2020-ம் ஆண்டு தொடங்கிய கப்பல் கட்டுமானப் பணி நிறைவடைந்த பிறகு நடத்தப்பட்ட சோதனை ஓட்டத்தில் வெற்றியை அடுத்து 'ஐஎன்எஸ் வகிர்' அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டு, நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. திங்கள்கிழமை (23/01/2023), மும்பையில் நடந்த நிகழ்ச்சியில், 'ஐஎன்எஸ் வகிர்' நீர்மூழ்கிக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் கடற்படை தளபதி ஹரிகுமார்.

இந்திய கடற்படையில் 150-க்கும் மேலான போர்க் கப்பல்கள் இருக்கின்றன. 2027-ம் ஆண்டுக்குள், போர்க் கப்பல்களின் எண்ணிக்கையை 200 ஆக அதிகரிக்க மத்திய பாதுகாப்புத் துறை திட்டமிட்டிருக்கிறது. அதன்படி, முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐந்தாவது நீர்மூழ்கிக் கப்பலான 'ஐஎன்எஸ் வகிர்' நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. 2005-ம் ஆண்டு, பிரான்சின் நேவல் குரூப் நிறுவனத்துடன் இணைந்து ஆறு நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிக்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. 2007-ம் ஆண்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. அதன்படி, முதல் கப்பலான ஐஎன்எஸ் கல்வாரி, 2017-ம் ஆண்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அதன்பின்பு ஐஎன்எஸ் காந்தேரி, ஐஎன்எஸ் கரன்சி, ஐஎன்எஸ் வேலா ஆகிய நீர்மூழ்கிக் கப்பல்கள் அடுத்தடுத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டன. கடந்த 24 மாதத்தில், இந்திய கடற்படையில் இணைக்கப்பட்ட மூன்றாவது நீர்மூழ்கிக் கப்பல் 'ஐஎன்எஸ் வகிர்' என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு அம்சங்கள் :
'ஐஎன்எஸ் வகிர்' அதிநவீன நீர் மூழ்கிக் கப்பல் 67.5 மீட்டர் நீளமும், 6.2 மீட்டர் அகலமும், 12.3 மீட்டர் உயரமும் கொண்டது. இந்தக் கப்பல் டீசல், மின்சாரத்தில் இயங்கும் தன்மை கொண்டது.
இந்தக் கப்பலில், எதிரி நாட்டுப் போர்க் கப்பல்களை அழிக்க அதிநவீன ஏவுகணைகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்தக் கப்பலிலிருந்து வான்பகுதி, நிலப் பகுதிகளில் இருக்கும் இலக்குகளை, துல்லியமாகத் தாக்கி அழிக்க முடியும்.

'ஐஎன்எஸ் வகிர்' நீர் மூழ்கிக் கப்பலால் 350 மீட்டர் ஆழம் வரை கடலில் செல்ல முடியும். இரண்டு வாரங்கள் வரை தொடர்ச்சியாக கடலில் பயணிக்க முடியும்.
இந்திய கடற்பகுதியின் பாதுகாப்பை வலுப்படுத்த, 'ஐஎன்எஸ் வகிர்' அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல், ஸ்கார்பின் ரக நீர்மூழ்கிக் கப்பலாக உருவாக்கப்பட்டிருக்கிறது. மும்பையைச் சேர்ந்த மஜகான் கப்பல் கட்டுமான நிறுவனம் இந்தக் கப்பலை கட்டியிருக்கிறது.
எதிரி நாட்டு கப்பல்களால் 'ஐஎன்எஸ் வகிர்' நீர்மூழ்கிக் கப்பலை அவ்வளவு எளிதில் கண்டறிய முடியாது.
இதற்கு முன் இருந்த 'ஐஎன்எஸ் வகிர்' போர்க்கப்பல் 1973-ல் கடற்படையில் சேர்க்கப்பட்டு, சுமார் 30 ஆண்டுகள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுவந்தது குறிப்பிடத்தக்கது.