பா.ஜ.க மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜுக்கு நேற்று இரவு 9 மணியளவில் நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 9.30 மணியளவில் அழைத்துச் செல்லப்பட்டார். இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சிறப்பு மருத்துவ குழுவின் கண்காணிப்பில் அவர் வைக்கப்பட்டிருந்தார். 70 நிமிடங்களுக்கு மேலாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவரது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. தொடர்ந்து மோசமாக சென்றுகொண்டிருந்தது. இரவு 10.50 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். சுஷ்மா ஸ்வராஜின் உடல் 12.15 மணிக்கு மருத்துவமனையிலிருந்து எடுத்துச்செல்லப்பட்டது.

சுஷ்மாவின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் வைக்கப்படவுள்ளது. அண்மையில் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், மாரடைப்பு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சுஷ்மா ஸ்வராஜ் 1998-ம் ஆண்டு டெல்லியின் முதல் பெண் முதலமைச்சராக 52 நாள்கள் பணியாற்றினார். 7 முறை மக்களவை எம்.பி-யாகவும் இருந்துள்ளார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவர், இரண்டாவது முறையாக மோடி தலைமையிலான பா.ஜ.க பதவி ஏற்றபோது, உடல்நிலை பாதிப்பு காரணமாக அமைச்சர் பதவியை மறுத்தார். சுஷ்மா ஸ்வராஜ் காஷ்மீர் தொடர்பாக பிரதமர் மோடிக்கு நன்றி கூறி ட்வீட் செய்திருந்தார். அதில் ``பிரதமர் மோடிக்கு நன்றி. எனது வாழ்க்கையில் இந்த நாளை பார்ப்பதற்குதான் காத்துக்கொண்டிருந்தேன்" என்று இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பதிவிட்டிருந்தார்.

சுஷ்மாவின் மரணத்தோடு கடந்த ஒருவருடத்தில் டெல்லி தனது மூன்று முன்னாள் முதல்வர்களை இழந்துள்ளது. மூன்று முறை டெல்லி முதல்வராக இருந்த காங்கிரஸ் தலைவர் ஷீலா தீக்ஷித் கடந்த ஜூலை மாதத்தில் உயிரிழந்தார். 1993-96 காலகட்டத்தில் டெல்லியின் முதல்வராக இருந்த மதன் லால் குரானா கடந்தாண்டு அக்டோபர் மாதம் காலமானார்.