Published:Updated:

`அம்ருதா, அம்மாகிட்ட போய்டும்மா...’ - மாருதி ராவ்வின் இறுதி நிமிடமும் மகளின் கடைசி வருகையும்

அம்ருதா - மாருதி ராவ்
அம்ருதா - மாருதி ராவ்

தெலங்கானா ஆணவக்கொலையில் முக்கிய குற்றவாளியாக இருந்த அம்ருதாவின் தந்தை தற்கொலை செய்துகொள்வதற்கு முன் எழுதிய கடிதம் கிடைத்துள்ளது.

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த பிரனய் குமார் என்பவரும் அதே பகுதியைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண்ணும் காதலித்துக் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். பிரனய் பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் இவர்களின் காதலுக்குத் தொடக்கம் முதலே அம்ருதாவின் தந்தை எதிர்ப்பு தெரிவித்து வந்தார். தன் குடும்பத்தினரை மீறி பிரனய்யை கரம் பிடித்தார் அம்ருதா.

பின்னர், அம்ருதா கர்ப்பமடைய, தம்பதிகள் இருவரும் மருத்துவப் பரிசோதனைக்காக 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ம் தேதி மருத்துவமனைக்கு வந்தபோது மருத்துவமனை வாசலிலேயே பிரனயைக் கூலிப்படையைச் சேர்ந்த ஒருவர் வெட்டிச் சாய்த்தார். பிரனய்யின் ஆணவக் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் வலுத்தன. இந்தக் கொலை விவகாரம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அம்ருதா பிரனய்
அம்ருதா பிரனய்

அம்ருதா தற்போது பிரனய்யின் பெற்றோருடன் வசித்து வருகிறார். கணவர் இறக்கும்போது கர்ப்பமாக இருந்த அம்ருதாவுக்கு தற்போது 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது. பிரனய் கொலை விவகாரம் பெரிதானதும் அதில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட அம்ருதாவின் தந்தை மாருதி ராவ், அவரின் சித்தப்பா, பீகாரைச் சேர்ந்த கூலிப்படையினர் என ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். சில மாதங்கள் சிறையிலிருந்த அம்ருதாவின் தந்தை, பிறகு ஜாமீனில் வெளியில் வந்தார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் மாலை ஹைதராபாத்தில் உள்ள ஆர்ய வைஷ்ய பவன் என்ற ஹோட்டலுக்குச் சென்ற மாருதி ராவ், மறு நாள் அறை எண் 306-ல் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதைக் கவனித்த ஊழியர்கள் காவலர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவலர்கள் சோதனை செய்து மாருதி ராவ் உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். பின்னர் நடந்த விசாரணையில், மாருதி ராவ் தன் மீது உள்ள வழக்கு விசாரணைக்குப் பயந்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

மாருதி ராவ்
மாருதி ராவ்

இந்நிலையில் மாருதி ராவ் இறந்து கிடந்த அறையில் அவர் எழுதிய தற்கொலை கடிதம் கிடைத்துள்ளதாக அந்த ஹோட்டல் நிர்வாகத்தினர் கூறியுள்ளனர். ``கடந்த சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மாருதி ராவ் மட்டும் தனியாக வந்து அறை எடுத்தார். அவருடன் கார் ஓட்டுநர் இருந்தார். பின்னர் இரவு 8 மணிக்கு இருவரும் வெளியில் சென்று உணவு உட்கொண்டுவிட்டு வந்தனர். தொடர்ந்து 9 மணிக்கு தன் காரில் ஏதோ பேப்பர் வைத்திருப்பதாகவும் அதை எடுத்து வரும்படியும் ஓட்டுநரிடம் கூறியுள்ளார். அதன்படி ஓட்டுநரும் அதை எடுத்து வந்து கொடுத்துள்ளார்.

அறை எண் 306-ல் மாருதி ராவ்வின் உடல்... இந்தியாவை அதிரவைத்த ஆணவக்கொலை; தொழிலதிபர் தற்கொலை!

அந்த நேரத்தில் தானும் ஹோட்டல் அறையிலேயே தங்கிக் கொள்ளவா என ஓட்டுநர், மாருதி ராவ்விடம் கேட்டுள்ளார். ஆனால், அதை நிராகரித்த மாருதி ராவ், டிரைவரை காரிலேயே உறங்கும்படி கூறியுள்ளார். இரண்டு, மூன்று முறை கேட்டும் மாருதி ராவ் ஓட்டுநரை தன்னுடன் இருக்கச் சம்மதிக்கவில்லை. இதையடுத்து மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் மாருதி ராவின் மனைவி அவருக்குத் தொடர்ந்து போன் செய்துள்ளார். ஆனால், அவர் போனை எடுக்கவில்லை. அதனால் பதறிய மனைவி, உடனடியாக ஓட்டுநருக்கு போன் செய்து தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் அவர் சென்று அறையில் பார்த்தபோது, அறையின் கதவு உள்பக்கமாகப் பூட்டியிருந்து, ஓட்டுநர் எங்களுக்குத் தகவல் தெரிக்க, நாங்களும் சென்று கதவைத் திறக்க முயன்றோம் ஆனால் முடியவில்லை.

பெற்றோருடன் அம்ருதா
பெற்றோருடன் அம்ருதா

நீண்ட நேரமாகக் கதவு திறக்காததால் சந்தேகமடைந்த நாங்கள் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தோம் அவர்கள் வந்துதான் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கே மாருதி ராவ் இறந்த நிலையில் கிடந்தார் அவருக்கு அருகில் ஒரு பாட்டில் இருந்தது. அவரை சோதனை செய்த காவலர்கள் மாருதி ராவ் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறினர். பின்னர் காவலர்கள் தங்களின் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கினர்.

அந்த அறையில் மாருதி ராவ் எழுதிய தற்கொலை கடிதம் ஒன்று கிடைத்தது. அதில், `அம்மா அம்ருதா, தாயிடம் சென்றுவிடு’ என எழுதியிருந்ததாகக் காவலர்கள் கூறினார்கள். மாருதி ராவ் வரும்போது தன்னுடன் ஒரு சிறிய சூட் கேஸ் மட்டுமே கொண்டு வந்திருந்தார். அறை எடுத்த அன்றைய தினம் இரவு வரை மிகவும் சகஜமாக இருந்ததாகவே ஓட்டுநர் எங்களிடம் கூறினார். மாருதி ராவ் அடிக்கடி தன் குடும்பத்தினருடன் எங்கள் ஹோட்டலுக்கு வருவார். அதேபோல்தான் தற்போதும் வந்துள்ளார் என நினைத்தோம். ஆனால், இப்படி நடக்கும் என எதிர்பார்க்கவில்லை” என்று ஹோட்டல் மேனேஜர் ஊடகத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

Vikatan

இதைத் தொடர்ந்து மாருதி ராவின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு, நேற்று பிற்பகலில் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தன் தந்தையின் உடலை இறுதியாக ஒரு முறை பார்க்க வேண்டும் எனக் காவலர்களின் பாதுகாப்பைக் கேட்டுள்ளார் அம்ருதா. அதன்படி காவலர்களும் அவருக்கு பாதுகாப்பு வழங்க, இன்று காலை தன் தாய் வீட்டுக்குப் பலத்த பாதுகாப்புடன் சென்றுள்ளார் அம்ருதா. தன்னை தாக்கிவிடுவார்கள் என்ற பயத்தில்தான் அம்ருதா காவலர்களின் பாதுகாப்பைக் கேட்டுள்ளார். அவர் எதிர்பார்த்தது போலவே அம்ருதா, தாய் வீட்டுக்குச் சென்று இறங்கியதும் அவரின் உறவினர்கள் அம்ருதாவை கடுமையாகத் திட்டியுள்ளனர்.

அம்ருதா பிரனய்
அம்ருதா பிரனய்

மாருதி ராவ்வின் மரணத்துக்கு அம்ருதாதான் காரணம் எனக் கடுமையாக விமர்சித்து அவரை வீட்டுக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். மாருதி ராவ்வின் மனைவியும் அவரின் சகோதரரும் அம்ருதாவை வீட்டுக்கு வரக்கூடாது எனக் கூறி களேபரம் செய்துள்ளனர். இறுதியாகத் தூரத்திலிருந்து தன் தந்தையைப் பார்த்துவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார் அம்ருதா.

``இறுதியாக ஒரு முறை தன் தந்தையின் முகத்தைப் பார்க்க வேண்டும் என அம்ருதா விரும்பினார். அதுதான் உண்மையும் கூட. அம்ருதா என்ன நினைக்கிறார் என எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால், தந்தையைப் பார்க்க வேண்டும் என்பது அவரது விருப்பம். அவரைப் பார்க்க அனுமதித்தால் நன்றாக இருக்கும் என்றுதான் நாங்களும் நினைக்கிறோம்” என பிரனய்யின் தந்தை பேசியுள்ளார். `தான் செய்த காரியங்களால் ஏற்பட்ட வருத்தத்தில் இப்படி ஒரு தீவிர நடவடிக்கை எடுத்திருக்கலாம்’ எனத் தன் தந்தையின் இறப்பு பற்றி அம்ருதா தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு