Published:Updated:

திருச்சூர் பள்ளி மாணவனை பாம்பு கடித்தது! - கேரளாவில் மேலும் ஒரு சம்பவம்

மாணவனைக் கடித்த பாம்பை வனத்துறையினர் பிடித்தனர். பள்ளியில் புத்தகங்கள் வைக்கும் அறையில் இருந்து பிடிக்கப்பட்ட அந்தப் பாம்பு அணலிவகையைச் சேர்ந்தது என வனத்துறையினர் தெரிவித்தனர்.

மாணவனை கடித்த பாம்பு
மாணவனை கடித்த பாம்பு

கேரள மாநிலத்தில் பள்ளி மாணவர்களைப் பாம்பு கடிக்கும் சம்பவம் தொடர்வதால் பெற்றோர் பீதியில் உள்ளனர். கடந்த ஐந்து நாள்களுக்கு முன்பு வயநாட்டில் பாம்பு கடித்து ஐந்தாம் வகுப்பு மாணவி இறந்த நிலையில், திருச்சூர் மாவட்டத்தில் ஐந்தாம் வகுப்பு மாணவனை பாம்பு கடித்த சம்பவம் பெற்றோரையும் ஆசிரியர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

ஷஹலா ஷெரின்
ஷஹலா ஷெரின்

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் பத்தேரி அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்த மாணவி ஷஹலா ஷெரினை கடந்த 22-ம் தேதி பாம்பு கடித்தது. பள்ளி வகுப்பறையில் வைத்து பாம்பு கடித்த நிலையில், மாணவியை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்குக் காலதாமதம் ஏற்பட்டதால் அவர் உயிரிழந்தார். இதையடுத்து ஆசிரியர்கள், சரியாக சிகிச்சை அளிக்காத மருத்துவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கேரளத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் ஓட்டைகளை அடைக்கவும், புதர்களை அழிக்கவும் அரசு துரித நடவடிக்கை எடுத்தது.

`வகுப்பறையில் ஏற்பட்ட காயம்; அலட்சிய ஆசிரியர்கள்!’- 5ம் வகுப்பு சிறுமியின் உயிரைப் பறித்த பாம்பு

இந்த நிலையில் திருச்சூர் மாவட்டம் சாலக்குடி சி.எம்.ஐ கார்மல் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஜெரால்டை பாம்பு கடித்துள்ளது. பள்ளி வளாகத்தில் நின்றிருந்த மாணவன் ஜெரால்டை பாம்பு கடித்துள்ளது. இதுகுறித்து ஆசிரியர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, மாணவர் அங்கமாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

மாணவனைக் கடித்த பாம்பு
மாணவனைக் கடித்த பாம்பு

மாணவர் உடலில் பாம்பு கடித்ததற்கான அறிகுறிகளும் காயமும் உள்ளன. ஆனால், உடலில் விஷம் பரவவில்லை. மாணவனின் உடல்நலம் நன்றாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே மாணவனைக் கடித்த பாம்பை வனத்துறையினர் பிடித்தனர். பள்ளியில் புத்தகங்கள் வைக்கும் அறையில் இருந்து பிடிக்கப்பட்ட அந்தப் பாம்பு அணலி வகையைச் சேர்ந்தது என வனத்துறையினர் தெரிவித்தனர்.

`2 நிமிடப் பரிசோதனை; 50 ரூபாய் செலவு!' -பாம்பு கடியின் அடையாளம் கண்டறியும் கேரளாவின் புதிய கருவி

பாம்பு கடித்த மாணவனின் தந்தை ஷைஜன் கூறுகையில், "என் மகனை பாம்பு கடித்தது குறித்து எனக்கு ஆசிரியர்கள் தகவல் சொன்னார்கள். நான் 15 நிமிடத்தில் பள்ளிக்குச் சென்றுவிட்டேன். அதன்பிறகுதான் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். வேறொன்றும் சொல்வதற்கில்லை" என்றார்.