Published:Updated:

`நள்ளிரவில் வந்த மர்மநபர்கள்; போராட்டக் களத்தில் பதற்றம்!’- ஜாமியாவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு

முதலில் ஜாமியா பல்கலைக்கழகத்தின் 5-வது வாயில் அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதன் பின்னர் முதலாவது வாயில் அருகே துப்பாக்கிச் சூடு நடந்தது.

ஜாமியா பல்கலைக்கழகத்தில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் இன்னும் தொடர்கிறது. டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் ஒருவாரத்தில் நடைபெறவுள்ள நிலையில், டெல்லியில் நடைபெறும் இந்தப் போராட்டம் மத்தியில் ஆளும் பா.ஜ.க-வுக்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

ஜாமியா போராட்டம்
ஜாமியா போராட்டம்

டெல்லி தேர்தலில் பா.ஜ.க-வினர் தொடர்ச்சியாக ஜாமியாவில் நடைபெறும் போராட்டங்களையும் போராட்டக்காரர்களையும் விமர்சித்துப் பேசி வருகின்றனர். ஆனால், எதைப் பற்றியும் கவலைப்படாமல் தொடர்ச்சியாக ஜாமியாவில் மாணவர்களும் இந்தச் சட்டத்துக்கு எதிரான மக்களும் தினமும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த மாதம் 30-ம் தேதி ஜாமியா மிலியா பல்கலைக்கழக வளாகத்துக்குள் கையில் துப்பாக்கியுடன் நுழைந்த மர்மநபர் ஒருவர், ``நீங்கள் கேட்கும் சுதந்திரத்தை உங்களுக்கு வழங்குகிறேன்” என்று சொன்னபடி போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இந்தத் திடீர் தாக்குதலில் ஒரு மாணவருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் துப்பாக்கியுடன் வந்த அந்த நபரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் அவர், 17 வயதே ஆன சிறுவன் எனத் தெரிய வந்தது.

`ஜாமியாவுக்குத் துப்பாக்கியுடன் வந்த பள்ளி சிறுவன்!' -அதிர்ச்சி கொடுத்த முகநூல் பதிவுகள்
Jamia Firing
Jamia Firing
The News Learn

இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நேற்று இரவு மீண்டும் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. நள்ளிரவில் இந்தச் சம்பவம் நடைபெற்றது. அப்போது போராட்டக் களத்தில் இருந்த மாணவர் ஒருவர் பேசுகையில், ``முதலில் பல்கலைக்கழகத்தின் 5-வது வாயில் அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதன் பின்னர் முதலாவது வாயில் அருகே துப்பாக்கிச் சூடு நடந்தது. இந்தத் தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்ற போதிலும் இந்தச் சம்பவம் போராட்டக்காரர்கள் மத்தியில் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியது” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜாமியாவில் பாதுகாப்பில் இருந்த காவலர்கள் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாகப் பேசுகையில், ``6-வது மற்றும் முதலாவது வாயில் அருகே துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்ததாக கூறப்படுகிறது” என்றனர். இந்த நிலையில், போராட்டக்காரர்கள் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உடனடி நடவடிக்கை கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் காவல்துறையினர், `புகார் கொடுங்கள், சட்டப்படி நடவடிக்கை எடுக்கிறோம்’ என தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் புகார் அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.

காவல் நிலையத்தில் போராட்டக்காரர்கள்.
காவல் நிலையத்தில் போராட்டக்காரர்கள்.

இந்த விவகாரம் தொடர்பாக பேசிய கூடுதல் டிசிபி, ``இந்த விவகாரம் தொடர்பாக சம்பவ இடத்துக்கு உடனடியாக காவல்துறையினர் சென்று ஆய்வு நடத்தினர். அங்கு குண்டுகளின் காலி ஷெல்கள் எதுவும் கிடைக்கவில்லை. துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சொல்லப்படும் நபர்கள் குறித்து இருவிதமான கருத்துகள் எங்களுக்கு வந்துள்ளது. சிலர் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் இந்தச் சம்பவத்தை நடத்தியதாக சொல்கிறார்கள். மற்றொரு தரப்பினரோ, காரில் வந்த இருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகச் சொல்கிறார்கள். விசாரணைக்குப் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். டெல்லி ஜாமியாவில் அடுத்தடுத்து நடக்கும் இதுபோன்ற சம்பவங்களால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு