பொதுத்துறை நிறுவனமாக இருந்த ஏர் இந்தியா ஜனவரி 27 முதல் டாடா குழுமத்தின் அங்கமாக இணைந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயண சேவைகளை வழங்கி வரும் ஏர் இந்தியா நிறுவனத்தின் AI -822 என்கிற விமானம் ஸ்ரீநகரில் இருந்து புறப்பட 2 மணிநேரம் அளவிற்குத் தாமதமானதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். விமானத்தில் எலி இருந்ததே இந்தத் தாமதத்திற்குக் காரணம். எலியை விமான ஊழியர்கள் போராடி அப்புறப்படுத்திய பிறகே விமானம் புறப்பட்டது. இந்தச் சம்பவத்தின் மீதான விசாரணையை விமான போக்குவரத்து ஆணையம் தொடங்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஏர் இந்தியா, இந்த நிகழ்வு குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

இதே போன்ற ஒரு சம்பவம் கடந்த வருடத்திலும் நடந்தது. இங்காவது நிற்கிற விமானத்தில் எலி இருப்பதைக் கண்டறிந்தனர். கடந்த வருடம் நடந்த நிகழ்வில் டெல்லியில் இருந்து புறப்பட்ட விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது விமானத்துக்குள் வௌவால் ஒன்றைக் கண்டறிந்தனர். பைலட் ஒரு யு-டர்ன் போட்டு புறப்பட்ட இடத்திற்கே விமானத்தைக் கொண்டு வந்தார். அந்த விமானமும் ஏர் இந்தியா உடையதுதான்.
