Published:Updated:

`ஆந்திராவின் நிதிநிலை கவலையளிக்கிறது!' - ஜெகனை எச்சரித்த நிதி ஆயோக் துணைத் தலைவர்

திட்டமிடப்படாத செலவுகளால் ஆந்திராவின் நிதி நிலை மோசமாக உள்ளதாக நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

NITI Aayog meeting
NITI Aayog meeting ( Twitter/@AndhraPradeshCM )

ஆந்திராவின் முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பொறுப்பேற்ற பிறகு தன் மாநில மக்களுக்காக பல்வேறு புதிய திட்டங்களைக் கொண்டுவந்தார். விவசாயிகள், தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு, குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோருக்கு ஊக்கத் தொகை, வீடு தேடி வரும் ரேஷன் பொருள்கள், அதற்காகப் பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு போன்ற பல திட்டங்களைக் கொண்டுவந்தார்.

NITI Aayog meeting
NITI Aayog meeting
Twitter/@AndhraPradeshCM

இந்நிலையில் ஆந்திராவின் பொருளாதார நிலைமை மிகவும் கவலையளிக்கும் விதமாக உள்ளதாக நிதி ஆயோக் துணை தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். நேற்று ஆந்திராவுக்கு வருகை தந்திருந்த ராஜீவ், அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் சில அமைச்சர்களுடன் உயர் மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டார். அமராவதியில் நடந்த இந்தக் கூட்டத்தில்தான் ஆந்திராவின் பொருளாதார நிலை பற்றிப் பேசியுள்ளார் ராஜீவ்.

ஜெகன்மோகன் ரெட்டி vs சந்திரபாபு நாயுடு..! என்னதான் நடக்கிறது ஆந்திராவில்?!

``ஆந்திராவின் வருவாய் பற்றாக்குறை மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. மேலும், இங்கு திட்டமிடப்படாத செலவுகள் அதிகரித்துள்ளன. எனவே, ஆந்திராவில் உணவு பதப்படுத்தும் தொழில், விவசாயம் போன்றவற்றைத் தவிர பிற துறைகளில் முதலீடு செய்வதில் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும். இது தொடர்பாக ஆந்திர அரசுடன் சேர்ந்து பணியாற்ற நிதி ஆயோக் தயாராக உள்ளது” என அவர் கூறியுள்ளார்.

NITI Aayog meeting
NITI Aayog meeting
Twitter/@AndhraPradeshCM

மாநிலங்களுக்கு வழங்கப்படும் மத்திய அரசின் நிதி குறையாமல் பார்த்துக்கொள்ளுமாறு நிதி ஆயோக்கிடம் கோரிக்கை விடுத்துள்ளார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. ``பரம்பரை பரம்பரையாக வரும் சில சிக்கல்களால் நம் மாநிலம் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் குழந்தைகளுக்கான சுகாதாரம், கல்வி உள்கட்டமைப்பு, சத்தான உணவு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான பல திட்டங்களை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம். மாநிலத்தில் கல்வியின்மையைக் குறைக்க பல திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம்.

நாங்கள் மாநிலத்தின் பட்ஜெட்டை மாற்றவில்லை. ஆனால், மாநில முன்னுரிமைகளை மாற்றியுள்ளோம். கல்வி, மருத்துவம் போன்றவற்றின் வளர்ச்சியே எங்கள் முன்னுரிமை. மாநில வருவாய், மத்திய அதிகாரப் பகிர்வு மற்றும் நிதிப் பற்றாக்குறை ஆகியவற்றை அதிகரிக்கவோ மாற்றவோ முடியாது. ஆனால் மத்திய மானியம் மட்டுமே இன்னும் தாராளமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்” என ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார்.