Published:Updated:

மும்பை: `கழிவறையை இடிக்க உத்தரவிட்ட மாநகராட்சி!’ - போராடும் 88 வயது மூதாட்டி

`டிசம்பர் 6-ம் தேதி மீண்டும் மாநகராட்சி ஒரு கடிதத்தை அனுப்பியது. இதனால் வேறு வழியில்லாமல் கழிவறையை இடித்துவிட்டு, மீண்டும் மாநகராட்சியிடம் அனுமதி கேட்டோம். ஆனால், அனுமதி கொடுக்க மறுத்துவிட்டனர்.'

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மும்பையிலுள்ள குடிசைப்பகுதிகளில் பொதுவாக போதிய கழிவறை வசதி இருப்பதில்லை. பொதுக் கழிவறைகளைத்தான் பயன்படுத்த வேண்டும். பொதுமக்கள் காலைக்கடனைக் கழிக்க வாளியில் தண்ணீர் எடுத்துக்கொண்டு பொதுக்கழிவறைக்குச் செல்வது வழக்கம். இதற்காகவே குடிசைப்பகுதியில் ஏராளமான பொதுக் கழிவறைகளை மாநகராட்சி நிர்வாகம் கட்டிக்கொடுத்திருக்கிறது.

சுசிலா மகன் அசோக் கழிவறை இடிக்கப்பட்ட இடத்தைக் காட்டுகிறார்
சுசிலா மகன் அசோக் கழிவறை இடிக்கப்பட்ட இடத்தைக் காட்டுகிறார்

ஆனால், அவை சரியாகப் பராமரிக்கப்படுவதில்லை. இதனால் 88 வயது மூதாட்டி ஒருவர் தனது வீட்டுக்கு அருகில் கழிவறை கட்ட போராடிவருகிறார். கிழக்கு மும்பையிலுள்ள முலுண்ட் நாகூர் சாலையிலிருக்கும் ரமாகாந்த் மாத்ரே தெருவில் சுசிலா மோரே (88) என்பவர் வசிக்கிறார். இவரது வீட்டிலிருந்து 300 மீட்டர் தூரத்தில் பொதுக்கழிவறை இருக்கிறது. அங்கு சுசிலாவால் நடந்து செல்ல முடியாது. அப்படியே செல்வதாக இருந்தாலும், வயது முதுமை காரணமாக துணைக்கு ஒரு ஆள் தேவையாக இருக்கிறது. எனவே, அவர் தனது மகனிடம், வீட்டுக்கு அருகில் ஒரு கழிவறை கட்டும்படி கேட்டுக்கொண்டார். தனது தாயாரின் வசதிக்காக சுசிலாவின் மகன் வீட்டுக்கு அருகிலுள்ள இடத்தில் கழிவறை ஒன்றைக் கட்டினார். இதற்காக ஸ்வட்ச் மகாராஷ்டிரா அபியான் திட்டத்தின் கீழ் மாநில அரசிடம் கடந்த 2020-ம் ஆண்டு, ஜூன் 29-ம் தேதி அனுமதி பெறப்பட்டது. அதோடு, மாநகராட்சி நிர்வாகத்திடமும் இதற்காக விண்ணப்பித்து 20,540 ரூபாய் கட்டணம் செலுத்தி அனுமதி பெற்று கழிவறையைக் கட்டினார்.

மும்பை: `நல்லது நடக்கும்!’- ரத்தன் டாடாவின் போலி கார் நம்பருடன் சுற்றிய பெண்

ஆனால், கழிவறை கட்டி முடிக்கப்பட்ட பிறகு கடந்த நவம்பர் 24-ம் தேதி மாநகராட்சியின் கட்டடத்துறையிலிருந்து கடிதம் வந்தது. `கட்டடத்துறையிலிருந்து அனுமதி வாங்காத காரணத்தால் உடனே கழிவறையை இடிக்க வேண்டும் என்றும், அப்படி இடிக்கவில்லையெனில் நாங்களே இடித்துவிடுவோம்' என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது. இதனால் சுசிலா குடும்பத்தினர் அதிர்ச்சிக்குள்ளானார்கள். இது குறித்து சுசிலாவின் மகன் அசோக்கிடம் கேட்டதற்கு, `டிசம்பர் 6-ம் தேதி மீண்டும் மாநகராட்சி ஒரு கடிதத்தை அனுப்பியது. இதனால் வேறு வழியில்லாமல் கழிவறையை இடித்துவிட்டு, மீண்டும் மாநகராட்சியிடம் அனுமதி கேட்டோம். ஆனால், அனுமதி கொடுக்க மறுத்துவிட்டனர். இப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை" என்று கவலையுடன் தெரிவித்தார்.

சுசிலாமோரே
சுசிலாமோரே

இது குறித்து அந்தப் பகுதி வார்டு அதிகாரி கிஷோர் காந்தியிடம் கேட்டற்கு, ``பெரிய வீடாக இருந்தால் உள்ளேயே கழிவறை கட்டிக்கொள்ள வேண்டும். ஆனால் இங்கு வீடு சிறிதாக இருப்பதால், வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் கட்டப்பட்டிருக்கிறது. எனவே, இது ஆக்கிரமிப்பாகக் கருதி இடிக்கப்பட்டிருக்கிறது. மனுதாரர் வீட்டுக்குள் கழிவறை கட்டிக்கொள்வதில் எந்தப் பிரச்னையும் இல்லை” என்று தெரிவித்தார். மாநகராட்சியின் இந்த முடிவுக்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன.

மும்பையில் பொதுக் கழிவறை இருந்தாலும், பெரும்பாலான குடிசைவாழ் மக்கள் அதிகாலை மற்றும் இரவு நேரத்தில் திறந்தவெளியில் காலைக்கடன் கழிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இந்தநிலையில், மாநகராட்சியின் இந்த நடவடிக்கை அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

`பா.ஜ.க தலைமையகம்!’ - மும்பை அமலாக்கத்துறை அலுவலகம் முன் பேனர் வைத்த சிவசேனா
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு