Published:Updated:

IMA Scam: 1.5 கோடி லஞ்சம்; மன உளைச்சல்! - ஜாமீனில் வெளிவந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி தற்கொலை

ஐ.ஏ.எஸ் அதிகாரி விஜய் சங்கர்
ஐ.ஏ.எஸ் அதிகாரி விஜய் சங்கர்

``சி.பி.ஐ நடத்திய விசாரணையில் சுமார் 4,000 கோடி ரூபாய் அளவில் சட்டவிரோதமாக ஐ.எம்.ஏ நிறுவனத்திடம் பணம் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த விஷயம் ரிசர்வ் வங்கி மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகளின் கவனத்துக்குச் சென்றுள்ளது.”

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் ஐ.எம்.ஏ என்ற நிதி நிறுவனம் 2013-ம் ஆண்டு முதல் இயங்கி வந்துள்ளது. இந்த நிறுவனத்தை முகமது மன்சூர்கான் என்ற நபர் நடத்தி வந்துள்ளார். ஐ.எம்.ஏ நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக அறிவித்தார். இதனை அறிந்த ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நிறுவனத்தில் முதலீடுகளைச் செய்து வந்தனர்.

இந்தநிலையில், திடீரென ஐ.எம்.ஏ நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் முகமது மன்சூர் கான் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கோடிக்கணக்கான ரூபாயை முகமது ஏமாற்றிவிட்டு வெளிநாட்டுக்கு அவர் தப்பிச் சென்றது தெரியவந்தது. பெங்களூரில் நடந்த இந்த மோசடி சம்பவம் அதிக பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. விசாரணையில் அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் உட்பட பலரும் இதன் பின்னனியில் இருப்பது தெரியவந்தது. இதனிடையே வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்த முகமது மன்சூர்கான் அதிகாரிகளால் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கைதும் செய்யப்பட்டார்.

பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ நடத்திய விசாரணையில் சுமார் 4,000 கோடி ரூபாய் அளவில் சட்டவிரோதமாக ஐ.எம்.ஏ நிறுவனத்திடம் பணம் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த விஷயம் ரிசர்வ் வங்கி மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகளின் கவனத்துக்குச் சென்றுள்ளது.

இதனையடுத்து, ஐ.எம்.ஏ-வின் செயல்பாடுகள் குறித்த விசாரணையில் ஈடுபட மத்திய வங்கி மாநில அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. இதையடுத்து மாநில அரசு இந்த நிறுவனம் தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிக்க பெங்களூர் மாநகராட்சியின் ஆணையராக இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி விஜய் சங்கரிடம் கேட்டுக்கொண்டது. இதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் இந்த மோசடியில் விஜய் சங்கருக்கும் தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. சுமார் 1.5 கோடி அளவில் அவர் லஞ்சம் பெற்றதாகவும் கூறப்பட்டது.

சிபிஐ
சிபிஐ

சி.பி.ஐ அதிகாரிகளால் விஜய் சங்கர் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் நேற்று தன்னுடைய வீட்டில் விஜய் சங்கர் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல்கள் வெளியாகின.

பெங்களூர் பகுதியின் காவல்துறை ஆணையர் பாஸ்கர் ராவ் இதுதொடர்பாகப் பேசும்போது, ``விஜய் சங்கர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். ஐ.எம்.ஏ நிறுவன மோசடி வழக்கில் அவர் 1.5 கோடி லஞ்சம் வாக்கியதாக அவர்மீது குற்றச்சாட்டுகள் இருந்தன. அவருடைய மரணம் இயற்கைக்கு எதிரான மரணம். இதுதொடர்பான விசாரணைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்” என்று கூறினார்.

கடந்த மாதம் சி.பி.ஐ அதிகாரிகள் விஜய் சங்கர் உள்ளிட்ட இரண்டு அதிகாரிகளிடம் விசாரணை நடத்த கர்நாடக அரசிடம் அனுமதி கோரியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில் அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

`அரசு துணைச் செயலர்; வேலை வாங்கித் தருவதாக மோசடி!’ - போலீஸில் சிக்கிய போலி அரசு அதிகாரி
அடுத்த கட்டுரைக்கு