Election bannerElection banner
Published:Updated:

மகாராஷ்டிரா: மது கிடைக்காததால் போதைக்கு சானிடைஸரைக் குடித்த 7 பேர் பலி!

சானிடைஸர்
சானிடைஸர்

லாக்டெளனில் மதுபானத்துக்குத் தடை விதிக்கப்பட்ஃபிருப்பதால் கை சுத்தப்படுத்த பயன்படும் சானிடைஸரைக் குடித்த ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பரவல் தீவிரமாக இருக்கும் காரணத்தால், மகாராஷ்டிரா முழுக்கக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் அத்தியாவசியப் பயன்பாட்டுக் கடைகள் தவிர்த்து மதுபான கடைகள் உட்பட பிற கடைகளைத் திறக்க அனுமதிக்கப்படவில்லை. இந்தக் கட்டுப்பாடுகள் வரும் ஒன்றாம் தேதி வரை அமலில் இருக்கும். இந்தத் தடையால் மதுப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் மிகவும் திண்டாட்டத்துக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

அப்படி மது கிடைக்காமல் தவித்த மகாராஷ்டிரா மாநிலம், யவத்மால் மாவட்டத்திலுள்ள வானி என்ற கிராமத்தைச் சேர்ந்த தத்தாவும், அவருடைய நண்பர்கள் ஆறு பேரும் எங்காவது மது கிடைக்குமா என்று தேடி அலைந்திருக்கின்றனர்.

மது வகைகள்
மது வகைகள்

அவர்கள் எதிர்பார்த்தது போன்று எங்கும் மது கிடைக்கவில்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்திருக்கின்றனர். மது குடிக்காமல் அவர்களால் இருக்க முடியவில்லை. அப்போதுதான் அவர்களுக்குக் கைகளைச் சுத்தப்படுத்தப் பயன்படும் சானிடைஸரில் குறிப்பிடத்தக்க அளவு ஆல்கஹால் இருப்பது நினைவுக்கு வந்திருக்கிறது. உடனே அவர்கள் தலா ஒரு பாட்டில் சானிடைஸரை வாங்கிக் குடித்திருக்கின்றனர். அவர்கள் குடித்த சிறிது நேரத்தில் வயிறு மற்றும் வாய் எரிய ஆரம்பித்திருக்கிறது. தலைச்சுற்றல், வாந்தி, மயக்கமும் ஏற்பட்டிருக்கிறது.

உடனே சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றனர். ஆனால் அங்கு அவர்கள் சிகிச்சை பலனளிக்காமல் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரி படிகர் கூறுகையில், ``ஆரம்பகட்ட விசாரணையில் மது கிடைக்காமல் ஏழு பேரும் கைகளைச் சுத்தப்படுத்தப் பயன்படும் சானிடைஸரைக் குடித்திருப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து மேற்கொண்டு விசாரித்துவருகிறோம்" என்று தெரிவித்தார். இறந்த அனைவரும் தொழிலாளர்கள் ஆவர். இதற்கு முன்பு மதுபான கடைகள் வீட்டுக்கு டெலிவரி செய்ய அனுமதிக்கப்பட்டது. ஆனால் கொரோனாவின் வேகம் அதிகரித்ததால் முற்றிலும் மதுபான கடைகள் அடைக்கப்பட்டுவிட்டன.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு