Published:Updated:

ஒடிசாவில் எரிபொருள் இல்லாமல் வழியிலேயே நின்ற ஆம்புலன்ஸ்! - கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

ஒடிசாவில் ஒரு கர்ப்பிணிப் பெண் மருத்துவமனைக்குச் செல்லும்போது ஆம்புலன்ஸில் எரிபொருள் தீர்ந்ததால், நடுவழியிலேயே உயிரிழந்துள்ளார்.

கர்ப்பிணி
கர்ப்பிணி

ஒடிசா மாநிலம் மயூர்பாஞ்ச் (Mayurbhanj) மாவட்டத்தில் உள்ள பங்கிரிபோசி (Bangiriposi) பகுதியைச் சேர்ந்தவர் சித்தரஞ்சன் முண்டா. இவரின் மனைவி துளசி முண்டாவுக்கு கடந்த வெள்ளிக் கிழமை இரவு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. பின்னர், அவர் பங்கிரிபோசி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

pregnant Women
pregnant Women

அங்கு துளசியைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தையின் நிலை சற்று மோசமாக உள்ளதால் அவரை பரிபடாவில் உள்ள வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறியுள்ளனர். மருத்துவர்களின் ஆலோசனைப்படி 39 கிமீ தொலைவில் உள்ள பரிபடா மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் துளசி. ஆனால், துளசி சென்ற ஆம்புலன்ஸில் எரிபொருள் தீர்ந்ததால் நடுவழியிலேயே நின்றுள்ளது. இதனால் அந்தக் கர்ப்பிணிப் பெண் சாலையிலேயே உயிரிழந்துள்ளார்.

ஆம்புலன்ஸ் டிரைவர்கள் லீவ்! - கர்ப்பிணிப் பெண்ணைக் காப்பாற்றிய பெண் மருத்துவரின் துணிச்சல் முடிவு

நடந்த சம்பவங்கள் பற்றி விவரித்த துளசியின் கணவர் சித்தரஞ்சன் முண்டா,``என் மனைவியின் உடல் மோசமானதை அடுத்து மருத்துவர்கள் அவரை வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பரிந்துரைத்தனர். அதன்படி நாங்களும், ஒரு ஆம்புலன்ஸில் அவரை அழைத்துச் சென்றோம். பங்கிரிபோசியிலிருந்து 17 கி.மீ தொலைவில் உள்ள குலியானா பகுதிக்குச் சென்றபோது எரிபொருள் இல்லாமல் ஆம்புலன்ஸ் நடுவழியிலேயே நின்றுவிட்டது.

ambulance - File Photo
ambulance - File Photo

என் மனைவி பிரசவ வலியில் துடித்துக்கொண்டிருந்தார், உடன் வந்த பணிப்பெண்ணும் நானும் என்ன செய்வதெனத் தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தோம். பின்னர் ஒருவழியாக வேறு ஒரு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்குச் சென்றோம். ஆனால், அதற்குள் என் மனைவி நடு வழியிலேயே உயிரிழந்துவிட்டார்” என்று கதறியிருக்கிறார்.

`கர்ப்பிணிப் பெண்ணை அழைத்துக்கொண்டு ஆம்புலன்ஸ் புறப்பட்டபோதே அதில் போதுமான எரிபொருள் இல்லை. மேலும், ஆம்புலன்ஸில் உள்ள எரிபொருள் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக எரிபொருள் வெளியேறிக்கொண்டிருந்தது. இதனால் குறிப்பிட்ட தூரத்துக்கு முன்னதாகவே வண்டி நின்றுவிட்டது’ என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Petrol
Petrol

மயூர்பாஞ்ச் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி பி.கே. மொஹபத்ரா, ஆம்புலன்ஸில் போதுமான எரிபொருள் இல்லாததால்தால், மருத்துவமனையை அடைய முடியவில்லை என்று ஒப்புக்கொண்டார். கர்ப்பிணிப் பெண் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.