Published:Updated:

‘4 மணி நேரம்; 185 கி.மீ வேகத்தில் சுழன்றடித்த காற்று’ -கோரத்தாண்டவமாடி கரையைக் கடந்தது ஆம்பன் புயல்

ஆம்பன் புயல்
ஆம்பன் புயல் ( AP )

வங்கக்கடலில் உருவான ஆம்பன் புயல், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் மிகக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘கொரோனாவைவிட ஆம்பன் மிக மோசமான பாதிப்புகளைக் கொடுத்துள்ளது’ என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வேதனை தெரிவித்துள்ளார். அந்த அளவுக்கு ஆம்பன் புயல் மேற்கு வங்கத்தில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம், தெற்கு வங்கக்கடலில் உருவான இந்தப் புயல் மேற்கு நோக்கி நகர்ந்து, இரு நாள்களுக்கு முன்னர் அதி தீவிரமடைந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

புயல்
புயல்
AP

அதன்படி இந்த புயல், நேற்று பிற்பகல் தொடங்கி மாலை வரை மேற்கு வங்கத்தின் திஹா மற்றும் வங்க தேசத்தின் ஹடியா தீவுக்கு இடையே கரையைக் கடந்துள்ளது. புயல் காரணமாக மேற்குவங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் கன மழை கொட்டித்தீர்த்துள்ளது. நேற்று பிற்பகல் 2:30 மணிக்கு கரையைக் கடக்கத் தொடங்கிய ஆம்பன், முழுவதும் கடந்து முடிக்க 4 மணி நேரத்துக்கும் மேல் ஆகியுள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது சுமார் 185 கி.மீ வேகத்தில் காற்று வீசியுள்ளது.

`20 ஆண்டுகளில் இல்லாத புயல்! - மேற்கு வங்கத்தில் ஆம்பன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

மேற்கு வங்கத்தின் சுந்தர வனக் காடுகள் இருக்கும் பகுதி மற்றும் வடக்கு ஒடிசா ஆகிய பகுதிகள் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளதாகவும், மேற்கு வங்கத்தின் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சூப்பர் புயலாக மாறி காற்று சுழன்றடித்துள்ளதால், சேதம் மோசமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இரு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் பற்றிய முழுமையான தகவல் இன்னும் வெளியாகவில்லை.

பாதுகாப்பான இடத்துக்குச் செல்லும் மக்கள்
பாதுகாப்பான இடத்துக்குச் செல்லும் மக்கள்
AP

புயல் கடந்த பிறகுதான் இரு மாநிலங்களிலும் மிகக் கடுமையான மழை கொட்டித்தீர்த்துள்ளது. மேற்கு வங்கத்தில் 5 லட்சம் பேரும், ஒடிசாவில் ஒன்றரை லட்சம் பேரும் பாதுகாப்பான முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஆம்பன் புயலால் மேற்கு வங்கத்தில் மட்டும் ஒரு குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இரு மாநிலங்களிலும் 12 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உயிரிழப்புகள் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

`அதி தீவிரத்திலிருந்து சூப்பர் புயலாக மாறும் ஆம்பன்?’ - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

புயலால் சேதமடைந்த பகுதிகளில் தேசிய பேரிடர் நிவாரணப் படையினர் தீவிர மீட்புப் பணிகளில் இறங்கியுள்ளனர். ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள், வீடுகள் ஆகியவை ஆம்பன் புயலுக்கு இரையாகியுள்ளன. மேலும், சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், கரையில் நின்ற படகுகள் போன்றவையும் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன.

புயல் சேதம்
புயல் சேதம்
ANI

‘மேற்கு வங்கத்தில், கொரோனா வைரஸைவிட மிக மோசமான பாதிப்புகளை ஆம்பன் புயல் ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் மாநிலம் முழுவதையும் சீரமைக்க வேண்டும். தயவுசெய்து இந்த விஷயத்தில் அரசியல் செய்யாமல் மனிதாபிமானத்துடன் உதவ வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கிறேன்’ என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் ஆம்பன் புயல் ஏற்படுத்திய பாதிப்புகளின் புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டுவருகிறது.

அடுத்த கட்டுரைக்கு