Published:Updated:

ஊரடங்கில் முதன்முறை... கோவை டு மங்களூர்! - மருத்துவ சிகிச்சைக்குப் பறந்த ஏர் ஆம்புலன்ஸ்

ஏர் ஆம்புலன்ஸ்
ஏர் ஆம்புலன்ஸ்

தொழிலதிபர் ஒருவர் சிகிச்சைக்காக, கோவையில் இருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மங்களூர் சென்றார்.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் அனைத்து வகையான போக்குவரத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே வர வேண்டுமென்று மத்திய, மாநில அரசுகள் கூறியுள்ளன.

கோவை
கோவை

மேலும், திருமணம், மரணம், மருத்துவ அவசரம் போன்றவற்றுக்கு மட்டுமே அரசின் அனுமதியுடன் பயணம் செய்ய முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் மருத்துவமனைகளும் கடுமையான விதிமுறைகளுக்குட்பட்டே இயங்கி வருகின்றன. பிரசவம் மற்றும் மிகவும் அவரச சிகிச்சைகளுக்கு மட்டுமே மருத்துவமனைகள் அனுமதித்து வருகின்றன.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் மங்களூரைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர், பணி நிமித்தமாகச் சில மாதங்களுக்கு முன்பு நீலகிரி வந்துள்ளார். வந்த இடத்தில் அவருக்கு முடக்குவாதம் ஏற்பட்டு உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.

கோவை
கோவை

இதனிடையே, போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டதால், அவர் மேல் சிகிச்சைக்காக மங்களூர் செல்ல முடியாமல் தவித்துள்ளார். இந்நிலையில் அவசர சிகிச்சைக்காக அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியோடு நோயாளிகளை ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மற்ற பகுதிகளுக்குச் செல்லலாம் என்று மத்திய அரசு கடந்த வாரம் ஆணை பிறப்பித்திருந்தது.

இதையடுத்து, தொழிலதிபர் சார்பில் ஏர் ஆம்புலன்ஸ் சேவை மூலம் மங்களூர் செல்ல வேண்டுமென்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. அவரின் மனுவை ஏற்றுக்கொண்ட மாவட்ட நிர்வாகம், மேல் சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அவர் மங்களூர் செல்வதற்கு அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து டெல்லியிலிருந்து ஏர் ஆம்புலன்ஸ் கோவைக்கு வரவழைக்கப்பட்டது.

ஏர் ஆம்புலன்ஸ்
ஏர் ஆம்புலன்ஸ்

பிறகு, கோவை விமான நிலையத்திலிருந்து நேற்று மாலை 6.45 மணிக்கு ஏர் அவர் ஆம்புலன்ஸில் மங்களுர் புறப்பட்டார். உடன் அவரின் மனைவியும் சென்றார். இரவு 7.45 மணிக்கு அவர் மங்களூர் சென்றுவிட்டார். அங்கு அவருக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு காலத்தில், தமிழகத்தில் இருந்து ஒருவர் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் பயணம் செய்திருப்பது இதுவே முதல்முறை குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு