Published:Updated:

`380 பேருக்குக் கொரோனா தொற்று; 77 சிவப்பு மண்டலங்கள்!' -ரத்து செய்யப்பட்ட அமர்நாத் யாத்திரை

அமர்நாத் பனிலிங்கம்
அமர்நாத் பனிலிங்கம்

இந்த ஆண்டு ஜூன் 23 -ம் தேதி முதல் ஆகஸ்ட் 3-ம் தேதிவரை திட்டமிடப்பட்டிருந்த அமர்நாத் யாத்திரை ரத்துசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள மிக முக்கிய புனிதத்தலங்களுள் ஒன்று அமர்நாத். ஆண்டுதோறும் உலகின் பல இடங்களிலிருந்து பக்தர்கள் இங்கு வருகை தந்து சிவலிங்க தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் தற்போது, உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாகப் பல்வேறு ஆன்மிக நிகழ்வுகளும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மீனாட்சியம்மன் சித்திரைத் திருவிழாவைத் தொடர்ந்து கள்ளழகர் திருவிழா நடைபெறுமா? - அதிகாரிகள் ஆலோசனை

அமர்நாத் யாத்திரை தொடர்பாக 22.4.2020 அன்று ஜம்மு அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டு ஜூன் 23 -ம் தேதி முதல் ஆகஸ்ட் 3ம் தேதிவரை திட்டமிடப்பட்டிருந்த அமர்நாத் யாத்திரை ரத்துசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அமர்நாத் சந்நிதி வாரியத்துடன் மேற்கொண்ட காணொலிக் கலந்தாலோசிப்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அமர்நாத் யாத்திரை
அமர்நாத் யாத்திரை
ANI

அந்த அறிக்கையில், ` ஜம்மு காஷ்மீரில் இன்று வரை 380 பேரை கொரோனா வைரஸ் பாதித்துள்ள சூழலில் காஷ்மீர் மலைகளுக்கிடையே யாத்திரை செல்பவர்கள் 77 கொரோனா சிவப்பு மண்டலங்களைக் கடக்க நேரிடும். இந்நிலையில் பக்தர்களை அவ்வழியே அனுமதித்தால் வைரஸ் பரவ வழிவகுக்கும்.

மேலும் யாத்திரிகர்களுக்கு உணவளிப்பதற்காக அமைக்கப்படும் லங்கர்கள் (யாத்திரிகர்களுக்கான சமையல் அறை) மற்றும் தங்குவதற்கான முகாம்கள் அமைப்பதும் மருத்துவ வசதிகள் செய்வதும் வழியெங்கும் உள்ள பனியை அகற்றுவதும் தற்போது சாத்தியமில்லை' எனக் கூறப்பட்டுள்ளது.

`இதுவும் கடவுளுக்குச் செய்யும் சேவைதான்!'- ஊரடங்கால் கலங்கிய மக்களுக்குத் தோள்கொடுத்த திருவிழா நிதி

மேலும் காஷ்மீர் துணைநிலை ஆளுநரும் அமர்நாத் சந்நிதி வாரியத் தலைவருமான கிரிஷ் சந்திர மர்மு தனது அறிக்கையில், `நாட்டில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஊரடங்கு மற்றும் நிலவும் அசாதாரண சூழல் ஆகியவை கருத்தில் கொள்ளப்பட்டு யாத்திரிகர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம் எனக் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது' எனக் கூறியுள்ளார்.

அமர்நாத் யாத்திரை
அமர்நாத் யாத்திரை

மேலும், `வழக்கமாக யாத்திரையின்போது நடைபெறும் பூஜைகள் பாரம்பர்ய முறைப்படி நடைபெறும்' எனவும் மர்மு தெரிவித்துள்ளார்.

மதுரையைத் தொடர்ந்து தேனி வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவும் ஒத்திவைப்பு!

மேலும், உலகெங்கிலும் உள்ள அனைத்து பக்தர்களும் காணும் வண்ணம் யாத்திரையின் அனைத்து பூஜைகளையும் சிவலிங்க தரிசனத்தையும் இணையத்தில் நேரடியாக ஒளிபரப்புவது குறித்த சாத்தியக் கூறுகளையும் சந்நிதி வாரியம் ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு