Published:Updated:

` வேண்டாம் ஜெகன், 42 வருட அனுபவத்தில் சொல்கிறேன்!’ - 3 தலைநகரங்களால் கொதித்த வெங்கைய நாயுடு

ஆந்திராவுக்கு மூன்று தலைநகரங்கள் தேவையில்லை, அரசின் அனைத்து செயல்களும் ஒரே இடத்தில் நடக்க வேண்டும் எனத் துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு தெரிவித்துள்ளார்.

வெங்கைய நாயுடு
வெங்கைய நாயுடு

ஆந்திர மாநிலத்தில் நீண்ட நாள்களாக நிலவி வரும் பிரச்னையில் தலைநகர் பிரச்னையும் ஒன்று. ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்ட பிறகு அம்மாநிலத்தின் தலைநகராக அமராவதியை அறிவித்து அதை மேம்படுத்தும் பணிகளில் தீவிரம் காட்டினார் முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. ஆனால், ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தலைநகர் தேர்வு தொடர்பாக எதுவும் பேசாமல் இருந்தார். அதேபோல் அமராவதியில் நடந்துவந்த பணிகளும் நிறுத்தப்பட்டன.

அமராவதி திட்டம்
அமராவதி திட்டம்

இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்புதான் முதல்முறையாக ஆந்திராவின் தலைநகர் பற்றி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் ஜெகன். அதில், ``ஆந்திராவுக்கு விரைவில் மூன்று தலைநகரங்கள் உருவாக்கப்படலாம். விசாகப்பட்டினம் நிர்வாக தலைநகரமாகவும் அமராவதி சட்டமன்றத் தலைநகராகவும் கர்னூல் சட்ட (நீதிமன்றம்) தலைநகரமாகவும் செயல்படும்” என்றார்.

ஆந்திராவின் அனைத்து மக்களுக்கும் முன்னுரிமை அளிக்கும் வகையில் 3 தலைநகரங்கள் உருவாக்கப்படவுள்ளதாக அதற்கு விளக்கம் அளித்திருந்தார். முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் இந்த அறிவிப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர எழுந்தன.

`ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் ஏன்?!' - 6 மாத கால மௌனத்தைக் கலைத்த ஜெகன்மோகன் ரெட்டி

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு கருத்து தெரிவித்துள்ளார். நேற்று மாலை விஜயவாடாவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வெங்கைய நாயுடு, ``தலைநகரை மையப்படுத்தித்தான் ஒரு மாநிலத்தின் நிர்வாகம் இருக்க வேண்டும். சட்டமன்றம், நீதிமன்றம், நிர்வாகம் போன்ற அனைத்தும் ஒரே இடத்திலேயே இருக்க வேண்டும். இதை எனது 42 வருட அரசியல் அனுபவத்தின் மூலம் கூறுகிறேன்.

ஜெகன்மோகன் ரெட்டி
ஜெகன்மோகன் ரெட்டி

தலைநகர் விவகாரத்தை அரசியல் அல்லது சர்ச்சைக்குரிய பார்வையில் பார்க்கவேண்டாம். ஆந்திரா இரண்டாகப் பிரிக்கப்பட்ட பிறகு மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு தேசிய நிறுவனங்கள் நிறுவப்பட்டிருப்பதைக் கண்டேன். மாநிலத்தின் வளர்ச்சியைப் பரவலாக்க வேண்டும். ஆனால், எனது உறுதியான கருத்து என்னவென்றால், அனைத்து நிர்வாகச் செயல்பாடுகளும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசு என்னிடம் கேட்டாலும் இதே பதிலையே கூறுவேன். எனவே, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தன் முடிவை மாற்றி ஆந்திராவுக்கு ஒரே தலைநகரை அறிவிக்க வேண்டும்” என்றார்.

தொடர்ந்து அம்மாநிலத்தில் கொண்டுவரப்பட்ட ஆங்கில வழிக்கல்வி தொடர்பான திட்டம் குறித்துப் பேசியவர், ``தாய்மொழிதான் முதன்மையானது. அதில், நான் உறுதியாக உள்ளேன். அனைத்து ஆரம்பப் பள்ளிகளிலும் தெலுங்கு நிச்சயம் கற்பிக்கப்பட வேண்டும். பிரதமர் மோடியும் தாய்மொழியின் முக்கியத்துவத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

வெங்கய்ய நாயுடு
வெங்கய்ய நாயுடு

ஆந்திரா வந்துள்ள வெங்கைய நாயுடுவை, அமராவதியைச் சேர்ந்த விவசாயிகள் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது ஆந்திராவின் தலைநகராக அமராவதியே இருக்க வேண்டும் என்றும் அரசின் திட்டத்துக்காகத் தங்கள் நிலத்தை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அந்த நிலத்தை திரும்ப வழங்கினால் தங்களுக்கு நஷ்டம் ஏற்படும். எனவே, இதில் வெங்கைய நாயுடு தலையிட்டு தங்களுக்குச் சிறந்த முடிவை பெற்றுத்தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.