Published:Updated:

`26 லட்சம் ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனை’ - ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு

ஜெகன்மோகன் ரெட்டி
ஜெகன்மோகன் ரெட்டி

தெலுங்கு வருடப் பிறப்பு அன்று ஆந்திராவில் 26 லட்சம் மக்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது.

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நேற்று அம்மாநிலத் தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதன் முடிவில் பல்வேறு முக்கிய விஷயங்களுக்கு ஆந்திர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கூட்டம் முடிந்த பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த அம்மாநில செய்தித்துறை மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் பெர்னி வெங்கட் ராமையா, ``ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு 26 லட்சம் ஏழை மக்களுக்கு இலவசப் பட்டா வழங்க முடிவெடுத்துள்ளது. இதற்கு அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கிவிட்டது.

ஜெகன்மோகன் ரெட்டி
ஜெகன்மோகன் ரெட்டி

மார்ச் 25-ம் தேதி யுகாதி தினத்தன்று 43,141 ஏக்கர் நிலம் மக்களுக்கு வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. அன்றைய தினமே பட்டாக்கள் அனைத்தும் பயனாளிகளின் பெயரில் பதிவு செய்யப்படும். அனைத்துக் காலனிகளுக்கும் `ஒய்.எஸ்.ஆர் ஜெகன் அண்ணா’ காலனிகள் என்று பெயர் சூட்டப்படும்.

மொத்தமுள்ள 43,141 ஏக்கர் நிலத்தில் 26,976 ஏக்கர் அரசு நிலம் மற்றும் 14,164 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம் தவிர வேறு எந்த மாவட்டத்திலும் நிலம் திரட்டும் முறை செயல்படுத்தப்படவில்லை, கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கான பணம் அந்தந்த மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வழங்கும் இந்த நிலத்தைத் தேவைப்பட்டால் ஐந்தாண்டுக்குள் பயனாளிகள் அடமானம் வைத்துக்கொள்ளவும் அனுமதி வழங்கப்படும். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நிலத்தை சட்டப்பூர்வமாக விற்கும் உரிமையும் வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

ஜெகன்மோகன் ரெட்டி
ஜெகன்மோகன் ரெட்டி

இந்த நிலம் வழங்குவது தொடர்பான வேலைகள் அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்திலும் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் அனைவருக்கும் ஒரே நாளில் பத்திரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் பத்திரப் பதிவு மற்றும் அதற்கான ஆவணங்கள் சரிபார்த்தல் நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் நடப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு