Published:Updated:

போலீஸ் இன்ஸ்பெக்டர் டு ஹீரோ..! - கனவை நனவாக்கிய `போஜ்புரி நாயகன்' ஓஜா

ஆனந்த் குமார் ஓஜா
ஆனந்த் குமார் ஓஜா

`வாட்ச்மேன் வேலை பார்த்துக்கொண்டே ஒவ்வொரு ஸ்டூடியோவாகச் சென்று வாய்ப்பு தேடி வந்தேன். ஆனால், நான் எதிர்பார்த்தபடி எதுவும் அமையவில்லை. என்னால் சினிமாவில் வாய்ப்பு பெற முடியவில்லை.'

சிலருக்கு சினிமாமீது பேரார்வம் இருக்கும். எப்படியாவது சினிமாவில் ஸ்டார் ஆகிவிட வேண்டும், ஒரு படத்தில் ஒரு சீன் மட்டுமாவது நடித்து விட வேண்டும் என்பது பலருக்குக் கனவாக இருக்கும். ஆனால், சூழ்நிலை காரணமாக சினிமாவில் வாய்ப்பு தேடுவதைவிடுத்து வேறு வேலைக்கு செல்பவர்களைப் பார்த்திருப்போம். சினிமா மட்டுமல்ல தான் ஆசைப்பட்ட வேலையைச் செய்ய முடியாமல் வேறொரு வேலையில் சூழ்நிலை காரணமாக இருப்பது இயல்பாகிவிட்டது. இதை மாற்றிக்காட்டிய ஒருவரின் கதைதான் இது.

ஆனந்த் குமார் ஓஜா
ஆனந்த் குமார் ஓஜா

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் 40 வயதான ஆனந்த் குமார் ஓஜா. இவர் அம்மாநில டிராஃபிக் போலீஸில் இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்து வருகிறார். இன்ஸ்பெக்டராக இருக்கும் அதேநேரம் போஜ்புரி சினிமா இண்டஸ்ட்ரியின் நாயகனும்கூட. எப்படி என்று கேட்கிறீர்களா... ஓஜாவுக்கு சிறுவயது முதலே சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது ஆசை. இதற்காக பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே தனது ஊரில் இருந்து யாருக்கும் தெரியாமல் மும்பைக்குச் செல்ல முற்பட்டுள்ளார். ஆனால், அது கைகூடவில்லை. இருந்தாலும் சோர்ந்து போகவில்லை.

`நோவா மட்டும் இல்லையென்றால்..?!' - தீ விபத்திலிருந்து குடும்பத்தையே காப்பாற்றிய`லிட்டில் ஹீரோ'

இதன்பின் கல்லூரியில் படிக்கும்போது வீட்டுக்குத் தெரியாமல் மும்பைக்குப் பயணமாகியுள்ளார். அப்போது அவரை சினிமா உலகம் நிராகரித்துவிட்டது. வாய்ப்புகள் கிடைக்காததால் அதன்பின்பு ஊருக்குத் திரும்பியவர் உத்தரப்பிரதேச காவல்துறையில் சேர்ந்துள்ளார். ஆனால், விடாமல் கனவை துரத்தியதன் காரணமாக சிறுவயதில் தான் நினைத்ததை 40 வயதில் சாத்தியமாக்கியுள்ளார் ஓஜா.

``சினிமா மீதான காதல் காரணமாக பள்ளி நாள்களிலேயே வெறும் 20 ரூபாயை வைத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி மும்பைக்குப் புறப்பட்டேன். ஆனால், ரயில் டிக்கெட் பரிசோதகரால் அடையாளம் காணப்பட்டு நான் வீடு திரும்ப நேர்ந்தது. சில ஆண்டுகள் கழித்து எனது சினிமா ஆர்வத்தைத் தெரிந்துகொண்டு என் நண்பர்கள் ரூ.500 வசூல் செய்து என்னை மும்பைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சென்று சினிமா வாய்ப்பு தேடினேன். வாட்ச்மேன் வேலை பார்த்துக்கொண்டே ஒவ்வொரு ஸ்டூடியோவாகச் சென்று வாய்ப்பு தேடி வந்தேன். ஆனால், நான் எதிர்பார்த்தபடி எதுவும் அமையவில்லை. என்னால் சினிமாவில் வாய்ப்பு பெற முடியவில்லை.

ஆனந்த் குமார் ஓஜா
ஆனந்த் குமார் ஓஜா

பிறகு, என் தந்தை மும்பைக்கு வந்து என்னை மீண்டும் ஊருக்கே அழைத்துச் சென்றார். எனது நடிப்புத் திறனைப் பற்றியோ, நான் சினிமாவில் நடிப்பதையோ அவர் விரும்பவில்லை. காரணம் அப்பா என்னை ஒரு அரசு ஊழியர் ஆக்க வேண்டும் என எண்ணினார். அப்போது ஒருமுறை வாரணாசியில் போலீஸ் பணிக்கு ஆள் எடுப்பதாகவும் அங்கு செல்லவுள்ளதாகவும் என் நண்பர்கள் கூறினர்.

இதைச் சாக்காக வைத்துக்கொண்டு அவர்களுடன் நானும் செல்வதாக என் அப்பாவிடம் அனுமதி வாங்கிச் சென்றேன். முதலில் நான் மும்பைக்குச் செல்லலாம் என்பதற்காகத் தந்தையிடம் பொய் சொல்லி அனுமதி வாங்கினேன். ஆனால், வாரணாசியை அடைந்தவுடன் எனது எண்ணம் மாறியது. என் தந்தையின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என எண்ணி நானும் அவர்களுடன் காவலர் தேர்வில் கலந்துகொண்டேன். அந்தத் தேர்வில் வெற்றியும் பெற்றேன்.

`ஊருக்குத்தான் அவர் தாத்தா.. எங்களுக்கு ஹீரோ!' -93 வயது தியாகியின் மரணத்தால் கலங்கிய மாணவர்கள்

ஒருமுறை நான் முன்னாள் முதல்வர் முலாயம் சிங் கான்வாய் பிரிவில் இடம்பெற்றிருந்தபோது அவருடன் நான் மும்பை செல்ல நேர்ந்தது. அப்போது போஜ்புரி சினிமாவின் தயாரிப்பாளர்களில் ஒருவரான நிர்மல் பாண்டேவை சந்தித்து அவர் நடத்திய ஆடிஷனில் கலந்துகொண்டேன். அதில் நான் செலக்ட்டாக அவரின் படத்தில் லீடிங் ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது" என்று தனது பழைய நினைவுகளை அசைபோடும் ஓஜா, இப்போது போஜ்புரி சினிமாவில் வளர்ந்துவரும் ஒரு ஹீரோ.

2013-ல் அவர் நடிப்பில் முதல் படம் வெளிவந்தது. தொடர்ந்து அவர் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அதேநேரம் சினிமாவில் நடிப்பதற்காக தனது போலீஸ் வேலையை விடவில்லை. கடந்த மாதம் வரை லக்னோவில் பணி புரிந்துவந்தவர் சமீபத்தில் ஆக்ரா நகருக்கு டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டுள்ளார்.

ஆனந்த் குமார் ஓஜா
ஆனந்த் குமார் ஓஜா

சினிமாவில் நடிப்பதற்காக காவல்துறை வேலையில் கவனம் செலுத்தாமல் இல்லை. சினிமா ஷூட்டிங் இல்லாத நாள்களில் போலீஸ் உடையில் ஆக்ராவின் முக்கிய சாலைகளில் இன்ஸ்பெக்டராக அவரைக் காண முடியும். சினிமாவில் நடிப்பதற்காக எந்த விடுமுறையும் இதுவரை ஓஜா எடுத்ததில்லை என்கின்றனர் அவரின் மூத்த அதிகாரிகள்.

"வாழ்க்கையில் தங்கள் கனவை துரத்த விரும்புவோருக்கு ஓஜா ஒரு சிறந்த உதாரணம். ஒரு போலீஸ்காரராகவும் அவர் நல்ல எடுத்துக்காட்டாக இருக்கிறார். அவரை எப்போது தொடர்புகொண்டாலும் பணிக்கு வரத் தயாராக இருப்பார். சினிமாவில் நடிப்பதற்காக இதுவரை அவர் வேலையில் சமரசம் செய்துகொண்டதில்லை. படப்பிடிப்பில் கலந்துகொள்ள தனது வருட விடுமுறை நாள்களையே அவர் பயன்படுத்துகிறார்" என்கிறார் அவரின் மூத்த அதிகாரி சதீஷ் ராய்.

Vikatan

ஓஜா ரீல் லைஃப்பில் மட்டும் ஹீரோ இல்லை. ரியல் லைஃப்பிலும் ஹீரோதான். சில வருடங்களுக்கு முன்பு லக்னோவில் ஓஜா பணியில் இருந்தபோது 22 வயது கல்லூரிப் பெண்ணை சில மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர். அவர்களிடமிருந்து இளம்பெண்ணைத் தைரியமாக மீட்டெடுத்து மீடியாக்களில் வைரலானார்.

அமிதாப் பச்சனை தனது ரோல் மாடலாகக் கொண்டுள்ள ஓஜா, தனது வேலைப்பளுவை எப்படிச் சமாளிக்கிறார் என்பது குறித்து பேசியுள்ளார். அதில், ``எனது விடுமுறை நாள்கள் பெரும்பாலும் ஷூட்டிங்கிலேயே கழிந்துவிடுவதால் என் குடும்பத்தினரை சந்திப்பதில் சிரமம் இருந்தது.

ஆனந்த் குமார் ஓஜா
ஆனந்த் குமார் ஓஜா

அதனால்தான் இப்போது எல்லாம் அவர்களை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே குடும்பத்தினரை வரவழைத்து ஓய்வு நேரத்தை அவர்களுடன் செலவழிக்கிறேன்" எனக் கூறும் ஓஜா, இப்போது ஐந்து போஜ்புரி படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் ஒரு படத்தின் படப்பிடிப்புக்காக வரும் ஏப்ரலில் ஐரோப்பா செல்லவுள்ளார்.

இன்னொரு கூடுதல் தகவல். சினிமாவில் நடிப்பதற்காக அவர் இதுவரை சம்பளம் எதுவும் பெரிதாக வாங்கிக்கொண்டதில்லையாம். போலீஸ் வேலையில் அரசாங்க சம்பளமே போதும் என்றும், நடிப்பின் மீதான ஆர்வம் காரணமாகவே சினிமாவில் நடித்து வருவதாகவும் அதனால் சம்பளத்தைப் பற்றிக் கவலையில்லை என்றும் கூறுகிறார் இந்த ரீல் அண்ட் ரியல் ஹீரோ.

photo and news credit - timesofindia

Vikatan
அடுத்த கட்டுரைக்கு