Published:Updated:

IndiaChinaFaceOff: `எல்லை விரிவாக்கத்தின் வயது முடிந்துவிட்டது’ - பிரதமர் மோடி

லடாக்கில் பிரதமர் மோடி
லடாக்கில் பிரதமர் மோடி ( ANI )

இந்திய - சீனா தாக்குதல் நடந்த லடாக் பகுதியில் இந்திய ராணுவ வீரர்களை நேரில் சந்தித்து உரையாடியுள்ளார் பிரதமர் மோடி.

கொரோனா பரவலுக்கு மத்தியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான எல்லைப் பிரச்னை தொடர்ந்து வருகிறது. கடந்த மாதம் 15-ம் தேதி கல்வான் பள்ளதாக்கு பகுதியில் இருநாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே நடந்த தாக்குதலில் இரு தரப்பிலும் பல்வேறு உயிரிழப்புகள், காயங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தப் பிரச்னையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

லடாக்கில் பிரதமர் மோடி
லடாக்கில் பிரதமர் மோடி
ANI

இதற்கிடையில் இந்தியப் பிரதமர் மோடி இன்று காலை திடீரென லடாக் பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு லடாக்கின் நிம்மூ (Nimmoo) பகுதியில் ராணுவ வீரர்களை நேரில் சந்தித்து அவர்கள் முன் உரையாற்றினார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, ``நீங்களும் (ராணுவ வீரர்கள்) உங்கள் தோழர்களும் காட்டிய துணிச்சல் இந்தியாவின் வலிமையை உலகத்துக்குக் காட்டியுள்ளது. நம் வீரர்களின் மனஉறுதி மலையைவிட அதிகமாக உள்ளது.

IndiaChinaFaceOff `மோதல் நடந்த எல்லைப் பகுதி’ -லடாக்கில் பிரதமர் மோடி

கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நடந்த தாக்குதலில் நாட்டுக்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரர்களுக்கு மீண்டும் என் அஞ்சலியைச் செலுத்திக்கொள்கிறேன். உங்கள் பலம், தியாகம் மற்றும் சேவைப் பணிகளால் இந்தியாவின் தன்னம்பிக்கை மேலும் வலுவடைந்துள்ளது. தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் துணிச்சல் எல்லா இடங்களிலும் பேசப்படும். உங்கள் வீரம் பற்றிய கதைகள் நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் எதிரொலிக்கின்றன.

ராணுவ வீரர்கள்
ராணுவ வீரர்கள்
ANI

பாரத மாதாவின் எதிரிகள் உங்கள் தாக்குதலையும் கோபத்தையும் கண்டுள்ளனர். பலவீனமானவர்கள் ஒருபோதும் அமைதியை ஆரம்பிக்க மாட்டார்கள். துணிச்சல் என்பது அமைதிக்கு முன்வருவது. உலகப் போராக இருந்தாலும் சரி, சமாதானமாக இருந்தாலும் சரி நமது துணிச்சல், வெற்றி மற்றும் அமைதியை நோக்கிய முயற்சியை உலகம் கண்டிருக்கிறது. மனிதகுலத்தின் முன்னேற்றத்துக்காக நாம் பணியாற்றியுள்ளோம். அமைதியாகப் புல்லாங்குழல் வாசிக்கும் கிருஷ்ணனை ஜெபிக்கும் நாம்தான் சுதர்ஷன சக்கரத்தைச் சுமக்கும் கிருஷ்ணரைப் பின்பற்றவும் செய்கிறோம்.

எல்லை விரிவாக்கத்தின் வயது முடிந்துவிட்டது. இது நம் நாட்டின் வளர்ச்சிக்கான நேரம். எல்லை விரிவாக்கம் சக்தி இழந்துவிட்டன அல்லது அதற்காகப் போர் தொடுத்தவர்கள் திரும்பிச் செல்ல நிர்பந்திக்கப்பட்டனர் என்பதற்கு வரலாறு சாட்சி. லே, லடாக் முதல் சியாச்சின் மற்றும் கார்கில் வரை இருக்கும் ஒவ்வொரு மலையும் ஒவ்வொரு சிகரமும் இந்திய வீரர்களின் வீரத்துக்கான சாட்சி” என்று பேசியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு