Published:Updated:

`கண்டிஷன் பெயில்; மாவோயிஸ்ட் குழுக்களுடன் தொடர்பு?'- தந்தை தொகுதியில் வரலாறு படைத்த அம்பா பிரசாத்!

ஜார்க்கண்ட் மாநில தேர்தலில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றிபெற்றுள்ளனர்.

அம்பா பிரசாத்
அம்பா பிரசாத்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பார்காகோ (Barkagao) தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரான அம்பா பிரசாத் 31,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் பெற்றார். இதன்மூலம் ஜார்க்கண்ட் சட்டமன்றத்துக்குச் செல்லும் இளம் உறுப்பினர் என்ற சிறப்பைப் பெற்றார். 31 வயதாகும் அம்பா பிரசாத் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த யோகேந்திர பிரசாத்தின் மகள். இந்தத் தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக யோகேந்திர பிரசாத் குடும்பத்தினர் வெற்றி பெற்றுள்ளனர்.

யோகேந்திர பிரசாத்
யோகேந்திர பிரசாத்

2009-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பார்காகோ தொகுதியில் போட்டியிட்டு யோகேந்திர பிரசாத் வெற்றி பெற்றார். ஹேமந்த் சோரன் ஆட்சியில் மந்திரி பதவி இவரை தேடிவந்தது. 2013-ம் ஆண்டு அமைச்சராகப் பொறுப்பேற்றார். ஜார்க்கண்டில் செயல்படும் மாவோயிஸ்ட் குழுக்களுடன் இவருக்குத் தொடர்பு இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து 2014-ம் ஆண்டு அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். அவர் மீதான வழக்கு நிலுவையில் உள்ள காரணத்தால் 2014-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை.

`புதிய அத்தியாயம் தொடங்குகிறது!' - ஜார்க்கண்டில் பா.ஜ.கவை வீழ்த்திய ஹேமந்த் சோரன்

அவருக்குப் பதிலாக அவரின் மனைவி நிர்மலா தேவி களமிறக்கப்பட்டார். பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தேர்தலில் வெற்றிபெற்றார். ஆனால், அவர் மீதும் சில கிரிமினல் வழக்குகள் பாய்ந்தன. பார்காகோ சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் மின் உற்பத்திக்காக நிலங்களை கையகப்படுத்தும் பணியில் மாநில அரசு ஈடுபட்டது. இதற்கு எதிராக நிர்மலா தேவி தலைமையில் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. இந்தப் போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

தேர்தல் பிரசாரத்தில்
தேர்தல் பிரசாரத்தில்

இந்தச் சம்பவத்தில் நிர்மலா தேவி மற்றும் அவரின் கணவர் யோகேந்திர பிரசாத் மீது வழக்குகள் பாய்ந்தன. இருவரும் கைது செய்யப்பட்டனர். யோகேந்திர பிரசாத் பல மாதங்கள் சிறையில் இருந்தார். இருவரும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் உச்ச நீதிமன்றம் இருவருக்கும் ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில்தான் காங்கிரஸ் கட்சி யோகேந்திர பிரசாத் குடும்பத்துக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது. யோகேந்திர பிரசாத் மகளான அம்பா பிரசாத் பார்காகோ தொகுதியில் களமிறங்கினார். இவருக்கு ஆதரவாக ராகுல்காந்தி பிரசாரம் செய்தார். அந்தத் தொகுதி மக்கள் மீண்டும் யோகேந்திர பிரசாத் குடும்பத்தினரைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.