Published:Updated:

கியான்வாபி மசூதி - காசி விஸ்வநாதர் கோயில் சர்ச்சை... வரலாறு என்ன சொல்கிறது?

கியான்வாபி மசூதி

1992 டிசம்பரில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, அதிக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது இங்குதான். அதற்கு முன்பாகவே கியான்வாபி மசூதி இடத்தை தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரி வாரணாசி சிவில் நீதிமன்றத்தில், உள்ளூர் இந்து சமூகத்தினர் வழக்கு போட்டனர்.

கியான்வாபி மசூதி - காசி விஸ்வநாதர் கோயில் சர்ச்சை... வரலாறு என்ன சொல்கிறது?

1992 டிசம்பரில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, அதிக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது இங்குதான். அதற்கு முன்பாகவே கியான்வாபி மசூதி இடத்தை தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரி வாரணாசி சிவில் நீதிமன்றத்தில், உள்ளூர் இந்து சமூகத்தினர் வழக்கு போட்டனர்.

Published:Updated:
கியான்வாபி மசூதி
அயோத்தியை அடுத்து தேசத்தின் பேசுபொருளாக மாறியிருக்கிறது வாரணாசி எனப்படும் காசி. காரணம், கியான்வாபி மசூதி சர்ச்சை. காசி விஸ்வநாதருக்கு இங்கு இருந்த பழம்பெருமை வாய்ந்த கோயிலை முகலாய மன்னர் அவுரங்கசீப் இடித்து, அதன் ஒரு பகுதியில் கியான்வாபி மசூதியை கட்டியதாகப் புகார் உள்ளது. வாரணாசி சிவில் நீதிமன்றம் தொடங்கி உச்ச நீதிமன்றம் வரை இதுதொடர்பான வழக்குகளும் விவாதங்களும் தினம் தினம் உச்சம் பெற்று வருகின்றன. இந்தச் சர்ச்சையின் வரலாறு என்ன?
விஸ்வேஸ்வரர் ஆலயம்
விஸ்வேஸ்வரர் ஆலயம்

காசி யாத்திரை செல்வது என்பது இந்துக்களின் புண்ணியக் கடமைகளில் ஒன்று. உலகின் பழைமையான புனித நகரங்களில் ஒன்றாக காசி இருக்கிறது. காலக் கணக்குகளைத் தாண்டிய பழைமையான காசி விஸ்வநாதர் கோயிலை இங்கு மாமன்னர் விக்கிரமாதித்தர் கட்டியதாக நம்பிக்கை. பழங்கால நூல்களில் காசி விஸ்வநாதர் பற்றிய குறிப்புகள் இல்லை. என்றாலும், கி.பி 12-ம் நூற்றாண்டுக்குப் பிறகான காசி காண்டம், ஸ்கந்த புராணம் போன்ற நூல்களில் காசியின் புகழ்பெற்ற விஸ்வேஸ்வர லிங்கம் பற்றிய வர்ணனைகள் உள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜஹாங்கீர்
ஜஹாங்கீர்

