Published:Updated:

`ஒண்ணுதான்... ஷேர் பண்ணி சாப்டுங்க!’ - தொழிலாளர்களிடம் பிஸ்கெட் பாக்கெட்டுகளை வீசிய ரயில்வே அதிகாரி

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ( vikatan )

``கொரோனா தொடர்பான ஊரடங்கால் ஏற்கெனவே அதிகம் பாதிப்படைந்து பசியில் பயணிக்கும் தொழிலாளர்களை அதிகாரிகள் கையாளும் விதம் குறித்து சமூக வலைதளங்களில் இந்த வீடியோவைப் பகிர்ந்து ரயில்வே துறையை டேக் செய்து தொடர்ந்து விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.”

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கடுமையான துயரங்களை அனுபவித்து வருகின்றனர். வேலை, பணம், உணவு, தங்குமிடம் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கு திண்டாடி வந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களை நோக்கி நடைபயணமாகவும் கிடைத்த வாகனங்களில் ஏறியும் பயணித்து வருகின்றன. இந்தப் பயணங்களின்போது விபத்து, பசி, வெப்பம் போன்ற காரணிகளால் பலரும் உயிரிழந்தனர். இதுதொடர்பாக, புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தின. இதையடுத்து, இந்த மாதம் தொடக்கம் முதல் மத்திய அரசானது புலம்பெயர்ந்து தொழிலாளர்கள் பாதுகாப்பாகச் செல்ல சிறப்பு ரயில்களை இயக்கியது.

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்
Twitter / Atul Yadav

சிறப்பு ரயில்களில் பயணிப்பவர்கள் உணவின்மை காரணமாகவும் உடலில் நீர் வற்றிப்போவதன் காரணமாகவும் இறப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரயில்வே நிர்வாகம் உணவு மற்றும் தண்ணீர் வழங்கி வருவதாகத் தெரிகிறது. இதனிடையே, உத்தரப் பிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் இருந்து 300 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஃபிரோசாபாத் ரயில் நிலையத்தில் மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் தனது குழுவுடன் இணைந்து சிறப்பு ரயிலில் பயணிக்க காத்திருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகளைத் தூக்கி எறிவது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

`ஊரடங்கால் கேள்விக்குறியான உணவு’ - தவித்த புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய விகடன்

மூன்று நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோ கடந்த திங்கள்கிழமை அன்று படமாக்கப்பட்டுள்ளது. வீடியோவில்... தலைமை பயணச்சீட்டு பரிசோதகராகப் பணியாற்றி வரும் டி.கே.தீக்‌ஷித் என்ற அதிகாரி ரயிலில் அமர்ந்திருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகளை ரயிலின் ஜன்னல் வழியாகவும் ஏறிச் செல்லும் பாதைகளின் வழியாகவும் தூக்கி வீசுகிறார். இதை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ரயிலின் உள் இருந்தபடி பிடிக்கின்றனர். மேலும், அந்த அதிகாரிகள் தொழிலாளர்களைக் கேலியும் செய்கின்றனர், தகாத வார்த்தைகளில் பேசுவதாகவும் தெரிகிறது. அதிகாரிகளில் ஒருவர், ``இன்று தீக்‌ஷித்தின் பிறந்தநாள். அதனால்தான் பிஸ்கட் வழங்கப்படுகிறது” என்று கூறுகிறார். ரயிலில் இருக்கும் தொழிலாளர் ஒருவர் பிஸ்கட் பாக்கெட் கேட்கும்போது, ``நாங்கள் ஒரு பாக்கெட்தான் தருவோம். பகிர்ந்து சாப்பிடுங்கள்” என்கிறார். இந்த வீடியோ மற்றொரு ரயில்வே ஊழியரின் வாட்ஸப் வழியாக சமூக வலைதளங்களில் வெளியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் தொடர்பாக ரயில்வே அமைச்சகமானது தனது ட்விட்டர் பக்கத்தில், ``சி.ஐ.டி டி.கே.தீக்‌ஷித், பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது” என்று பதிவிட்டுள்ளது. கடந்தவாரம் டெல்லியில் சில பயணிகள் உணவு மற்றும் தண்ணீருக்காக சண்டையிடுவது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விஷயத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு அரசை நோக்கி கேள்விகளைத் தொடுத்து அதிரடியான உத்தரவுகளைப் பிறப்பித்ததும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொடர்பான ஊரடங்கால் ஏற்கெனவே அதிகம் பாதிப்படைந்து பசியில் பயணிக்கும் தொழிலாளர்களை அதிகாரிகள் கையாளும் விதம் குறித்து சமூக வலைதளங்களில் இந்த வீடியோவைப் பகிர்ந்து ரயில்வே துறையை டேக் செய்து தொடர்ந்து விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. நெட்டிசன்கள் பலரையும் இந்த வீடியோ கவலையடைச் செய்துள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது.

`பசியால் இறந்த தாய், அறியாத குழந்தை... மனதை உருக்குலைக்கும் வீடியோ!’- தொடரும் தொழிலாளர்களின் அவலநிலை
அடுத்த கட்டுரைக்கு