`என் பக்கத்துல வராத; கொரோனா இருக்கு..!' -தவறான புரிதலால் விபரீத முடிவெடுத்த ஆந்திர விவசாயி

ஆந்திராவில் விவசாயி ஒருவர் தனக்கு கொரோனா தாக்கம் ஏற்பட்டுவிட்டதாகக் கருதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
`கொரோனா வைரஸ்’ - இந்தப் பெயர் உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. சீனா இதில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பரவலைத் தடுக்கவும் நோய்க்கான எதிர்ப்பு மருந்து கண்டுபிடிக்கும் வேலைகளையும் சீன அரசு முடுக்கிவிட்டுள்ளது. இந்தநிலையில், ஆந்திராவைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டதாகத் தவறாக எண்ணி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சித்தூரை அடுத்த தொட்டம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் 54 வயதான பாலகிருஷ்ணையா. விவசாயியான இவருக்கு, பிப்ரவரி 1-ம் தேதி முதல் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பிப்ரவரி 5-ம் தேதி மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு அவருக்குப் பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. சிறுநீரகத் தொற்று காரணமாக பாலகிருஷ்ணையாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் கண்டறிந்தனர். அதற்கான மருந்து மாத்திரைகளையும் மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். மேலும், நோய்த் தொற்று மற்றவர்களுக்கு பரவாமல் இருப்பதற்காக மாஸ்க் அணிந்துகொள்ள அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து, திருப்பதியில் உள்ள தன் தங்கை வீட்டுக்குச் சென்று இரண்டு நாள்கள் தங்கியுள்ளார்.
இந்த நிலையில், சீனாவில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் குறித்த செய்திகளை நாளிதழ்கள் மற்றும் டிவி வாயிலாக தெரிந்துகொண்ட பாலகிருஷ்ணையா, தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுவிட்டதாக தவறாக எண்ணியுள்ளார். தன் குடும்பத்தினரையும் கிராம மக்களையும் சந்திப்பதைத் தவிர்த்து வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தன்னால் கொரோனா வைரஸ் பரவி விடக் கூடாது என எண்ணி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நேற்று காலை அவரது வீட்டை வெளிப்பக்கமாக தாழிட்டுவிட்டு அருகில் இருந்த மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இரவு தூங்கச் சென்ற பாலகிருஷ்ணையா, காலையில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததைப் பார்த்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இதுகுறித்துப் பேசிய பாலகிருஷ்ணையாவின் மகன், ``அப்பா எங்களைக் காப்பாற்றுவதற்காக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர், `எங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது' என அஞ்சினார். அவருக்கு இருந்தது சாதாரண காய்ச்சல்தான். சிறுநீரகத் தொற்று காரணமாக அவருக்குக் காய்ச்சல் இருந்தது. மருத்துவர்கள் அவருக்குத் தேவையான மருந்து மாத்திரைகளைக் கொடுத்திருந்தனர். நோய்த் தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக அவரை மாஸ்க் அணியச் சொன்னார்கள். அதை அவர் தவறாகப் புரிந்துகொண்டார்.
செய்தித்தாள்களில் கொரோனா தொடர்பான செய்திகளை அவர் படித்துவிட்டு தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுவிட்டது என எண்ணினார். நாங்கள் அவரிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் கேட்பதாக இல்லை. அவர் அருகே எங்களை அனுமதிக்கவே இல்லை. நான் அவர் அருகே செல்ல முயலும்போது என்னை கற்களைக் கொண்டு தாக்கினார். `என் அருகே வராதே; எனக்கு கொரோனா இருக்கு' என எச்சரித்தார். இப்போது உயிரையும் மாய்த்துக்கொண்டார்” என வேதனையுடன் கூறியுள்ளார்.