Published:Updated:

`வேற வழிதெரியலை... எங்களை அமைதியா விட்டுருங்க!’ - சென்னையிலிருந்து 850 கி.மீ நடந்தே செல்லும் 14 பேர்


ஆந்திர மக்கள்
ஆந்திர மக்கள்

"ரெண்டு நாளா யோசிச்சுப் பார்த்துட்டு, நடந்தே போறதுதான் ஒரே தீர்வுனு நேத்து நைட்டு நடக்க ஆரம்பிச்சுட்டோம். நைட்டு சாப்பிட்டதுதான். காலையில சாப்பிடலை."

உச்சி வெயிலின் அனல் தகிக்கிறது. வியர்வைத் துளிகள் உடலை நனைக்கின்றன. ஆனாலும், தலையிலும் கையிலும் பைகளைச் சுமந்துகொண்டு தங்களுக்குள் பேசிக்கொண்டே சாலையில் வேகமாக நடந்துசென்றுகொண்டிருந்தனர் 14 பேர். அதில், ஏழு பேர் பெண்கள். வெயில், இடைவிடாத நடைப்பயண சோர்வு ஒருபுறம். குடும்பங்களைப் பிரிந்த ஏக்கம் மறுபுறம். அந்தக் கவலை ரேகைகளை அவர்கள் அனைவரின் முகத்திலும் உணர முடிந்தது.

ஆந்திர மக்கள்
ஆந்திர மக்கள்

கொரோனா பாதிப்பால் நாடு முழுக்க ஊரடங்கு நிலவுகிறது. மக்கள் வீடுகளைவிட்டு வெளியில் வரவேண்டாம் என்கின்றன மத்திய, மாநில அரசுகள். ஆனால், இந்த 14 பேரும் எங்கிருந்து எங்கு செல்வதற்கு இவ்வளவு வேகமாகச் சென்றுகொண்டிருக்கின்றனர்? அவர்களிடம் மெதுவாகப் பேச்சுக்கொடுத்தோம். நாம் அரசு அதிகாரிகள் தரப்பைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பதை உறுதிசெய்துகொண்டனர். பிறகு, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை அருகிலுள்ள ஒரு மரத்தடியில் அனைவரும் அமர்ந்தனர். நம்பிக்கையுடன் பேசத் தொடங்கினார் அந்தக் கூட்டத்தில் ஒருவரான லட்சுமணன். தமிழும் தெலுங்கும் கலந்து பேசும் இவரின் குரலில் ஆதங்கமே அதிகம் வெளிப்படுகிறது.

“ஆந்திர மாநிலத்தில் விஜயநகரம் எங்க பூர்வீகம். விவசாயக் கூலி வேலைக்குப் போவோம். ஊர்ல சரியான வேலை இல்லைன்னா, சென்னைக்கு வந்து கிடைச்ச வேலையைச் செய்வோம். சில வாரங்கள் தங்கி வேலை செய்துட்டு ஊருக்குப் போயிட்டு மறுபடியும் வருவோம். எங்க ஊர்ல போதிய மழை பெய்யலை. நிறைய பேரு விவசாயம் செய்றதைக் குறைச்சுக்கிட்டாங்க. கொஞ்சநாள் வேலையில்லாம சும்மா இருந்தோம். இனி வூட்டுலயே இருந்தா, சோத்துக்குக் கையேந்துற நிலை வந்துடும். அதனாலதான் கடந்த ஜனவரி மாசக் கடைசியில சென்னைக்கு வந்தோம்.

சென்னையிலிருந்து ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம் அருகிலுள்ள விஜயநகரம் 850 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. நடந்தே சென்றால் இவர்கள் ஊருக்குச் சென்றடைய ஐந்து தினங்கள் முதல் ஒருவாரம் வரைகூட ஆகலாம்.

நாங்க 14 பேருமே ஒரே ஊருதான். எல்லோருமே சென்னையில ஒரே இடத்துலதான் வேலை செய்தோம். தினமும் காலையில சாப்பிடதுமே, மதியத்துக்குச் சாப்பாடு கட்டிகிட்டு ரோட்டுல போய் நிப்போம். ஏதாச்சும் ஒரு வேலைக்கு எங்களைக் கூட்டிட்டுப்போவாங்க. சாயந்திரமே சம்பளம் கொடுத்து அனுப்பிடுவாங்க. சித்தாள், வீட்டு வேலை, கல் ஏத்தி இறக்குறது, கல் உடைக்கிறதுனு நிரந்தரமில்லாத வேலைகளுக்குப் போவோம். ஒருநாளைக்கு ஐந்நூறு ரூபாய் வரைகூட சம்பளம் கிடைக்கும். ஆனா, தினமும் வேலை இருக்காது” என்பவரை இடைமறித்து, “கடந்த ஒரு மாதமாக எங்கு தங்கியிருந்தீர்கள்?” என்று கேட்டதும் அனைவரும் அமைதியானார்கள். அந்த இடத்தில் பறவைகள் சப்தத்தைத் தவிர வேறு எந்த ஓசையும் கேட்காத நிசப்தம் நிலவியது.

மௌனம் கலைத்த லட்சுமணனின் மனைவி சன்னியாசம்மா, “எங்களுக்கு ரெண்டு பசங்க. இங்கிருக்கிற எல்லோரோட புள்ளைங்களும் ஸ்கூல் படிக்குதுங்க. இப்ப பசங்களுக்குப் பரீட்சை நேரம். மறுபடியும் ஸ்கூல் தொறக்குறப்போ நிறைய செலவுகள் இருக்கும். அதனால கூடுதல் பணத்தேவைக்குக் கொஞ்சநாள் சென்னையிலயே இருந்து வேலை செஞ்சோம். திடீர்னு ஏதோ கொரோனா நோவு வந்திருக்குனு சொல்லி, இருக்கிற இடத்தைவிட்டு எங்கயும் போகக்கூடாதுனு சொல்லிட்டாங்க. ஆதம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷன் பக்கத்துல ஒரு கட்டடத்துல கொஞ்சநாள் வேலை செஞ்சோம். அங்கயே தங்கினோம். தண்ணி கெடைக்கிற இடத்துல குளிச்சுகிட்டோம். உண்மையைச் சொல்லணும்னா, பாதுகாப்பில்லாம பயத்துலதான் நைட்டு தூங்கினோம்.

வெறிச்சோடிய சாலை
வெறிச்சோடிய சாலை

வேலையும் இல்லை. வூடு இல்லாம நாங்க கஷ்டப்பட்டது அதிகாரிங்களுக்குத் தெரியுமா இல்லையானு தெரியலை. யாரும் எங்கள வந்து பார்த்து உதவலை. ஒருநாள்கூட யார்கிட்டயும் நாங்களும் உதவி கேட்கலை. கையில இருக்கிற கொஞ்சம் பணத்துல மளிகைப் பொருள்கள் வாங்கி சமைச்சுச் சாப்பிட்டோம். இருந்த பணமெல்லாம் காலியாகிடுச்சு. யார்கிட்டயும் உதவி கேட்கவும் மனசில்லை. அதனாலதான் எங்க சொந்த ஊருக்குப் போயிடலாம்னு முடிவெடுத்தோம்” என்கிறார் தளர்வான குரலில்.

சென்னையிலிருந்து ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம் அருகிலுள்ள விஜயநகரம் 850 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. நடந்தே சென்றால் இவர்கள் ஊருக்குச் சென்றடைய ஐந்து தினங்கள் முதல் ஒருவாரம் வரைகூட ஆகலாம். பெண்களும் உடன் இருப்பதால், இரவு நேரத்தில் சாலையில் பயணிப்பதும், ஏதாவதோர் இடத்தில் தங்குவதிலும் பாதுகாப்பு சிக்கல்கள் உருவாகலாம். இதையெல்லாம் அந்த மக்களிடம் கூறியதும், விரைவாகப் பதில் வருகிறது லட்சுமணனிடமிருந்து.

யாருமே எங்களை ஊருக்குக் கூட்டிட்டுப்போய் விடப்போறதில்லை. அதனால, எத்தனை நாளானாலும் நடந்தே ஊர் போயிடுற உறுதியில இருக்கோம். போலீஸ்காரங்களும், அதிகாரிகளும் நடந்துபோகக்கூடாதுனு எங்களுக்குத் தொந்தரவு கொடுக்காம இருந்தா மட்டும் போதும்.
லட்சுமணன்

“நீங்க சொல்றதெல்லாம் சரிதான். எங்க பசங்களை ஊர்ல என்னோட அம்மா பார்த்துக்கறாங்க. நாங்க ஒத்தாசைக்கு இல்லாம அவங்க சிரமப்படுறாங்க. இங்க இருக்கிற எல்லாருடைய நிலையும் இதுதான். எங்க கஷ்டத்தைச் சொல்லி அதிகாரிங்ககிட்ட உதவி கேட்கலாம்னு நினைச்சோம். விசாரிச்சுப் பார்த்ததுல, ‘அதிகாரிங்ககிட்ட சொன்னா உங்களையெல்லாம் முகாம்ல தங்க வெச்சுடுவாங்க. ஊருக்கு அனுப்ப மாட்டாங்க’ன்னு கேள்விப்பட்டோம். உடனே ஊருக்குப் போறதைத் தவிரவும் எங்களுக்கு வேறு வழிதெரியலை.

ரெண்டு நாளா யோசிச்சுப் பார்த்துட்டு, நடந்தே போறதுதான் ஒரே தீர்வுனு நேத்து நைட்டு நடக்க ஆரம்பிச்சுட்டோம். நைட்டு சாப்பிட்டதுதான். காலையில சாப்பிடலை. இப்பதான் ஒருத்தர் எங்களுக்குச் சாப்பாடு கொடுத்தார். சாப்பிட்டு கொஞ்ச நேரம் மரத்தடியில உட்கார்ந்துட்டு மறுபடியும் நடக்கறோம். அங்கங்கே தண்ணி மட்டும் வாங்கிக் குடிக்கிறோம். கையில கொஞ்சம் தர்பூசணிப் பழங்கள் இருக்குது. சாயந்திரம் வரைக்கும் சாப்பாடு கெடைக்கலைனா, அதைச் சாப்பிட்டுக்குவோம்.

பகல்லயும், நைட்டுலயும் கொஞ்சநேரம் மட்டும் நம்பிக்கையான இடத்துல தூங்கலாம். ஒவ்வொரு முறையும் தூங்கறப்போ ரெண்டு பேர் பாதுகாப்புக்கு முழிச்சிருக்கணும்னு பேசி வெச்சிருக்கோம். வர்ற வழியில செக் போஸ்ட்டுல போலீஸ்காரங்க, ‘எங்க போறீங்க? இப்படியெல்லாம் தனியா ரோட்டுல நடமாடக்கூடாது’ன்னு சொன்னாங்க. ‘எங்க மாநில எல்லைக்குள் எப்படியாச்சும் போயிடுறோம்’னு கண்ணீரோடு எங்க நிலைமையை எடுத்துச் சொன்னோம். ‘பார்த்துப் பத்திரமா போங்க’ன்னு சொன்னாங்க.

இன்னைக்கு நைட்டுக்குள்ள ஆந்திரா எல்லைக்குள் போயிடுவோம். அப்புறம் எங்களுக்குக் கொஞ்சம் நம்பிக்கை வந்திடும். யாருமே எங்களை ஊருக்குக் கூட்டிட்டுப்போய் விடப்போறதில்லை. அதனால, எத்தனை நாளானாலும் நடந்தே ஊர் போயிடுற உறுதியில இருக்கோம். போலீஸ்காரங்களும், அதிகாரிகளும் நடந்துபோகக்கூடாதுனு எங்களுக்குத் தொந்தரவு கொடுக்காம இருந்தா மட்டும் போதும்” என்ற லட்சுமணன், அங்கிருந்த மக்களுடன் தங்கள் உடைமைகளை எடுத்துக்கொண்டு மீண்டும் நடப்பதற்கு ஆயத்தமானார்.

ஆந்திர மக்கள்
ஆந்திர மக்கள்

“அதிகாரிகளிடம் பேசி உங்களுக்கு உதவி கிடைப்பதற்கு ஏற்பாடுகள் செய்கிறோம்” என்றதும், “அவங்ககிட்ட சொன்னா நாங்க ஊருக்குப் போறதே சிக்கலாகிடும். தயவு செஞ்சு யார்கிட்டயும் சொல்லிடாதீங்க. உங்களுக்குப் புண்ணியமா போகும்” என்று அச்சத்துடன் கூறியவர்கள், வேகமாக நடக்க ஆரம்பித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு