Published:Updated:

ஒரு துப்பாக்கிகூட வெடிக்கவில்லை - முன்னாள் முதல்வர் இறுதி மரியாதையில் குழம்பி நின்ற போலீஸ் !

ஜெனிஃபர்.ம.ஆ

பீகாரின் முன்னாள் முதலமைச்சர் ஜெகநாத் மிஸ்ரா கடந்த 19-ம் தேதி மரணமடைந்தார்.

துப்பாக்கிக் குண்டுகள் முழங்க  மரியாதை
துப்பாக்கிக் குண்டுகள் முழங்க மரியாதை ( Ani )

பீகாரின் முன்னாள் முதலமைச்சர் ஜெகநாத் மிஸ்ரா கடந்த 19-ம் தேதி மரணமடைந்தார். அவருக்கு வயது 82. பீகாரின் முதல்வராக மூன்று முறை பதவி வகித்தவர், காங்கிரஸ் ஆட்சியின்போது மத்திய அமைச்சராக இருந்தவர், பீகாரின் மிக முக்கியமான காங்கிரஸ் தலைவராக கோலோச்சியவர் எனப் பல பெருமைகளுக்கு சொந்தக்காரர்.

Jagannath Mishra
Jagannath Mishra
ddnews.gov.in

இந்நிலையில், சுபால் மாவட்டத்தில் உள்ள அவரது பூர்வீக கிராமத்தில் அரசு மரியாதையோடு அவரது இறுதிச்சடங்கு நடைபெற்றது. பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார், துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி உட்பட பல்வேறு தலைவர்கள் அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொண்டனர்.

அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கு என்பது, ஒருவரது பூதவுடலுக்கு தேசியக் கோடி போர்த்தப்பட்டு, துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அவருக்கு மரியாதை செய்வதாகும். ஜெகநாத் மிஸ்ராவின் உடல் தகனம் செய்யும்போது, போலீஸார் அணிவகுத்து நின்று, வானை நோக்கி துப்பாக்கியை உயர்த்தி சுட்டனர். ஆனால், ஒரு துப்பாக்கிகூட சுடவில்லை. அங்கு அணிவகுத்து நின்ற 22 போலீஸ் அதிகாரிகளின் துப்பாக்கிகளும் செயலிழந்து நின்றது. இதை வீடியோவாகப் பதிவு செய்திருக்கிறது ஏ.என்.ஐ செய்தி நிறுவனம்.

இந்த வீடியோவில், சார்ஜன்ட் மேஜர் ராஜேஷ் குமார் மண்டல், துப்பாக்கிகள் வெடிக்காததைக் கண்டதும், இரு போலீஸாரின் துப்பாக்கிகளை பரிசோதித்து பார்க்கிறார், துப்பாக்கிகளை வெடிக்க செய்ய முயன்று, முடியாமல் அவரும் திரும்பி செல்வதாக வீடியோ முடிவடைகிறது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, குண்டு முழக்க மரியாதை இல்லாமலேயே, ஜெகநாத் மிஸ்ராவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Nitish kumar
Nitish kumar
mid-day.com

ஒரு நாட்டின் மிக முக்கிய தலைவருக்கு செய்யப்பட வேண்டிய இறுதி மரியாதையில் நடந்த இந்தச் சம்பவம் பீகார் மக்களையும் அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் உட்பட பலரையும் சங்கடத்தில் ஆழ்த்தியது. இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகளிடம் இது குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.