Published:Updated:

கோவா தேர்தல்: படையெடுக்கும் பிற மாநிலக் கட்சிகள்; மோதும் தேசியக் கட்சிகள்... என்ன காரணம்?!-ஓர் அலசல்

மோடி, ராகுல், மம்தா, கெஜ்ரிவால்
News
மோடி, ராகுல், மம்தா, கெஜ்ரிவால்

3,702 சதுர கி.மீ பரப்பளவு, 14.85 லட்சம் மக்கள், 40 தொகுதிகள்கொண்ட குட்டி மாநிலமான கோவாவை தேசியக் கட்சிகள் தொடங்கி மாநிலக் கட்சிகள் வரை குறிவைக்க என்ன காரணம்..? விரிவாகப் பார்க்கலாம்.

கோவா என்றாலே விடுமுறையைக் கழிப்பதற்காகச் செல்லும் இடம் என்ற நிலை மாறி, ஆட்சியைக் கைப்பற்ற அமித் ஷா, ராகுல் காந்தி, மம்தா, பிரியங்கா காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் என தேசிய, பிற மாநிலத் தலைவர்கள் எனப் பலரும் 2022 -ம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலைக் குறிவைத்து வியூகங்களை வகுத்துவருகிறார்கள். 3,702 சதுர கி.மீ பரப்பளவு, 14.85 லட்சம் மக்கள், 40 தொகுதிகள்கொண்ட குட்டி மாநிலமான கோவாவை தேசியக் கட்சிகள் தொடங்கி மாநிலக் கட்சிகள் வரை குறிவைக்க என்ன காரணம்..? விரிவாகப் பார்க்கலாம்.

கோவா
கோவா

கோவாவின் நிலப்பரப்பு, தொழில், மக்கள்தொகை இவை மூன்றும்தான் அரசியல் கட்சிகள் இந்த மாநிலத்தைக் குறிவைத்து தேர்தலில் களமிறங்க மிக முக்கியக் காரணங்களாகும். கோவாவின் வடக்குப் பகுதி மகாராஷ்டிராவுடனும், கிழக்குப் பகுதி கர்நாடக மாநிலத்துடனும் எல்லைகளைப் பகிர்ந்துகொள்வதால் அரசியல்ரீதியாகவும் அந்த மாநிலங்கள் கோவா கலாசாரத்துடன் பிணைந்திருக்கின்றன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

40 சட்டமன்றத் தொகுதிகளைக்கொண்ட கோவா சட்டப்பேரவையில், ஆட்சி அமைக்க 21 இடங்கள் தேவைப்படுகின்றன. ஒவ்வொரு தொகுதிக்கும் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை வாக்காளர்கள் இருக்கிறார்கள். இதில் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை வாக்குகளைப் பெறும் வேட்பாளர்கள் வெற்றிவாகை சூடுகிறார்கள். 2017-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 25 சதவிகிதம் மாநிலக் கட்சிகளின் வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

1961-ம் ஆண்டு கோவா விடுதலைக்குப் பிறகு ஐக்கிய கோன்ஸ் கட்சி (UGP), மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சி (MGP) ஆகிய மாநில கட்சிகள் உருவாகின. இவர்களின் துணையுடன் பாஜக-வும், காங்கிரஸ் கட்சியும் கோவாவில் தங்களுக்கு என தனி இடத்தை உருவாக்கிகொண்டன. 1999 -ம் ஆண்டுக்குப் பிறகு கோவாவில் பாஜக பலமுறை ஆட்சி அமைத்திருக்கிறது. அதற்குக் காரணமாக இருந்தவர் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர். நான்கு முறை கோவா முதல்வராகப் பதவியில் இருந்திருக்கிறர். பாரிக்கர் இல்லாமல் பாஜக சந்திக்கும் முதல் தேர்தல் இது.

மனோகர் பாரிக்கர்
மனோகர் பாரிக்கர்

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை பாஜக தேர்தல் பொறுப்பாளராக தேசியத் தலைமை நியமித்திருக்கிறது. 2007 தேர்தல் தொடங்கி தொடர்ந்து கோவா தேர்தலில் வேலை செய்தவர் என்பதால் களமிறக்கப்பட்டிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சிக்கு இது மிக முக்கியத் தேர்தலாக பார்க்கப்படுகிறது. 2017-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸில் 17 எம்.எல்.ஏ-க்கள் வெற்றிபெற்றபோதும் அவர்களில் பலர் பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குத் தொடர்ந்து கட்சி மாறிய நிலையில் தற்போது காங்கிரஸ் தரப்பிடம் வெறும் நான்கு எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே இருக்கிறார்கள்.

13 பாஜக எம்.எல்.ஏ-க்கள் வெற்றிபெற்ற நிலையில் தற்போது பாஜக-வின் பலம் 27-ஆக உயர்ந்திருக்கிறது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை மாநிலத் தேர்தல் பொறுப்பாளராக காங்கிரஸ் தலைமை களமிறக்கியிருக்கிறது. கோவாவை இந்த முறை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என காங்கிரஸ், களத்தில் இறங்கித் தொடர்ந்து பணியாற்றிவருகிறது. கோவாவை ஆளும் பாஜக-வின் மீது எதிர்ப்பு மனநிலை இருக்கும் நிலையில், 2017 தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றியும் ஆட்சி அமைக்கத் தவறிய காங்கிரஸ் மீதும் மக்களுக்கு அதிக நம்பிக்கை இருப்பதாகத் தெரியவில்லை என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேற்கு வங்கத்தில் பா.ஜ.க-வை வீழ்த்திய மம்தா, கோவாவில் களமிறங்கியதுதான் பலருக்கும் ஆச்சர்யம். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கோவாவில் வெற்றியைப் பதிவு செய்யும் பட்சத்தில், தேசிய அளவில் பாஜக-வுக்கு மாற்றாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தன்னை நிறுவ முற்படும். கோவா காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் லூயிசினோ ஃபெலேரோ, டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் உள்ளிட்டோரைக் கட்சியில் இணைத்ததன் மூலம் தேசிய அளவில் பேசுபொருளாக மாறியிருக்கிறது திரிணாமுல் காங்கிரஸ். கோவாவின் முக்கிய மாநிலக் கட்சியாக இருக்கும் மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சியுடன் கூட்டணியை அறிவித்திருக்கிறார் மம்தா. இதன் மூலம் மாநிலக் கட்சியின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என மம்தா நம்புகிறார்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

அதேபோல அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் கோவாவில் கோதாவில் இறங்கி முக்கியப் போட்டியாளராகத் தன்னை நிலைநிறுத்தியிருக்கிறது. 2017-ம் ஆண்டு தேர்தலில் 6.3 சதவிகித வாக்குகளுடன் நான்காவது இடத்தை ஆம் ஆத்மி பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவை இல்லாமல் மகாராஷ்டிர மாநில எல்லையை ஒட்டியிருக்கும் இடங்களைக் குறிவைத்து சிவசேனாவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் தனித்துக் களமிறங்குகின்றன.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

தேசியக் கட்சிகள் தொடங்கி மாநிலக் கட்சிகள் வரை தேர்தல் வேலைகளைத் தொடங்கிவிட்ட நிலையில் பெண் வாக்காளர்களைக் குறிவைத்து அறிவிப்புகள் வெளியாகிவருகின்றன. காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி கடந்த டிசம்பர் 10 -ம் தேதி கோவாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அந்த ஒரு நாள் சுற்றுப்பயணத்தின்போது பல இடங்களில் பெண்களுடன் உரையாடல் நடத்தினார். அதே தினத்தில் பெண்களுக்கு வேலைவாய்ப்பில் 30 சதவிகிதம் வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 'Griha Laxmi Card' திட்டத்தை அறிவித்திருக்கிறது. மாதா மாதம் பெண்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் இது. இதற்கு முன்னதாக ஆம் ஆத்மி மாதம் ரூபாய் ஆயிரம் வழங்குவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் பெண்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், ``புதிய பாட்டிலில் ஊற்றப்பட்ட பழைய ஒயின்" என்ற விமர்சனம் எழுந்துள்ளது. கடந்த காலங்களில் இதே போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டும் பயனாளிகளுக்கு சென்று சேரவில்லை என்பதால் இந்த விமர்சனம் வைக்கப்படுகிறதாம்.

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

கோவாவைப் பொறுத்தவரை தேர்தலில் ஆண்களைவிட பெண்களே அதிக அளவில் வாக்குப்பதிவு செய்து வந்திருக்கிறார்கள். 2019-ம் ஆண்டு தேர்தலைப் பொறுத்தவரை 4.4 லட்சம் பெண்களுக்கு 4.1 லட்சம் ஆண்கள் தங்களின் வாக்குகளைப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. முந்தைய காலகட்டத்தில் குறைந்த அளவிலேயே பெண்கள் வாக்குப்பதிவு செய்துவந்த நிலையில் கல்வி, சமூக ஊடகங்களின் வருகைக்குப் பிறகு யாருக்கு வாக்களிப்பது என்பதைப் பெண்களே தீர்மானிக்கிறார்கள்.

வாக்குப்பதிவு இயந்திரம்
வாக்குப்பதிவு இயந்திரம்

ஆனால் 2017 தேர்தலில் 40 தொகுதியில் போட்டியிட்ட 251 பேரில் 17 பேர் மட்டுமே பெண்கள் என்பதும் கவனிக்கப்படவேண்டிய ஒன்று. கோவாவில் பொருளாதாரம், சமூகம் சார்ந்து பெண்கள் பல பிரச்னைகளைச் சந்தித்துவரும் நிலையில் அவற்றைச் சரிசெய்ய அரசியல் கட்சிகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதே பெண்கள் நலன் சார்ந்து இயங்கும் அமைப்புகளின் கருத்தாக இருக்கிறது.

ஏபிபி-சி வோட்டர்ஸ் கருத்துக் கணிப்பில், கோவாவை 17-21 இடங்களைக் கைப்பற்றி பாஜக ஆட்சியை பிடிக்கும் எனவும், 5 -9 இடங்களைக் கைப்பற்றி ஆம் ஆத்மி எதிர்க்கட்சியாக அமரும் எனவும் முடிவுகள் தெரிவிக்கின்றன. கோவா மக்கள் என்ன முடிவெடுக்க இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்!