்னர் தாவீந்தர் சிங் குறித்து வெளியாகும் செய்திகள் அனைத்தும் அதிர்ச்சி ரகமாக உள்ளது. 2001-ம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதலில் குற்றம்சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் கடிதங்கள், தாவீந்தர் சிங்கின் மற்றொரு முகத்தைக் காட்டுகிறது. திகார் சிறையில் இருந்த அப்சல், தன் வழக்கறிஞர் சுஷில் குமாருக்கு எழுதிய கடிதத்தில் தாவீந்தர் சிங் மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவலர்கள் குறித்து பதிவு செய்துள்ளார். இந்தக் கடிதத்தில், தாவீந்தர் சிங்கை (Davinder Singh) திராவீந்தர் (Dravinder) என்று குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

`தீவிரவாதியை ட்ரேஸ் செய்த போலீஸ்... சிக்கிய டி.எஸ்.பி!' - காஷ்மீர் காவல்துறை அதிர்ச்சி

அந்தக் கடிதத்தில், ``காலை 10 மணிக்கு என்னுடைய ஸ்கூட்டரில் பயணித்துக்கொண்டிருந்தேன். அந்த வண்டியை வாங்கி இரண்டு மாதங்கள்தான் ஆகியிருந்தது. வழியில் எஸ்.டி.எஃப் (Special Task Force) அதிகாரி ஒருவர் என்னைத் தடுத்துநிறுத்தினார். புல்லட் ப்ரூஃப் கொண்ட ஜிப்ஸி வாகனத்தில் பைஹல்லான் முகாமுக்கு (Paihallan camp) நான் அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கிருந்த டிஎஸ்பி வினய் குப்தா என்னை டார்ச்சர் செய்தார். அந்த முகாமில் நான் கடுமையான சித்ரவதைக்கு உள்ளானேன்.

எலெக்ட்ரிக் ஷாக் கொடுத்தனர், குளிர்ந்த நீரில் என்னை மூழ்க வைத்து சித்ரவதை செய்தனர். பெட்ரோல், மிளகாய்ப்பொடி ட்ரீட்மென்ட் என சித்ரவதை செய்தார்கள். என்னிடம் ஆயுதங்கள் இருப்பதாகக் கூறினார்கள். மாலையில், இன்ஸ்பெக்டர் ஃபரூக் என்னிடம் வந்து பேசினார். 'உன்னால் ரூ.1,00,000 தர முடியுமா எனக் கேட்டார். இந்தப் பணத்தைக் கொடுத்தால் விட்டுவிடுவார்கள். இல்லையென்றால் கொலை செய்து விடுவார்கள்' எனக் கூறினார்.

காஷ்மீர்
காஷ்மீர்

அதன்பின்னர், ஹம்ஹாமா முகாமுக்கு ( Humhama STF camp) அழைத்துச்செல்லப்பட்டேன். அங்கிருந்த டிஎஸ்பி திராவிந்தர் சிங்கால் நான் சித்ரவதைக்குள்ளானேன். அங்கிருந்த இன்ஸ்பெக்டர் என்னை நிர்வாணமாக்கி 3 மணிநேரம் எலெக்ட்ரிக் ஷாக் கொடுத்து சித்ரவதை செய்தார். குடிப்பதற்கு தண்ணீர் கொடுக்கும்போதும் எலெக்ட்ரிக் ஷாக் கொடுத்தனர். அந்த சித்ரவதைகளைத் தாங்கிக்கொள்ள முடியாமல், அவர்கள் கேட்ட பணத்தைக் கொடுக்க ஒப்புக்கொண்டேன். என் மனைவி நகைகளை எல்லாம் விற்றதில் 80,000 ரூபாய் கிடைத்தது. நான் புதிதாக வாங்கியிருந்த ஸ்கூட்டரை 24,000 ரூபாய்க்கு விற்று பணத்தைக் கொடுத்தனர்.

பணத்தைப் பெற்றுக்கொண்டு என்னை விடுவித்தனர். ஆனால், நான் மனதளவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தேன். ஹம்ஹாமா முகாமில் இருந்த தாரீக், என்னை கடுமையாக எச்சரித்து அனுப்பினார். எஸ்.டி.பி அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மீறினால் மீண்டும் உன்னை டார்ச்சர் செய்வோம். உன்னால் நிம்மதியான வாழ்க்கையை வாழமுடியாது என எச்சரித்தார். நான் டெல்லி பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது, பல்வேறு கோச்சிங் சென்டரில் பயிற்சிகொடுத்தேன். வீட்டிலும் டியூஷன் எடுத்துக்கொண்டிருந்தேன். இந்தத் தகவல் கேள்விப்பட்ட அல்தாஃப் என்பவர், அவருடைய இரண்டு மகன்களுக்கு டியூஷன் சொல்லித் தர வேண்டுகோள் விடுத்தார்.

தலைநகர் டெல்லி
தலைநகர் டெல்லி

அல்தாஃப் எனக்கு நெருக்கமானார். அவர் மூலமாக நான் ஒருநாள் ஹம்ஹாமா எஸ்.டி.எஃப் முகாமில் இருந்த திராவிந்தர் சிங்கை சந்தித்தேன். எனக்கு ஒரு சிறிய உதவி செய்ய வேண்டும் என சிங் கேட்டுக்கொண்டார். டெல்லிக்கு ஒருவரை அழைத்துச்சென்று, அவருக்கு வீடு வாடகைக்கு எடுத்துத் தர வேண்டும் என்றார். எனக்கு டெல்லி நன்கு அறிமுகமாகியிருந்தால், டெல்லிக்குச் சென்று ஒரு வீடு வாடகைக்குப் பிடித்தேன். இதுவரை அந்த நபர் யார் என்று எனக்குத் தெரியாது. அந்த நபர் காஷ்மீரி இல்லை என்பது மட்டும் எனக்குத் தெரிந்தது. அவருக்கு காஷ்மீரி மொழி தெரியவில்லை. அந்தச் சூழலில் என்ன செய்யப்வேண்டும் என எனக்குத் தெரியவில்லை. அவர்கள் கேட்டதைச் செய்வதைத் தவிர எனக்கு வேறுவழியில்லை.

