Published:Updated:

`39 ஆண்டுகள்; 4,250 மணிநேரம் வானில் பறந்த அனுபவம்; ரஃபேல் குழு!' - யார் இந்த ஆர்.கே.எஸ்.பதாரியா?

தற்போது, இந்திய விமானப்படையின் துணைத் தளபதியாக இருக்கும் ஆர்.கே.எஸ்.பதாரியாவையே புதிய தளபதியாக நியமிக்க முடிவு!

RKS Bhadauria
RKS Bhadauria

இந்திய விமானப்படையின் தளபதியாக இருக்கிறார், பி.எஸ்.தனோவா. இவரின் பதவிக்காலம் வரும் 30-ம் தேதியோடு முடிவடைய உள்ளது. புதிய தளபதி தேர்வில் தீவிரம் காட்டிவந்த மத்திய அரசு, தற்போது இந்திய விமானப்படையின் துணைத் தளபதியாக இருக்கும் ஆர்.கே.எஸ்.பதாரியாவையே புதிய தளபதியாக நியமிக்க முடிவுசெய்து அறிவித்துள்ளது.

RKS Bhadauria
RKS Bhadauria

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், தனோவா ஓய்வுபெறும் நாளிலேயே பதாரியாவும் ஓய்வுபெற இருந்தார். ஆனால், மத்திய அரசு அவரை அடுத்த தளபதியாக அறிவித்துள்ளது. அதனால், இவர் அடுத்த மூன்று வருடங்களுக்கு அல்லது 62 வயது வரை தளபதியாக இருக்க முடியும்.

``இக்கட்டான நிலையிலும் பல உயிர்களைக் காப்பாற்றிய விமானியின் நிதானம்!” - விமானப்படை பெருமிதம் #Video

யார் இந்த ஆர்.கே.எஸ்.பதாரியா?

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ள கோர்த் என்ற கிராமத்தில் பிறந்தவர்தான் இந்த ராகேஷ் குமார் சிங் பதாரியா என்கிற ஏர் மார்ஷல் ஆர்.கே.எஸ்.பதாரியா. இந்திய விமானப்படையின் சிறந்த விமானிகளில் ஒருவராக அறியப்படும் பதாரியா, வங்கதேசத்தில் உள்ள பாதுகாப்புக் கல்லூரியில் தனது மாஸ்டர் டிகிரியை முடித்துள்ளார். கடந்த 1980ம் ஆண்டு போர் விமானியாக இந்திய விமானப்படையில் சேர்ந்தார். 26 வகையான போர் மற்றும் போக்குவரத்து விமானங்களை இயக்கியவர். மொத்தம் 4,250 மணி நேரம் பறந்த அனுபவம் கொண்டவர்.

RKS Bhadauria
RKS Bhadauria

பைலட் பயிற்றுவிப்பாளர், கேட் 'ஏ' பிரிவின் பைலட் தாக்குதல் பயிற்றுவிப்பாளர், சோதனை பைலட்டாகப் பல்வேறு படிநிலைகளில் பணியாற்றியவர் இவர். தனது திறமையான செயல்பாடு காரணமாக, அதி விஷித் சேவா, பரம் விசித் சேவா விருதுகளையும் வென்றுள்ளார். முதல் உள்நாட்டுப் போர் விமானமான தேஜஸ் குறித்த இன்ஸ்டிட்யூட்டிலும் கமாண்டிங் ஆபீஸராக இருந்துள்ள பதாரியா, இன்னொரு முக்கியக் குழுவிலும் இருந்துள்ளார். மத்திய பா.ஜ.க அரசின் மிக முக்கிய செயலும், சர்ச்சைக்குரிய செயலாகவும் மாறிய 36 ரஃபேல் விமானங்களை வாங்கிய பேச்சுவார்த்தைக் குழுவில் இருந்தவரில் ஒருவர்தான் பதாரியா. ரஃபேல் டீலின்போது தந்திரமான பேச்சுவார்த்தைகளை கையாண்டவர் என்று மற்றவர்களால் பதாரியா பாராட்டுகளையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Vikatan

மரபை உடைத்த மத்திய அரசு!

பாதுகாப்புத் துறையில் இதுவரை சீனியாரிட்டி அடிப்படையிலேயே தளபதிகள் தேர்வு நடைபெற்றுவந்தது. ஆனால், கடந்த முறை ஆட்சிக்கு வந்த பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு, இந்த பாரம்பர்ய மரபை உடைத்தது. ராணுவத் தளபதி தேர்வில் இருந்தே இதைத் தொடங்கலாம். 2016ல் இரண்டு பேர் சீனியர்கள் இருந்தும் அவர்களைவிட அனுபவம் குறைந்த பிபின் ராவத் ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார். தற்போது, விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா நியமனமும் அப்படித்தான். அருப் ரஹா சீனியராக இருந்தும் விமானப்படை தளபதி வாய்ப்பு பி.எஸ்.தனோவாவுக்குச் சென்றது.

RKS Bhadauria
RKS Bhadauria

இந்த முடிவுகள் சர்ச்சையை ஏற்படுத்தத் தவறவில்லை. தன்னை விட சீனியாரிட்டி குறைவாக இருக்கும் கரம்பீர் சிங்கை கடற்படைத் தளபதியாக அரசு நியமித்துள்ளது என பிமல் வர்மா தீர்ப்பாயத்தின் கதவைத் தட்டியுள்ளார். ஆனால் மத்திய அரசோ, தளபதிகள் தேர்வு சீனியாரிட்டி அடிப்படையில் இல்லாமல் தகுதியின் அடிப்படையில்தான் நடக்கிறது என்று வாதிட்டுவருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான், பதாரியா புதிய விமானப்படை தளபதியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஏழு கால்பந்து மைதான அளவில் தடுப்புக் காவல் முகாம்! - அஸ்ஸாமில் வேகமெடுக்கும் மத்திய அரசு