Published:Updated:

`விவசாயிகளின் பிரச்னைகளுக்கு முன்னுரிமை!’- சர்ச்சையைத் தொடர்ந்து தலைநகர் திட்டத்தை ஒத்திவைத்த ஜெகன்

ஆந்திராவில் கொண்டுவர இருந்த மூன்று தலைநகரத் திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக, அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

ஜெகன்மோகன் ரெட்டி
ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திர மாநிலத்துக்கு மூன்று தலைநகரங்கள் உருவாக்கப்படவுள்ளதாக, சமீபத்தில் அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்திருந்தார். அதன்படி, ‘விசாகப்பட்டினம் நிர்வாகத் தலைநகரமாகவும், அமராவதி சட்டமன்றத் தலைநகராகவும், கர்னூல் சட்ட (நீதிமன்றம்)த் தலைநகரமாகவும் செயல்படும்’ என அறிவித்தார். ஜெகன்மோகன் ரெட்டியின் மூன்று மாநில திட்டத்துக்குத் தொடக்கம் முதலே எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துவந்தது.

ஆந்திரா
ஆந்திரா

முந்தைய அரசு கொண்டுவந்த தலைநகர் அமராவதி திட்டத்துக்கு, அங்குள்ள விவசாயிகள் தங்கள் நிலங்களை வழங்கியுள்ளனர். தற்போது பொறுப்பேற்றுள்ள புதிய அரசு, மூன்று தலைநகரங்களை உருவாக்கினால், தங்கள் நிலம் திருப்பி வழங்கப்படும். அதனால் தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும். எனவே, அமராவதியைத் தலைநகராக உருவாக்க வேண்டும் என அங்குள்ள விவசாயிகள் பெரும் போராட்டம் நடத்திவருகின்றனர்.

இந்நிலையில், மூன்று தலைநகரத் திட்டம் பற்றி ஆய்வுசெய்ய ஆந்திர அரசால் அமைக்கப்பட்ட சிறப்புக் குழு, நேற்று தன் அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கை குறித்து அமைச்சரவையில் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவில், மூன்று மாநில தலைநகரத் திட்டத்தை தற்போதைக்கு ஒத்திவைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

இந்த விவகாரம் பற்றிப் பேசியுள்ள ஆந்திராவின் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் பெர்னி வெங்கட்ராமையா, “மூன்று தலைநகர் திட்டத்தை ஒத்திவைக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. தலைநகர ஆய்வு நடத்திய ஜி.என். ராவ் குழுவின் அறிக்கையை உயர்மட்டக் குழுவுக்கு அனுப்பி சோதனையிட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

`ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் ஏன்?!' - 6 மாத கால மௌனத்தைக் கலைத்த ஜெகன்மோகன் ரெட்டி

உயர்மட்டக் குழு மீண்டும் ஆய்வு நடத்தித் தரும் அறிக்கையின் அடிப்படையில் அரசு செயல்படும். ஜனவரி முதல் வாரத்தில் இந்த அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தலைநகர விவகாரம் தொடர்பாக, பொங்கல் விழாவுக்குப் பிறகு சட்டமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில், அமராவதியில் நடக்கும் பணிகளை முழுமையாக முடிக்க இன்னும் 1.10 லட்சம் கோடி ரூபாய் அரசுக்குத் தேவைப்படுகிறது. ஆனால், அந்தப் பணத்தை வைத்து அமராவதியை மட்டுமல்லாது பிற மாவட்டங்களையும் மேம்படுத்தலாம் என அரசு கருதுகிறது.

 ஜெகன் மோகன்
ஜெகன் மோகன்

எதிர்க்கட்சிகளின் தூண்டுதலினாலேயே அமராவதியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அமராவதி விவசாயிகளின் நிலம் காக்கப்படும் என அரசு உறுதியளிக்கிறது. எனவே, யாரும் போராட்டத்தில் ஈடுபடத் தேவையில்லை. அமராவதி மட்டுமல்லாது, ஆந்திராவின் அனைத்துப் பகுதிகளையும் மேம்படுத்த வேண்டும் என முதல்வர் நினைக்கிறார். விவசாயிகள் பிரச்னைகளுக்குத் தற்போது முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. அது முடிந்த பிறகு, தலைநகர் தொடர்பாக விவாதிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.