காசி விஸ்வநாதர் ஆலயத்துக்குச் சோதனை 12-ம் நூற்றாண்டில் ஆரம்பிக்கிறது. டெல்லி சுல்தான் குத்புதீன் ஐபக் கி.பி 1193-ம் ஆண்டில் கன்னோஜ் மன்னர் ஜெயச்சந்திரனைத் தோற்கடித்தார். அந்தப் போரின் முடிவில் காசி விஸ்வநாதர் கோயில் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. சில ஆண்டுகள் கழித்து அந்த இடத்தில் ரஸியா மசூதி கட்டப்பட்டது. 20 ஆண்டுகள் கழித்து மன்னர் இல்டுமிஷ் காலத்தில் குஜராத்தி வியாபாரி ஒருவர் காசி விஸ்வநாதர் கோயிலைத் திரும்பவும் கட்டினார். 200 ஆண்டுகள் கழித்து சிக்கந்தர் லோடி காலத்தில் அது மீண்டும் இடிக்கப்பட்டது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முகலாய மன்னர் அக்பர் காலத்தில் அவரது அமைச்சராக இருந்த ராஜா மான்சிங் திரும்பவும் அந்த இடத்தில் காசி விஸ்வநாதர் கோயிலைக் கட்டினார். என்றாலும் ராஜா மான்சிங் தன் மகளை இஸ்லாமிய மன்னருக்குத் திருமணம் செய்துகொடுத்திருந்த காரணத்தால், அவர் கட்டிய கோயிலை காசி பிராமணர்கள் புறக்கணித்தனர். 1585-ம் ஆண்டு ராஜா தோடர் மால் அந்தக் கோயிலைப் புதுப்பித்தார். காசியின் முக்கியமான பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த நாராயண பட்டா என்பவரின் ஆலோசனைப்படி இந்தக் கோயில் புனரமைப்பு செய்யப்பட்டு காசி விஸ்வநாதர் லிங்கம் நிறுவப்பட்டது. முகலாய மன்னர் ஜஹாங்கீரின் நண்பராக இருந்த வீர்சிங் தேவ் புண்டேலா என்ற மன்னர் இந்தக் கோயிலை இன்னும் மேம்படுத்திக் கட்டினார்.

ராஜா தோடர் மால்
ராஜா தோடர் மால்
அமைதியான வழிபாட்டுத் தலமாக மாறிய காசி விஸ்வநாதர் ஆலயத்துக்கு அவுரங்கசீப் ஆட்சிக்காலத்தில் மீண்டும் சோதனை வந்தது. 1669-ம் ஆண்டு தன் படைகளைக் காசிக்கு அனுப்பிய அவுரங்கசீப், காசி விஸ்வநாதர் கோயிலை இடிக்க உத்தரவிட்டார். அதற்கு வெவ்வேறு காரணங்களை வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள்.
வீர்சிங் தேவ் புண்டேலா
வீர்சிங் தேவ் புண்டேலா

'காசி பகுதி ஜமீன்தார்கள் மொகலாயர் படைகளை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தார்கள். அவர்களுக்கு பிராமண சமூகத்தினரின் ஆதரவும் இருந்தது. இந்தக் கிளர்ச்சிக்கு காசி விஸ்வநாதர் ஆலயத்தைப் பயன்படுத்தியதால்தான் அவுரங்கசீப் இடிக்க உத்தரவிட்டார். அரசியல் காரணங்களுக்காகவே ஆலயம் இடிக்கப்பட்டது' என்கிறார்கள் ஒரு தரப்பினர். இன்னொரு தரப்பினரோ, 'மத சகிப்புத்தன்மை இல்லாத ஆட்சியாளராக அவுரங்கசீப் இருந்தார். அதனால்தான் இடித்துவிட்டு அந்த இடத்தில் மசூதி கட்ட உத்தரவிட்டார்' என்கிறார்கள்.

காசி விஸ்வநாதர் ஆலயம் இருந்த வளாகத்தில்தான் கியான்வாபி மசூதி எழுப்பப்பட்டது. ஆலயத்தை இடித்தாலும், அதன் வெளிப்புறக் கட்டுமானங்களில் ஒருபகுதியை அப்படியே மசூதிக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள். கியான்வாபி மசூதியின் தென்பகுதி சுவரில் பழைய கோயில் கட்டுமானங்கள் இருப்பதை இப்போதும் பார்க்கலாம். சிற்பங்கள், தோரணங்கள் அப்படியே இன்னமும் இருக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"இந்த மசூதிக்கு கியான்வாபி என்ற பெயர் வரவும் காசி விஸ்வநாதர் கோயிலே காரணம். கியான் வாபி என்றால் ஞானக்கிணறு என்று அர்த்தம். சக்தி வாய்ந்த காசி விஸ்வநாதர் லிங்கத்தைக் குளிர்ச்சியாக வைத்திருப்பதற்காக சிவபெருமானே ஒரு ஞானக்கிணற்றை உருவாக்கினார். அது கோயிலுக்கு அருகில்தான் இருக்கிறது. இப்போது மசூதி உள்ளே செல்பவர்கள் தங்களை சுத்தம் செய்துகொள்வதற்காக ஒரு குளம் உள்ளது. கியான்வாபி அதற்குள் போய்விட்டது" என்கிறார்கள் காசியைச் சேர்ந்த இந்துக்கள்.

