Published:Updated:

அந்தமான் தீவுகள்: இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பலிபீடமாக உருவானது எப்படி?

அந்தமான் ஜெயில்

சுதந்திரத்துக்கு முன்பு அந்தமான் எப்படி இருந்தது... அந்தமான் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பலிபீடமாக உருவானது எப்படி?

அந்தமான் தீவுகள்: இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பலிபீடமாக உருவானது எப்படி?

சுதந்திரத்துக்கு முன்பு அந்தமான் எப்படி இருந்தது... அந்தமான் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பலிபீடமாக உருவானது எப்படி?

Published:Updated:
அந்தமான் ஜெயில்

இந்தியாவின் விடுதலைப் போராட்ட வரலாறு குறித்த புத்தகங்களில் இதுவரை தவறவிடப்பட்ட, போற்றப்படாத, தலைவர்களை அடையாளம் காண மத்திய அரசு முயற்சி மேற்கொண்டிருக்கிறது. 'சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவை' முன்னிட்டு, மத்திய அரசின் சார்பில் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் போர்ட் பிளேயரில் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டுவருகிறது.

அந்தமான் நிகோபார் தீவுகள் இந்தியாவைச் சேர்ந்த ஏழு யூனியன் பிரதேசங்களில் ஒன்றாகும். சென்னையிலிருந்து 1,450 கிலோமீட்டர் தொலையில் வங்காள விரிகுடா கடலில் அமைந்திருக்கிறது. மொத்தம் 572 தீவுகளை தன்னகத்தே கொண்டு திகழ்கிறது. அந்தமானில் 550 தீவுகள் அமைந்துள்ளன. இவற்றில் 28 தீவுகளில் மனிதர்கள் வாழ்கிறார்கள். நிகோபாரில் 22 தீவுகள் அமைந்துள்ளன. இவற்றில் 10 தீவுகளில் மனிதர்கள் வாழ்கிறார்கள். அந்தமான் என்ற வார்த்தை, மலாய் மொழியில் அனுமனைக் குறிக்கும் வார்த்தை. நிகோபார் என்றால் நிர்வாண மக்கள் வாழும் இடம் (The Land of Naked People) என்ற பொருளைக் குறிக்கும்.

அந்தமானில் வங்காளம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகள் பேசப்படுகின்றன. இங்கு ஒரு மக்களவைத் தொகுதி இருக்கிறது. துணைநிலை ஆளுநர் அந்தமான் தீவுகளை ஆட்சி செய்கிறார். அந்தமான் தீவுகளில் ரயில் போக்குவரத்து ஏதும் இல்லை. ஆனால் இவையெல்லாம் இந்தியா சுதந்திரத்துக்குப் பிறகு. ஆனால், சுதந்திரத்துக்கு முன்பு அந்தமான் எப்படி இருந்தது... அந்தமான் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பலிபீடமாக உருவானது எப்படி?

அந்தமான் ஜெயில்
அந்தமான் ஜெயில்

1789-ம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் அந்தமானில் தங்கள் கொடியைப் பறக்கவிட்டதோடு, ஒரு கைதிகளின் குடியேற்றத்தையும், காலனியையும் உருவாக்க முதன்முதலில் முயன்றனர். அது தோல்வியடைந்தது. 1857-ம் ஆண்டு கலவரம் வெடித்தபோது, தூக்குக்கயிறும், தோட்டாக்களும், பீரங்கிகளும் புரட்சியாளர்களின் உயிர்களைப் பறித்தன. அதில் சிலருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. ஆனால், ஆங்கிலேயருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தவர்கள் மீண்டும் கிளர்ச்சி செய்யவோ அல்லது எதிர்ப்பு தெரிவிக்கவோ முடியாத வகையில் தொலைதூரத்தில் கைதிகளின் குடியிருப்பு ஒன்று தேவைப்பட்டது. இதற்காக ஆங்கிலேயர்களின் கண்கள் அந்தமான் தீவுகள் பக்கம் சென்றன.

ராணுவ மருத்துவரும், ஆக்ரா சிறைக் கண்காணிப்பாளருமான ஜே.பி.வாக்கர், ஜெயிலர் டேவிட் பேரி ஆகியோர் மேற்பார்வையில், 'கிளர்ச்சியாளர்களின்' முதல் குழு 1858, மார்ச் 10-ம் தேதி ஒரு சிறிய போர்க் கப்பலில் அங்கு சென்றடைந்தது. அவர்களில் 733 கைதிகள் கராச்சியிலிருந்து கொண்டுவரப்பட்டனர். பின்னர் இந்தச் செயல்முறை தொடர்ந்தது. முதல் கைதிகள் குழு அங்கு சென்றபோது, அவர்களை வரவேற்க உயிரற்ற நிலமே இருந்தது. அடர்ந்த மற்றும் வானளாவிய மரங்கள் கொண்ட காடுகள், சூரியனின் கதிர்கள் பூமியைத் தொட முடியாதபடி செய்தன. ஆங்கிலேயர்கள், அவர்களின் அலுவலகப் பணியாளர்கள், ஊழியர்கள், பிற ஊழியர்களுக்கு கூடாரங்கள் அமைக்கப்பட்டன. ஆனால், கைதிகளுக்குக் குடிசைகள் மற்றும் தொழுவங்கள் போன்ற இடங்களும் நீண்டகாலத்துக்குப் பிறகே கிடைத்தன. அங்கு வாழ்வதற்கு தரையோ, அடிப்படைத் தேவைகளுக்கான பொருள்களோ இல்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நாள் முழுவதும் கடுமையான சிறைவாசம், அயராத உழைப்பு, அட்டூழியங்களுக்கும் வன்முறைகளுக்கும் ஆளாகி, மிகக் குறைவான உணவில் திருப்தியடைந்து தொடர்ந்து மரணம் வரை வாழ்வது கைதிகளின் தலைவிதி. அதனால்தான் ஒவ்வொரு கைதியும் மரணத்துக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். ஏனென்றால் அந்தக் கொடூரப் பிரச்னைகளிலிருந்து விடுபட மரணம் மட்டுமே ஒரே வழியாக இருந்தது. அதோடு துக்கங்களும் நோய்களும் நிறைந்திருந்தன. காற்று துர்நாற்றமாகவும், நோய்களின் புதையலாகவும் இருந்தது. நோய்கள், முடிவற்ற அரிப்பு, தொடர்ந்து உரிந்துகொண்டேயிருக்கும் தோல் நோய்கள் மிகவும் சாதாரணமாகக் காணப்பட்டன. நோயை குணப்படுத்தவும், ஆரோக்கியத்தைப் பேணவும், காயங்களை குணப்படுத்தவும் வழி இல்லை. இரவு நேரங்களில் மக்கள் நடமாட்டமில்லாத அந்தப் பகுதிகளில்கூட சங்கிலியால் பிணைக்கப்பட்டு சிறைவைக்கப்பட்டனர்.

அந்தமான் ஜெயில்
அந்தமான் ஜெயில்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் சுதந்திர இயக்கம் வேகம் பெற்றது. இதனால் அந்தமானுக்கு அனுப்பப்படும் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்து, பலத்த பாதுகாப்பு சிறைக்கான தேவை உணரப்பட்டது. அங்கிருந்து தப்பிக்க முயன்றவர்கள் தூக்கிலிடப்பட்டனர். இதன் காரணமாகவே செல்லுலார் சிறைச்சாலை உருவானது. செல்லுலார் சிறைச்சாலையின் கட்டுமானம் 1896-ல் தொடங்கியது. பர்மாவிலிருந்து செங்கற்கள் வந்தன. சிறையில் அடைபடவேண்டிய அதே கைதிகளால் கட்டுமானம் நடந்தது என்பது இங்குள்ள ஒரு முரண்பாடான விஷயம். செல்லுலார் சிறைச்சாலை 1906-ல், கட்டி முடிக்கப்பட்டது. பதிமூன்றரை அடி நீளமும், ஏழடி அகலமும்கொண்ட எழுநூறு அறைகளில் அடைக்கப்பட்டிருந்த கைதிகள், சிறையின் நடுவே ஒரு கோபுரத்தின் மீதிருந்து கடுமையாகக் கண்காணிக்கப்பட்டனர். சிறை அறைகளில் காற்றுக்கூட வராத வகையில், வெளிச்சம் வர இடம் வைக்கப்பட்டிருந்தது. காலை, மதியம், மாலை எனச் சிறுநீர் கழித்தல், மலம் கழித்தலுக்கு நேரம் நிர்ணயம் செய்யப்பட்டது. இதைத் தவிர யாருக்காவது தேவை ஏற்பட்டால் காவலாளிகளின் அடி உதை கிடைக்கும். ஆங்கிலேயர்கள் யாரை வேண்டுமானாலும் தூக்கிலிட ஏதுவாக 'தூக்கு தண்டனை இடமும்' கட்டப்பட்டது.

அந்தமான் ஜெயில்
அந்தமான் ஜெயில்

கைதிகளை உளவியல்ரீதியாக சித்ரவதை செய்வதற்காக ஜெயிலர், சிறைக் கொட்டடியைப் பூட்டி, சாவியை வீசி எறிவார். சிறைச்சாலைக்குள்ளிருந்து கைதிகள் பூட்டுக்கு அருகே செல்ல முடியாத வகையில் பூட்டுகள் அமைந்திருந்தன. சிறைக்குள் இருக்கும் ஒவ்வோர் அறையிலும் ஒரு மரக்கட்டில், ஒரு அலுமினியத் தட்டு, இரண்டு பாத்திரங்கள்... அதாவது ஒன்று தண்ணீர் குடிப்பதற்கும், மற்றொன்று மலம் கழிக்கும்போது பயன்படுத்துவதற்கும். மேலும், ஒரு கம்பளிப் போர்வை மட்டுமே இருந்தது. பெரும்பாலும் கைதிகளுக்கு அந்தச் சிறிய பாத்திரம் போதுமானதாக இல்லை. அதனால் அவர்கள் அறையின் மூலையில் மலம்கழிக்கவேண்டியிருந்தது. பின்னர் தங்கள் சொந்தக் கழிவுகளுக்கு அருகிலேயே படுத்துக்கொள்ளவும் வேண்டியிருந்தது.

பிரிட்டிஷ் காலனித்துவ அரசு அரசியல் கைதிகளை தனித்தனியாக வைத்திருப்பதை உறுதிசெய்ய விரும்பியதால் Quaid-e-solitude (தனிமைச் சிறை) நடைமுறைக்கு வந்தது. செல்லுலார் சிறையில், பல்வேறு குற்றங்களுக்காக தண்டனை பெற்ற, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட கைதிகள், கொடூரமான சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். மாவு இயந்திரங்களை இயக்குவது, எண்ணெய் ஆட்டுவது, கற்களை உடைப்பது, மரம் வெட்டுவது, ஒரு வாரம் வரை கை விலங்கு கால் விலங்கு பூட்டி நிற்கவைப்பது, தனிமைச் சிறை, நான்கு நாள்கள்வரை பட்டினி போடுவது போன்றவை இதில் அடங்கும். எந்தக் கைதியும் மலம் கழிக்க, காவலரின் அனுமதிக்காக மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டும். கைதிகள் அடிமைகளைப்போல வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சிலருக்குப் பைத்தியம் பிடித்துவிடும். மற்றவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர்.

இத்தகைய அட்டூழியங்களை எதிர்த்து கைதிகள் கிளர்ச்சி செய்தனர். 1930-களின் முற்பகுதியில், செல்லுலார் சிறைச்சாலையில் சில கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில்1933-ம் ஆண்டு மே மாதம் கைதிகளின் உண்ணாவிரதம் சிறை நிர்வாகத்தின் கவனத்தை ஈர்த்தது. தாங்கள் நடத்தப்படும் விதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 33 கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் பகத் சிங்கின் கூட்டாளியான மகாவீர் சிங், லாகூர் சதி வழக்கில் தண்டனை பெற்ற மோகன் ராகேஷ், ஆயுதச் சட்ட வழக்கில் தண்டனை பெற்ற கிஷோர் நாமாதாஸ், மோகித் மொய்த்ரா ஆகியோர் அடங்குவர்.

அமித் ஷா
அமித் ஷா

இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பான், 1942, மார்ச் மாதம் அந்தமான் தீவுகளை ஆக்கிரமித்தது. அதன் பிறகு செல்லுலார் சிறையில், ஆங்கிலேயர்கள், ஆங்கிலேய ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படும் இந்தியர்கள், பின்னர் இந்திய சுதந்திரத்தின் உறுப்பினர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். அங்கு வன்முறையில் பலர் பலியாகிக் கொல்லப்பட்டனர். அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் நீரில் மூழ்கினர்; கரையை அடைந்தவர்கள் பசியால் இறந்தனர். ஆறு வாரங்களுக்குப் பிறகு பிரிட்டிஷ் உதவிப் பணியாளர்கள் வந்தபோது, 11 கைதிகள் மட்டுமே உயிருடன் இருந்தனர். அடுத்த நாள், 800 கைதிகள் மக்கள் வசிக்காத மற்றொரு தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் கரையோரம் விடுவிக்கப்பட்டனர். கரைக்கு வந்தவர்கள் ஒவ்வொருவரும் சுடப்பட்டனர். பின்னர் ராணுவ வீரர்கள் வந்து இறந்தவர்களின் உடல்களை எரித்து அடக்கம் செய்தனர்.

1945 அக்டோபரில் ஜப்பானியர்கள் ஐக்கியப் படையிடம் சரணடைந்தனர். மேலும் அந்தமான் தீவுகள் மீண்டும் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. இந்த முறை பாதிக்கப்பட்டவர்களில் ஜப்பானியர்களும் அடங்குவர். இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஜப்பான் சரணடைந்த ஒரு மாதத்துக்குப் பிறகு, ஆங்கிலேயர்கள் 1945, அக்டோபர் 7-ம் தேதி தண்டனைக்காக கட்டப்பட்ட இந்தக் குடியேற்றத்தை அழித்து, கைதிகளை இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலுள்ள சிறைகளுக்கு அனுப்பினர். 1860-ம் ஆண்டு முதல் சுமார் 80 ஆயிரம் இந்தியர்கள் தண்டனையாக அந்தமானுக்கு அனுப்பப்பட்டனர் என்று பதிவுகள் கூறுகின்றன. பெரும்பாலான சுதந்திரப் போராட்ட வீரர்கள் வங்காளம், பஞ்சாப், மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பெரும்பாலும் இந்துக்கள், சீக்கியர்கள், முஸ்லிம்கள் மற்றும் எல்லாச் சாதிகளையும், சமூகங்களையும் சேர்ந்தவர்கள். அதனால்தான் `இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் பலிபீடம்’ என்று 'அந்தமான்' அறிவிக்கப்பட வேண்டும் என்று அன்றும், இன்றும், என்றும் குரல் ஒலிக்கிறது.