`செங்குத்தான பாறை... 820 அடி உயரம்! - 8 மணிநேரமாகப் போராடிய ஸ்கை டைவிங் வீரரின் `திகில்' அனுபவம்

சிங் ஒருநாள் என்னை போனில் தொடர்புகொண்டு, அந்த நபருக்கு கார் வாங்க வேண்டும் என்றார். இதையடுத்து, அவருடன் சென்று கார் வாங்கினேன். அதன்பின், அந்த நபர் டெல்லியில் சிலரை சந்தித்தார். இதற்கிடையில், திராவிந்தர் சிங்கிடம் இருந்து நிறைய அழைப்புகள் எனக்கு வந்தன. அப்போதுதான் அவரது பெயர் முகமது என்பது தெரியவந்தது. முகமது காஷ்மீர் போக வேண்டும் எனக் கூறினார். அவரை அழைத்துச்சென்றேன் ரூ.35,000 கொடுத்து, இது நான் உனக்கு கொடுக்கும் அன்பளிப்பு என்றார்.

Representation image
Representation image

இந்தச் சம்பவம் நடப்பதற்கு 8 நாள்களுக்கு முன்புதான், நான் என் குடும்பத்துடன் டெல்லிக்குச் சென்றுவிடலாம் என முடிவெடுத்தேன். ஸ்ரீநகர் வாழ்க்கை எனக்கு திருப்திகரமாக இல்லை. டெல்லியில் ஒரு வீட்டை என் குடும்பத்துக்காக வாடகைக்கு எடுத்தேன். `ஈத் பண்டிகை’ முடிந்ததும் திரும்பி வருவேன் என வீட்டு உரிமையாளரிடம் கூறிவிட்டு ஸ்ரீநகர் வந்துவிட்டேன். நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு இங்கு சூழல் சரியில்லை. ஸ்ரீநகரிலிருந்து தாரிக்குக்கு போன் செய்தேன். 'நீ எப்போது டெல்லியிலிருந்து வந்தாய்' என்று கேட்டார். 'ஒரு மணி நேரத்துக்கு முன்புதான் வந்தேன்' என பதிலளித்தேன்.

அடுத்தநாள் காலை, ஸ்ரீநகர் பேருந்து நிலையத்தில் வைத்து போலீஸார் என்னைக் கைதுசெய்தனர். என்னை பாரம்போரா காவல்நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். எஸ்.டி.எஃப் அதிகாரிகளுடன் தாரிக் அங்கு நின்றிருந்தார். என் பாக்கெட்டில் இருந்த 35,000 ரூபாயை தாரிக் எடுத்துக்கொண்டு என்னை கடுமையாகத் தாக்கினார். அங்கிருந்து எஸ்.டி.எஃப் தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டேன். கண்களைக் கட்டி டெல்லிக்கு அழைத்துவந்தனர். நான், போலீஸாரின் சித்ரவதை முகாமில் இருந்ததை அப்போது உணர்ந்தேன்.

கைது
கைது

அங்கிருந்த காவலர்களிடம், முகமது குறித்து எனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் கூறினேன். என் தம்பி அஹம்து குருவை எஸ்.டி.எஃப் பிடித்து வைத்திருப்பதாகக் கூறினர். அவர்களுக்கு ஒத்துழைக்கவில்லையென்றால், என் குடும்பத்தினரைப் பிடித்துச் சென்றுவிடுவோம் என மிரட்டினர். நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் நான் காஷ்மீரின் சிறப்புப் பணிக்குழுவால் (Special Task Force) சிக்கினேன். டெல்லியில், எஸ்.டி.எஃப் உடன் பணிபுரியும் சிறப்பு காவல்துறை அதிகாரிகள் அளித்த தகவலின் அடிப்படையில், நீதிமன்றம் எனக்கு மரண தண்டனை விதித்தது.

ஸ்ரீநகரில் கைதுசெய்யப்பட்டபோது, நான் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பேசினால், என் குடும்பத்தினருக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது என சிறப்பு போலீஸார் என்னிடம் சொன்னார்கள். மேலும், அவர்கள் எனது வழக்கை பலவீனப்படுத்துவார்கள் என்ற பொய்யான உறுதிமொழியையும் கொடுத்தார்கள். இதனால் சிறிது நாள்களில் நான் விடுவிக்கப்படுவேன் என நம்பினேன். எஸ்.டி.ஃப் சித்ரவதைகளுக்கும் கொடுமைகளுக்கும் நானே சாட்சி” என்று எழுதப்பட்டிருந்தது.

 காஷ்மீர்
காஷ்மீர்

இந்தக் கடிதத்தில் உள்ள தகவல்கள், தற்போது பூதாகரமாகியுள்ளது. தீவிரவாதிகளை எப்படி நடத்துவோமோ அதேபோல்தான் தாவீந்தர் சிங்கும் நடத்தப்படுவார் என ஜம்மு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீவிரவாதிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டதற்கான காரணங்களை ஆராய்ந்து வருகிறோம். பணத்திற்காக மாறினாரா அல்லது வேறு காரணங்கள் இருக்குமா என்பது குறித்து விசாரித்துவருகிறோம்' என ஜம்மு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

News Source - ThePrint

அடுத்த கட்டுரைக்கு