காசி விஸ்வநாதர் ஆலயம் இடிக்கப்பட்டாலும், காசிக்கு யாத்திரை வருபவர்கள் மசூதியின் சுவரில் எஞ்சியிருக்கும் கோயில் பகுதியை விஸ்வநாதராக நினைத்து வழிபட்டு வந்தார்கள். 1698-ம் ஆண்டு ஆம்பர் பகுதியின் ஆட்சியாளராக இருந்த பிஷன் சிங் என்பவர், இந்த மசூதியை ஒட்டிய இடத்தில் நிலம் வாங்கி விஸ்வநாதர் கோயிலை மீண்டும் கட்ட முயன்றார். சில இஸ்லாமியர்களும் அவருக்கு நிலத்தை விற்றனர். ஆனால், கோயில் கட்டும் முயற்சி அவர் காலத்தில் நடக்கவில்லை. அவரது மகன் சவாய் ஜெய்சிங், மசூதிக்கு 150 மீட்டர் தூரத்தில் ஆதி விஸ்வேஸ்வரர் ஆலயத்தை 1700-ம் ஆண்டு எழுப்பினார்.

சவாய் ஜெய்சிங்
சவாய் ஜெய்சிங்

பிரிட்டிஷ் ஆட்சி மலர்ந்தபிறகு காசி மீண்டும் செழிப்பு பெற்றது. இந்தியா முழுக்க இருந்து பல மன்னர்கள் வந்து வழிபடும் புண்ணியத்தலமாக அது மறுபடியும் சிறப்பு பெற்றது. இங்கு கியான்வாபி மசூதி இருப்பது மன்னர்கள் பலருக்கு நெருடலாகவே இருந்தது. குறிப்பாக மராட்டிய பேஷ்வாக்கள் இந்த மசூதியை இடித்துவிட்டு அந்த இடத்தில் மீண்டும் ஆலயம் எழுப்ப முயன்றனர். நானா பட்னாவிஸ், மால்ஹர் ராவ் ஹோல்கர் என்று பலர் இதற்காக முயற்சி எடுத்தனர். ஆனால் லக்னோ நவாப்கள் இதை எதிர்த்தனர். மதக்கலவரம் ஏற்படும் என்ற அச்சத்தில் பிரிட்டிஷ் அரசு இந்த முயற்சிகளை முறியடித்தது.

மால்ஹர் ராவ் ஹோல்கர்
மால்ஹர் ராவ் ஹோல்கர்

லக்னோ நவாப்பை ஆட்சியிலிருந்து அகற்றிவிட்டு பிரிட்டிஷார் தங்கள் நேரடிக் கட்டுப்பாட்டில் இந்தப் பகுதியை எடுத்துக்கொண்ட பிறகு மீண்டும் முயற்சிகள் ஆரம்பித்தன. மால்ஹர் ராவின் மருமகளான அகல்யாபாய் ஹோல்கர் என்பவர்தான் இப்போது இருக்கும் காசி விஸ்வநாதர் ஆலயத்தைக் கட்டினார். இந்த இடத்தில்தான் சமீபத்தில் காசி விஸ்வநாதர் கோயில் வளாகம் புதுப்பிக்கப்பட்டு, பிரதமர் மோடி அதைத் திறந்துவைத்து வழிபாடும் செய்தார்.

பழைய கோயில் அளவுக்கு இது சிறப்பு பெறவில்லை. பழைய கோயில் அவுரங்கசீப் காலத்தில் இடிக்கப்பட்டபோது, அங்கிருந்த விஸ்வேஸ்வரர் லிங்கத்தை கியான்வாபி புனிதக்கிணற்றில் அர்ச்சகர்கள் மறைத்துவைத்தனர். அந்த லிங்கம் இருந்த இடத்தையும், மசூதி சுவரில் இருக்கும் பழைய கட்டுமானத்தையும் வணங்குவதை பக்தர்கள் நிறுத்தவில்லை. வழிபாட்டு உரிமை காரணமாக அவ்வப்போது கலவரங்களும் ஏற்பட்டுவந்தன.

