Published:Updated:

சத்தீஸ்கர்:`மரம் மட்டுமே பிடிப்பு; 16 மணி நேரம்!’ - வெள்ளத்தில் இளைஞரின் `திக் திக்’ போராட்டம் #Video

வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட சத்தீஸ்கர் இளைஞர்
வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட சத்தீஸ்கர் இளைஞர் ( Bilaspur police )

சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூரில் அணைப் பகுதி வெள்ளத்தில் சிக்கி 16 மணி நேரத்துக்கும் மேலாகத் தவித்தவரை விமானப்படை வீரர்கள் மீட்டனர்.

நாடு முழுவதும், பல்வேறு பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துவருகிறது. பீகார், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களின் பல பகுதிகளில் வசிக்கும் மக்கள் மழையால் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். தாழ்வான பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுவருகின்றனர்.

வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட சத்தீஸ்கர் இளைஞர்
வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட சத்தீஸ்கர் இளைஞர்
Bilaspur police

சத்தீஸ்கர் மாநிலத்திலும் கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் தொடர்மழையால் நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பல இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுக்மா மாவட்டத்தின் பல பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டுவருகிறது. தொடர்மழையால் சபரி உள்ளிட்ட நதிகளில் அதிக அளவு வெள்ளம் பாய்ந்தோடுகிறது. அதேபோல், கோதாவரி நதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால், மாநிலம் முழுவதும் வெள்ளத் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் பூபேஷ் பாகெல் உத்தரவிட்டிருக்கிறார். பீஜப்பூர், தாண்டேவாடா மற்றும் சுக்மா மாவட்டங்களின் பகுதிகளை உள்ளடக்கிய தெற்கு பஸ்டர் பகுதிகள் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு, மூன்று நாள்களாகப் பெய்துவரும் தொடர்மழையால் பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. பீஜப்பூர் மாவட்டத்தில் மட்டும் ஏறக்குறைய 100 கிராமங்களில் மின்சார வசதி மற்றும் போக்குவரத்து போன்றவை துண்டிக்கப்பட்டுள்ளன.

வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட சத்தீஸ்கர் இளைஞர்
வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட சத்தீஸ்கர் இளைஞர்
Bilaspur police

இந்தநிலையில், பிலாஸ்பூர் அருகே குடாகட் அணைப் பகுதியில் வெள்ளத்தில் சிக்கி 16 மணி நேரத்துக்கும் மேல் போராடிய இளைஞர் ஒருவர் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டிருக்கிறார். குடாகட் அணைப் பகுதி, அப்பகுதியில் பிரபலமான சுற்றுலாத்தலம். ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை தினங்களில் மக்கள் அதிக அளவில் அங்கு வருவதுண்டு. அந்தவகையில், குடாகட் அணைக்குச் சுற்றிப்பார்க்க வந்த இளைஞர் ஒருவர், அணையின் உபரிநீர் வழிந்தோடும் கால்வாயில் குளிப்பதற்காக நேற்று மாலை இறங்கியிருக்கிறார்.

Vikatan

தொடர்மழையால் அணையிலிருந்து அதிகப்படியான நீர் வெளியேறிவந்த நிலையில், அந்த இளைஞர் இறங்கிய பின்னர் கால்வாயில் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இதனால், கால்வாயைவிட்டு வெளியேற முடியாமல் அவர் சிக்கியிருக்கிறார். நீர் மட்டம் அதிகரித்த நிலையில், கால்வாயில் இருந்த கல் ஒன்றின்மீது அமர்ந்துகொண்டு அங்கிருந்த மரத்தைப் பிடித்தவாறே உதவிக்காகக் காத்திருந்திருக்கிறார். இது குறித்து பிலாஸ்பூர் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் வந்து இளைஞரை மீட்க எடுத்த முயற்சிகள் பலனளிக்காமல் போகவே, விமானப்படையின் உதவி கோரப்பட்டது.

இதையடுத்து, விமானப்படையின் எம்.ஐ-17 ரக ஹெலிகாப்டர் மூலம் அந்த இளைஞர் மீட்கப்பட்டிருக்கிறார். வெள்ளத்தில் சிக்கி, 16 மணி நேரத்துக்கும் மேலாகப் போராடிய அந்த இளைஞரை இந்திய விமானப் படை வீரர்கள், ஹெலிகாப்டரிலிருந்து கயிறு மூலம் இன்று காலை மீட்டனர். விமானப்படை வீரர்களின் மீட்புப் பணி பரவலாகப் பாராட்டைப் பெற்றுள்ளது. இது குறித்த தகவலை ட்விட்டரில் பகிர்ந்துள்ள பிலாஸ்பூர் காவல்துறையினர், விமானப்படை வீரர்களுக்குப் பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு