Published:Updated:

`எனக்கா அபராதம் போடுறீங்க!' - காவலர்களை பழிவாங்க எலெக்ட்ரீசியன் எடுத்த விசித்திர முடிவு

மலையரசு

`எதுக்கு பழிவாங்குறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லையாப்பா..' என்கிற டோனில் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உத்தரபிரதேச போலீஸ்
உத்தரபிரதேச போலீஸ்

உத்தரபிரதேச மாநிலம் ஃபிர்சாபாத் மாவட்டம் லைன்பர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ். அம்மாநில மின்சாரத்துறையில் எலெக்ட்ரீஷியனாகப் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை மின்வாரிய அலுவலகத்துக்கு தனது பைக்கில் சென்றுள்ளார். அப்போது ஹெல்மெட் அணியாமல் சென்றதால் அங்கிருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அவரைத் தடுத்து நிறுத்தியதுடன் 500 ரூபாய் அபராதமும் விதித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீனிவாஸ் காவல்நிலையத்தின் கரன்ட் கனெக்ஷனை கட் செய்துள்ளார். பழிக்குப் பழியாக இதைச் செய்துள்ளதாகக் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதனை மறுத்துள்ளது மின்வாரியம். இதுதொடர்பாகப் பேசிய ஸ்ரீனிவாஸ், `வேலையை முடித்துக்கொண்டு மின்வாரியத்துக்கு பைக்கில் திரும்பிக்கொண்டிருந்தேன்.

உத்தரபிரதேச போலீஸ்
உத்தரபிரதேச போலீஸ்

அப்போது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் சந்திரா என்னைத் தடுத்து ஹெல்மெட் அணியவில்லை எனக் கூறி 500 ரூபாய் அபராதத்துக்கான ரசீதைக் கொடுத்தார். நான் எனது உயர் அதிகாரிக்கு போன் செய்து கொடுத்தேன். அவரும் என்னை மன்னித்து விடும்படி கேட்டுப்பார்த்தார். ஆனாலும் சப்-இன்ஸ்பெக்டர் என்னை விடாமல், சாலை விதிகள் குறித்து எனக்கு வகுப்பெடுத்தார். பதிலுக்கு நானும் கரன்ட் பில்லைக் கட்டுவது குறித்த விதிகளை அவருக்கு எடுத்துக் கூறினேன். அதற்குக் காரணம் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனிலிருந்து 6.62 லட்ச ரூபாய்க்கான மின் கட்டணம் பாக்கி இருக்கிறது. அதனால்தான் போலீஸ் ஸ்டேஷனுக்கான மின் இணைப்பைத் துண்டித்தேன்' என விளக்கம் அளித்துள்ளார்.

இதேகருத்தைப் பிரதிபலித்த மின்வாரிய அதிகாரி ஒருவர், `பாக்கி வைத்துள்ள மின்கட்டணத்தைச் செலுத்த வேண்டும் எனப் பலமுறை அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிவிட்டோம். ஆனால், 2016-ல் இருந்து இதுவரை அவர்கள் ஒரு பைசாகூட கட்டணம் செலுத்தவில்லை. தொடர்ந்து இதுபோல் போலீஸார் அபராத ரசீது வாங்கி வருவதால் காவலர்கள் மீது மின்வாரிய ஊழியர்கள் கோபத்தில் இருப்பது உண்மைதான். ஸ்ரீனிவாஸுக்கு கடந்த நான்கு மாதமாகச் சம்பளம் வழங்கவில்லை. தனது நிலைமையை போலீஸிடம் எடுத்துக்கூறியுள்ளார். ஆனால், ரசீது போட்டுவிட்டோம் பணத்தைச் செலுத்துங்கள் என அவரிடம் கறார் காட்டியுள்ளனர்' எனக் கூறியுள்ளார்.

எலெக்ட்ரீசியன் ஸ்ரீனிவாஸ்
எலெக்ட்ரீசியன் ஸ்ரீனிவாஸ்

நடந்த சம்பவம் குறித்துப் பேசும் லைன்பர் பகுதி போலீஸ் ஒருவர், `எந்தவித நோட்டீஸும் கொடுக்காமல் கரன்டை கட் செய்துள்ளனர். மாலை 4.30 மணி முதல் சுமார் நான்கு மணி நேரம் மின்சாரம் இல்லாமல் இருந்தோம். நாங்கள் ஹெல்மெட் இல்லாமல் பயணம் செய்தாலே எங்கள் டி.எஸ்.பி சும்மா விடமாட்டார். இதுவரை 70 காவலர்கள் ஹெல்மெட் இல்லாமல் பயணம் செய்ததற்காக டி.எஸ்.பி-யிடம் தண்டனை பெற்றுள்ளனர். அப்படி இருக்கையில் அந்த எலெக்ட்ரீசியனை மட்டும் விட முடியுமா. ஏற்கெனவே மாவட்டத்தில் உள்ள காவல்நிலையங்கள் சார்பில் 1.15 கோடி கட்டணம் செலுத்திவிட்டோம். மீதமுள்ள கட்டணத்தையும் விரைவில் செலுத்திவிடுவோம்' என விளக்கம் அளித்திருக்கிறார்.