Published:Updated:

டெல்லி: `நாய்களை மீட்ட தன்னார்வலர்கள்!’ - சரமாரியாகத் தாக்கிய மக்கள்

தன்னார்வலர்களால் மீட்கப்பட்ட நாய்கள்
தன்னார்வலர்களால் மீட்கப்பட்ட நாய்கள்

ஊரடங்கு நேரத்தில் தெரு நாய்களை மீட்கும் தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்தவர்களை, பொதுமக்கள் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியாவின் பல மாநிலங்களில் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இந்தக் கடுமையான நேரத்தில் பொதுமக்கள் தங்கள் இயல்பு வாழ்கையை இழந்து தவித்து வருகின்றனர். மக்களுக்கே இந்த நிலையென்றால் சாலையில் திரியும் நாய், பசு போன்ற உயிரினங்களின் பாடு திண்டாட்டம்தான். ஆனால், நாட்டின் பல பகுதிகளில் இருக்கும் விலங்கு தன்னார்வலர்கள் இப்படியாகச் சாலையில் திரியும் விலங்குகளுக்கு ஆதரவளித்து வருகின்றனர். இதேபோல் டெல்லியில் தெருநாய்களுக்கு உதவச் சென்ற தன்னார்வ அமைப்பினரைப் பொதுமக்கள் சரமாரியாகத் தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைரல் வீடியோ
வைரல் வீடியோ

டெல்லியைச் சேர்ந்த நெய்பர்ஹூட் வூஃப் (neighbourhood woof) என்ற தன்னார்வ அமைப்பு தெருநாய்களை மீட்டுப் பராமரித்து வருகிறது. இந்நிலையில் டெல்லியில் ராணி பாக் பகுதியில் உள்ள நாய்களை மீட்பதற்காக இந்த அமைப்பைச் சேர்ந்த சிலர் சென்றுள்ளனர். அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தன்னார்வலர்களைக் கடுமையாகத் தாக்கி, அவர்களின் காரை சேதப்படுத்தியாகப் புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தை விவரித்து தன்னார்வலரான ஆய்ஷா என்பவர் வீடியோவாகப் பதிவு செய்து வெளியிட்டுள்ளார். இதற்குப் பிறகே, இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

`ஆதரவற்றோர் 3,000 பேர்; 200 தன்னார்வலர்கள்; தேடிச் செல்லும் உணவு!’- உதவிக்கரம் நீட்டும் மதுரை எம்.பி

“நாங்கள் நாய்களை மீட்கச் செல்லும்போது தாக்கப்பட்டோம். யாரோ ஒருவர் வந்து எங்கள் ஊழியர்களிடம் மோசமாகப் பேசினார். பல இடங்களிலும் எங்களுக்கு இதே போன்ற நிலையே உள்ளது, இந்த முட்டாள்தனத்தை எதிர்த்து நிற்க முடிவு செய்துள்ளோம். எங்கள் குரல்கள் கேட்கப்பட வேண்டும்” என ஆய்ஷா அந்த வீடியோவில் பேசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிக கவனம் பெற்றுள்ளது. மேலும், காவல்நிலையத்திலும் இந்த வீடியோவை சமர்ப்பித்து தங்களைத் தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தன்னார்வ அமைப்பினர்.

ஆயிஷா
ஆயிஷா

இந்தச் சம்பவம் தொடர்பாக டெல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ``நள்ளிரவு நேரம் என்பதால் தன்னார்வலர்களிடம் உள்ளூர் வாசிகள் விசாரணை செய்துள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே சூடான வாதம் எழுந்து பிறகு, அது சண்டையாக மாறியுள்ளது. அப்போது தன்னார்வலர்கள் தங்கள் காரில் ஏறி அங்கிருந்து தப்பிக்க முயன்றபோது, உள்ளூர் வாசிகள் 3 பேர் அவர்களின் காரை தாக்கியுள்ளனர். இதனால் தன்னார்வலர்களுக்குக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது” என டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு