ஹத்ராஸ்: `உங்கள் வீட்டுப் பெண்களுக்கு இப்படி நடந்திருந்தால்..?' - அதிகாரிகளைச் சாடிய நீதிபதிகள்

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை தொடர்பாக அலகாபாத் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின்போது மாவட்ட நிர்வாகத்தினரிடம் நீதிபதிகள் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் இளம் பெண் ஒருவர் நான்கு பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். நாக்கு துண்டாகி முதுகுத் தண்டில் பலத்த பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இரண்டு வார தொடர் சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்தார். இறந்த பெண்ணின் உடலை அவரின் பெற்றோரின் அனுமதியின்றி அதிகாலையிலேயே வேக வேகமாக உத்தரப்பிரதேச போலீஸார் தகனம் செய்தனர். இந்த விவகாரம் மொத்த இந்தியாவையும் உலுக்கியது.

இதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனப் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இதற்கிடையில் அந்தப் பெண்ணின் உடலில் நடந்த தடயவியல் சோதனை முடிவுகளில் அவரின் பிறப்புறுப்பில் விந்தணுக்கள் இல்லாததால் அவர் வன்கொடுமை செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஹத்ராஸ் எஸ்.பியும் அந்த மாவட்ட ஆட்சியரும் தெரிவித்திருந்தது மேலும் சர்ச்சையைப் பெரிதாக்கியது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாகவும் பெண்ணின் உடல் போலீஸாரால் தகனம் செய்யப்பட்டது தொடர்பாகவும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு லக்னோ அமர்வைச் சேர்ந்த நீதிபதிகள் ராஜன் ராய் மற்றும் பங்கஜ் மிதல் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய நீதிபதிகள், ஹத்ராஸ் பெண் வன்கொடுமை செய்யப்படவில்லை என ஒரு மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். அவரின் கருத்து கண்டனத்துக்குரியது. மேலும், இந்த வழக்கில் தொடர்பில்லாத ஓர் அதிகாரி இதுபோன்று கருத்து தெரிவிப்பதால் பொதுவெளியில் தேவையற்ற குழப்பங்கள் உருவாகும். மேலும், இதுபோன்ற கருத்துகள் இரு தரப்பிலும் உணர்ச்சிகளைத் தூண்டலாம். எனவே, இந்த விவகாரம் தொடர்பாக யாரும் ஆதாரமற்ற கருத்துகளைத் தெரிவிக்கக் கூடாது என உத்தரவிட்டனர்.

தொடர்ந்து, வெறும் தடயவியல் அறிக்கையை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா, இல்லையா என்பதைத் தீர்மானிக்க முடியுமா. அது போன்ற நடைமுறைகள் நம் சட்டத்தில் உள்ளனவா என உத்தரப்பிரதேச ஏடிஜிபியிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், தடயவியல் பரிசோதனையை வைத்து மட்டும் எந்த முடிவுகளும் எடுக்கப்படக் கூடாது என ஒப்புக்கொண்டார். இதையடுத்து, இந்திய அதிகாரத்தின் கீழ் வன்கொடுமைக்கான வரையறையை போலீஸ் அதிகாரி தெளிவாகப் புரிந்துகொள்ளவில்லை என பெஞ்ச் சுட்டிக்காட்டியது.
பிறகு, இறுதியாகத் தன் மகளின் முகத்தைக்கூட காணத் தன்னை அனுமதிக்கவில்லை என்று நீதிபதிகள் முன்பு கூறி கதறி அழுதுள்ளார் அந்தப் பெண்ணின் தாய். அவரையடுத்து, காவலர்கள் நடந்துகொண்ட விதம் தொடர்பாகப் பெண்ணின் சகோதரரும் தந்தையும் விளக்கியுள்ளனர். அவர்கள் தரப்பு கருத்துகளைக் கேட்ட நீதிபதிகள், இறந்த பெண்ணின் உடலை ஏன் அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்காமல் அவசரமாக அதிகாலையில் போலீஸ் அதிகாரிகளே தகனம் செய்ய வேண்டும் என்ற கேள்வியையும் நீதிபதிகள் முன் வைத்தனர்.

அதற்கு, பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கு மறுநாள் வெளியாக இருந்ததாகவும் சட்டம் ஒழுங்கு பிரச்னை காரணமாக உடலைத் தகனம் செய்ததாகவும் போலீஸார் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. மாவட்ட அதிகாரிகளின் இந்த நடவடிக்கை சட்டம் ஒழுங்கு என்ற பெயரிலிருந்தாலும் இது மனித உரிமை மீறல் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தகனம் செய்தது தொடர்பான அரசின் விளக்கங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என்று கூறினர். மேலும், தடயவியல் தொடர்பாகக் கருத்து தெரிவித்த போலீஸ் எஸ்.பியை இடை நீக்கம் செய்தபோது அதே கருத்தை தெரிவித்த மாவட்ட ஆட்சியரை ஏன் இடைநீக்கம் செய்யவில்லை என உத்தரப்பிரதேச அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இறந்த பெண்ணின் உடலைக்கூட பாதுகாக்க முடியாத காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் எப்படி மக்களைக் காக்க முடியும். தற்போது ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு நேர்ந்த அவலம் ஒரு பணக்கார பெண்ணுக்கோ, உங்கள் குடும்பத்தின் பெண்களுக்கோ நடந்திருந்தால் அப்போதும் இதேபோல்தான் நடவடிக்கை எடுத்திருப்பீர்களா? அந்தப் பெண்ணுக்கு இறுதிச்சடங்கு செய்ய அரை மணி நேரம் கூட உங்களிடம் இல்லையா என்று மாவட்ட நிர்வாகத்திடம் சரமாரியாக நீதிபதிகள் கேள்வி கேட்டனர். தொடர்ந்து, இடை நீக்கம் செய்யப்பட்ட காவலரும் பெண்ணின் மொத்த குடும்பத்தினரும் வரும் திங்கள்கிழமை நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளனர்.