வாரணாசி
வாரணாசி

1992 டிசம்பரில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, அதிக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது இங்குதான். அதற்கு முன்பாகவே கியான்வாபி மசூதி இடத்தை தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரி வாரணாசி சிவில் நீதிமன்றத்தில், உள்ளூர் இந்து சமூகத்தினர் வழக்கு போட்டனர். ஆனால், 'வழிபாட்டுத் தலங்கள் எல்லாமே இப்போது இருக்கும் நிலையிலேயே தொடர வேண்டும்' என்று 1991-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்த வழிபாட்டுத் தலங்கள் சிறப்புச் சட்டத்தைக் காரணம் காட்டி அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. மாவட்ட நீதிமன்றத்தில் அவர்கள் அப்பீல் செய்தனர். கியான்வாபி மசூதியை நிர்வகிக்கும் அஞ்சுமன் இன்தஜாமியா கமிட்டி இதற்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தடை வாங்கியது.

கடந்த 2021ம் ஆண்டு வாரணாசி நீதிமன்றம் மீண்டும் இதுபோன்ற இன்னொரு வழக்கை ஏற்று, கியான்வாபி மசூதியை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. அதற்கும் அலகாபாத் உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

இந்நிலையில், டெல்லியைச் சேர்ந்த ஐந்து பெண்கள் சார்பில் கடந்த ஆண்டு ஏப்ரலில் வாரணாசி நீதிமன்றத்தில் ஒரு வழக்கு போடப்பட்டது. கியான்வாபி மசூதி வளாக சுவரில் இருக்கும் சிருங்கார கௌரி, விநாயகர் மற்றும் அனுமன் ஆகிய கடவுள்களுக்கு தினசரி பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும் என்பது வழக்கு. பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முன்புவரை இங்கு தினசரி பூஜை செய்ய அனுமதி இருந்தது. அதற்குப் பின் ஏற்பட்ட கட்டுப்பாடுகளால், ஆண்டுக்கு ஒருமுறை சைத்ர நவராத்திரி கொண்டாட்டத்தின் நான்காவது நாளில் மட்டுமே சிருங்கார கௌரியை வழிபட பக்தர்களை அனுமதிக்கிறார்கள். இதை மாற்றி தினசரி வழிபாடு கோருவதாக இருந்தது வழக்கு.

கியான்வாபி (ஞானக்கிணறு)
கியான்வாபி (ஞானக்கிணறு)

இந்த வழக்கை ஏற்ற நீதிபதி, தனியாக அஜய் குமார் மிஸ்ரா என்பவரை அட்வகேட் கமிஷனராக நியமித்து மசூதி வளாகத்தை ஆய்வு செய்து வீடியோ எடுக்குமாறு உத்தரவிட்டார். இந்த ஆய்வுக்கு மசூதி நிர்வாகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தாலும், நீதிமன்றம் அதைப் பொருட்படுத்தவில்லை. இந்த ஆய்வில்தான் மசூதி வளாகத்தில் இருக்கும் குளத்தில் சிவலிங்கம் இருப்பதைக் கண்டறிந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், 'அது சிவலிங்கம் இல்லை, நீரூற்று' என்று மசூதி நிர்வாகம் மறுத்துள்ளது. இப்போது அந்தக் குளம் இருக்கும் பகுதியை யாரும் செல்ல முடியாதபடி மூடி சீல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கியான்வாபி மசூதியை ஆய்வு செய்வது சட்டப்படி சரியா என்ற கேள்வியுடன் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு போடப்பட்டுள்ளது. நீதிமன்றங்களின் முடிவைப் பொறுத்து காசியில் காட்சிகள் மாறலாம்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism