Published:Updated:

`எதிர்முனையில் பேசிய நபர்; இரண்டாவது விமானம்!' -இந்திய அதிகாரிகளால் சீனாவில் தவிக்கும் மணப்பெண்

மணப்பெண் அன்னெம் ஜோதி
மணப்பெண் அன்னெம் ஜோதி

சீனாவில் தங்கியிருக்கும் ஆந்திர இளம்பெண் ஒருவர் `எனக்கு வைரஸ் தொற்று இல்லை, இந்திய அதிகாரிகள் என்னை விமானத்தில் அனுமதிக்கவில்லை' என்று உருக்கமாகப் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை சீனாவில் 361 பேர் உயிரிழந்துள்ளனர். 14,000 பேர் வைரஸ் அறிகுறிகளுடன் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் சீனாவின் பல பகுதிகளுக்கும் பரவியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவைப் பொறுத்தவரை கேரளாவில் இன்று மூன்றாவது நபருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் ஆயிரத்துக்கு அதிகமானோர் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையே, வைரஸ் தொற்று முதலில் பரவிய சீனாவின் வுஹான் மாநிலத்தில் இருந்த 600-க்கும் அதிகமான இந்தியர்களை மத்திய வெளியுறவுத் துறை ஏர்இந்தியா விமானம் மூலம் இரண்டு கட்டங்களாக மீட்டுவந்தது. கடந்த சனிக்கிழமை அனுப்பப்பட்ட முதல் ஏர்இந்தியா விமானத்தில் 324 இந்தியர்களும் நேற்று அனுப்பப்பட்ட 2-வது விமானத்தில் 323 இந்தியர்களும் மீட்கப்பட்டனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பு

மீட்கப்பட்ட அனைவரும் மனேசரில் உள்ள இந்திய ராணுவ மருத்துவ முகாமில் தங்கவைக்கப்பட்டு சிறப்பு மருத்துவச் சிகிச்சை எடுத்து வருகின்றனர். இதற்கிடையே, மீட்புப் பணியின்போது காய்ச்சல் அதிகமாக இருந்ததால் 6 இந்தியர்களை விமானத்தில் அனுமதிக்கவில்லை என்று கூறப்பட்டது.

`அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு குணமான பின்னரே சீனாவிலிருந்து அழைத்து வரப்படுவர்' என்றும் கூறப்பட்டது. இந்தநிலையில், சீனாவில் தங்கியிருக்கும் ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனக்கு வைரஸ் தொற்று இல்லை என்றும் இந்திய அதிகாரிகள் தன்னை விமானத்தில் அனுமதிக்கவில்லை என்றும் உருக்கமாகப் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

`48 மணிநேரத்தில் சீரானது !’- கொரோனா நோயாளியைக் குணமாக்கியதாக அறிவித்த தாய்லாந்து மருத்துவர்கள்

ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த அன்னெம் ஜோதி என்ற பெண் ஹூபே மாகாணத்தில் உள்ள ஐ.டி கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்தமாதம் 18-ம் தேதி அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையே, சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவதால் இந்தியர்களை மீட்க ஏர்இந்தியா விமானம் அனுப்பப்பட்டது. சனிக்கிழமை அனுப்பப்பட்ட விமானத்தில் பயணிப்பதற்காக, ஜோதி தன்னுடன் வேலை பார்ப்பவர்களுடன் நாடு திரும்புவதற்காக வந்துள்ளார். ஆனால் அவருக்குக் காய்ச்சல் இருந்ததால் அவரை விமானத்தில் ஏற்றுவதற்கு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

இந்தியர்கள் மீட்புப் பணி
இந்தியர்கள் மீட்புப் பணி

இதையடுத்து, இந்திய அதிகாரிகளுக்கு உருக்கமான வேண்டுகோள் வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அன்னெம். அதில், ``என்னுடன் வேலை செய்யும் 58 பேரும் நானும் வுஹானிலிருந்து மத்திய அரசு அனுப்பிய முதல் விமானத்தில் பயணிக்க இருந்தோம். ஆனால், எனக்கும் இன்னொருவருக்கும் காய்ச்சல் இருந்ததால் எங்களை முதல் விமானத்தில் அனுமதிக்கவில்லை.

`கொரோனா வைரஸை வென்ற காதல்..!’- பாரம்பர்ய முறைப்படி சீனப் பெண்ணை மணம் முடித்த இந்தியர்

அதேநேரம், `சோதனைக்குப் பிறகு 2-வது விமானத்தில் நீங்கள் செல்லலாம்' என்று அப்போது எங்களுக்குச் சொல்லப்பட்டது. ஆனால், பிற்பகலில் எங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசியவர்,`உங்களுக்குக் காய்ச்சல் இருப்பதால் இரண்டாவது விமானத்தைக்கூட எடுக்க முடியாது' எனத் தெரிவித்தார். சீன அதிகாரிகள், எங்களுக்கு வைரஸ் இருப்பதை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை. ஆனால் நாங்கள் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்பதை நிரூபிக்கத் தயாராக இருக்கிறோம். வேலை, பயணம் மற்றும் மனஅழுத்தத்தின் காரணமாக அந்தச் சூழ்நிலையில் எனது உடல் சில டிகிரி சூடாக இருந்தது.

அன்னெம் ஜோதி
அன்னெம் ஜோதி

ஆனால், தற்போது எனது உடல்நிலை சீராகவே இருக்கிறது. எங்களுக்கு வைரஸ் தொற்றுக்கான எந்தவித அறிகுறிகளும் இல்லை. எங்களை வீட்டுக்கு அழைத்துச் செல்ல உதவவேண்டும். எங்களுக்கு எந்த அறிகுறிகளும் இல்லை என்பதை நிரூபிக்க எப்படிப்பட்ட சோதனைக்கும் தயாராக இருக்கிறோம்" என்று உருக்கமாகக் கூறியுள்ளார்.

`ஜோதிக்கு இந்த மாதம் திருமணம் நடக்கவிருப்பதால் அவர் வீடு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். எனவே அவருக்கு இந்திய அதிகாரிகள் உதவ வேண்டும்' என அவரின் உறவினர்கள் அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.

``கொரோனா வைரஸ் ஒரு பயோ வார் கிடையாது..!" அடித்துக் கூறும் ஆய்வாளர்கள்
அடுத்த கட்டுரைக்கு