Published:Updated:

`சந்திரபாபுவின் திட்டத்துக்கு மூடுவிழா!'- ஜெகன்மோகனின் அதிரடியால் கொந்தளிக்கும் நாயுடுவின் மகன்

ராம் பிரசாத்

ஆந்திராவில் உள்ள 204 அண்ணா கேன்டீன்களை தற்காலிகமாக மூட ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

 ஜெகன்மோகன் ரெட்டி
ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திராவில் ஆட்சிப் பொறுப்பேற்றதுமே ஜெகன்மோகன் ரெட்டி தனது அதிரடிகளைத் தொடங்கினார். ஜெகனின் முதல் குறி சந்திரபாபு நாயுடுதான். அதற்கான பணிகளை தனது முதல் நாளில் இருந்தே தொடங்கிவிட்டார். சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலத்தில் சுகிபவ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தலா ரூ.10,000 வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியிருந்தார். அதை ஜெகன்மோகன் ரெட்டி ரத்து செய்தார். விவசாயிகளுக்கு 12,000 வழங்கும் புதிய திட்டத்தை அவர் அறிவித்தார். இப்போது ஜெகன் கையில் எடுத்திருப்பது அண்ணா கேன்டீன்.

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு

தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட அம்மா கேன்டீன்தான் ஆந்திராவில் அண்ணா கேன்டீனானது. தெலுங்கு தேச கட்சியின் நிறுவனரான என்.டி.ஆரை ஆந்திர மக்கள் அன்போடு அண்ணா என அழைப்பார்கள். இதன்காரணமாக சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலத்தில் அண்ணா கேன்டீன் உதயமானது. மாநிலம் முழுவதும் 204 கேன்டீன்கள் தொடங்கப்பட்டன. காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் மலிவு விலையில் உணவு வழங்கப்பட்டு வந்தது.

சந்திரபாபு நாயுடு அரசு கொண்டுவந்த இந்தத் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ள ஜெகன்மோகன் ரெட்டி, 204 கேண்டீன்களையும் தற்காலிகமாக மூட உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக மாநிலத்தில் உள்ள 204 கேன்டீன்களும் மூடப்பட்டுள்ளன. இந்த கேன்டீன்களுக்கு உணவை சப்ளை செய்துவந்த நிறுவனம் அதை நிறுத்தியுள்ளது. இதுகுறித்து தெரியாத ஏழை எளிய மக்கள் கேன்டீன்களை வந்து பார்த்துவிட்டுச் செல்கின்றனர். தினக் கூலிகள், வியாபாரிகள் மற்றும் நடுத்தர மக்களுக்கு இந்த அண்ணா கேன்டீன்தான் உணவு வழங்கி வந்தது. மறுஅறிவிப்பு இல்லாமல் மூடப்பட்டிருப்பது அவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

அண்ணா கேன்டீன்
அண்ணா கேன்டீன்

இதுகுறித்து சந்திரபாபு நாயுடுவின் மகன் ட்விட்டரில் கடுமையாகச் சாடியுள்ளார். அதில் ``முதல்வரே, பசிக்கு அரசியல் தெரியாது. உங்கள் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையால் ஏழைகள் பசியுடன் தூங்க வேண்டுமா?” எனக் காட்டமாகக் கேள்வியெழுப்பியுள்ளார். மீண்டும் அண்ணா கேன்டீன் திறக்கப்படுமா என்ற சந்தேகத்தில் பொதுமக்கள் இருக்கிறார்கள். அரசு தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் தெரிவிக்கப்படவில்லை.